‘இந்த அர்ப்பணிப்பு தேசிய விருதைப் பெற்றுத் தரும்’

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இயக்கி உள்ள படம் ‘மதிமாறன்’.

தொடக்கத்தில் ‘காம்ப்ளக்ஸ்’ என்றுதான் தலைப்பு வைத்து இருந்தனர். பிறகு மாற்றிவிட்டனர்.

இரட்டையர்களாகப் பிறந்த அக்காள், தம்பியைப் பற்றிய கதை இது. அக்காளைவிட தம்பி உயரம் குறைந்தவராகப் பிறந்துவிடுகிறார்.

இதனால் தொடக்கம் முதலே அவருக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மனதில் நிலைத்துவிடுகிறது.

ஒரு கட்டத்தில் இதை முழுமையாகப் புரிந்துகொள்ளும் அக்கா, தன் தம்பியின் தாழ்வு மனப்பான்மையை எப்படிப் போக்குகிறார் என்பதுதான் ‘மதிமாறன்’ படத்தின் கதை.

“திரைப்படங்களிலும் உருவக்கேலி தொடர்பான வசனங்கள் இடம் பெறுவதும் அவற்றை வைத்து ரசிகர்களைச் சிரிக்க வைப்பதும் என்னை வருத்தமடையச் செய்கிறது.

“மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் படங்களிலும்கூட உருவக் குறைபாடு உள்ளவர்கள்தான் வில்லனாக சித்திரிக்கப்படுகின்றனர்.

“உருவக்குறைபாடு உள்ளவர்கள்தான் தவறானவர்கள், வில்லன்கள் என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் திணிக்கப்படுகிறது. உருவ அரசியலை அடுத்த தலைமுறைக்கும் கடத்துகிறோம் என்பதை நாம் அனைவருமே மறந்துவிடுகிறோம்,” என்று ஆதங்கப்படுகிறார் இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன்.

இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார் இவானா.

பாலா இயக்கத்தில் உருவான ‘நாச்சியார்’ படத்தில் நடித்தபோது இவானா பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாராம். அப்போது பாலாவிடம் மந்த்ரா வீரபாண்டியன் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இருவரும் அண்ணன், தங்கையைப் போல் பாசமாகப் பழகியதாகவும் அந்த அன்புதான் இருவரையும் தற்போது மீண்டும் இணைய வைத்துள்ளது என்றும் சொல்கிறார் இவானா.

“இயக்குநர் என்னிடம் கதையைச் சொன்னதும் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். ஏனெனில் நானும் என் தம்பியும் இரட்டையர்களாகத்தான் பிறந்தோம். அதனால் இந்தக் கதை என் மனதிற்கு நெருக்கமான ஒன்றாகிவிட்டது.

“உண்மையில் என் தம்பி என்னைவிட கொஞ்சம் உயரமானவர். உயரப் பிரச்சினை குறித்து அனுபவ ரீதியில் பல கட்டங்களைக் கடந்து வந்திருப்பதால் இயல்பாக நடிக்க முடிந்தது,” என்கிறார் இவானா.

“அவருக்கு கதை குறித்த நல்ல புரிதல் இருந்ததால், அனைத்துக் காட்சிகளையும் எளிதில் படமாக்கினோம். இந்தப் படத்திற்காக இவானா எந்த அளவுக்கு மெனக்கெட்டுள்ளார் என்பது படக்குழுவுக்குத்தான் தெரியும்.

“அவரது அக்கறையும் அர்ப்பணிப்பும் நிச்சயம் அவருக்கு இந்திய அளவில் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்றுத் தரும் என நம்புகிறேன். அந்த விருதைப் பெறுவதற்கு முழுத் தகுதி உள்ளவர் இவானா.

“இவானாவின் தம்பியாக யாரை நடிக்க வைப்பது என்று மிகவும் யோசித்தோம். அவரைவிட உயரம் குறைவாக உள்ள ஒருவர் தேவைப்பட்டார். அப்போதுதான் வெங்கட் செங்குட்டுவன் குறித்து தெரிய வந்தது.

“சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தொடர்பான ஒரு காணொளிப்பதிவு சமூக வலைதளங்களில் பதிவானது. அதில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில் அருமையாக நடனமாடி இருப்பார் வெங்கட் செங்குட்டுவன்.

“இயக்குநர் பாலாவிடம் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வந்தார். என்னுடனும் தொடர்பில் இருந்தார். ‘அயலான்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வேற்றுக்கிரகவாசி உருவத்துக்குள் இருப்பது இவர்தான்.

“’மதிமாறன்’ படம் இவானாவுக்கு மட்டுமல்ல, வெங்கட் செங்குட்டுவனுக்கும் நிச்சயம் பெரும் திருப்புமுனையாக அமையும்.

“இந்தப் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் அஞ்சல் ஊழியராக நடித்துள்ளார். ஒரு தந்தை கதாபாத்திரத்தில் அச்சு அசலாக வாழ்ந்து காட்டியுள்ளார் எனலாம்.

“அவர் எப்போதுமே ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். இந்தப் படத்தின் முதுகெலும்பு அவர்தான் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

“கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் ’உல்லாசம்’, ’காதலா காதலா’, ’டும் டும் டும்’ ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

“இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்துமே ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக அமையும் என நம்புகிறேன்,” என்கிறார் இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!