இளன்: அர்ப்பணிப்பு மிகுந்த கலைஞன் கவின்

‘டாடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் நடிக்கும் புதிய படம் ‘ஸ்டார்’.

‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் உருவாகிறது இப்படம்.

“கனவை நோக்கிப் பயணம் செய்யும் ஓர் இளைஞனின் கதை இது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அவ்வாறு கனவு காண்பவர்கள் இந்தப் படத்தின் கதையை தங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் எல்லாம் சரியாக இருப்பதாக நினைத்துக்கொள்வார்கள்.

“முழுநீள குடும்பச் சித்திரமாக, தேவையற்ற காட்சிகள் இல்லாத நல்ல படைப்பாக இந்தப் படம் உருவாகி உள்ளது,” என்கிறார் இயக்குநர் இளன்.

இவர் சொல்வதற்கு ஏற்ப தணிக்கைக் குழுவினர் இப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், இது கவினை மனதில் வைத்து எழுதப்பட்ட கதையல்ல என்றும் இயக்குநர் கூறுகிறார். வழக்கமாக இவர் தன் மனதில் தோன்றிய கதையை எழுதிவிடுவாராம். எந்த ஒரு கதாநாயகனையும் மனதில் வைத்து எழுத மாட்டாராம்.

பின்னர் தன் கதைக்குப் பொருத்தமானவர் என்று யாரை கருதுகிறாரோ அந்த நாயகனை அணுகி கதை சொல்ல முயற்சி செய்வாராம்.

“அந்த வகையில் இந்த ‘ஸ்டார்’ படக்கதையை எழுதி முடித்ததும் கவின்தான் பொருத்தமான கதாநாயகனாக இருப்பார் எனத் தோன்றியது.

“அந்தச் சமயத்தில்தான் ‘டாடா’ படம் வெளியாகி இருந்தது. கவினுடைய நடிப்பு என்னைக் கவர்ந்தது. அதேபோல் நான் சொன்ன கதை அவருக்குப் பிடித்திருந்தது. அதனால் தயக்கமின்றி கூட்டணி அமைத்தோம்,” என்கிறார் இளன்.

நாயகன் கவினைப் பற்றி பேசத் தொடங்கினால் பாராட்டுகளைக் குவிக்கிறார். கவின் தன்னுடைய வேலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளும் கலைஞன் என்றும் சின்னச்சின்ன உணர்வுகளையும் முக பாவனைகளையும்கூட கச்சிதமாக வெளிப்படுத்துவார் என்றும் சொல்கிறார்.

“இதுபோன்ற சில காரணங்களால் பெரிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும் உணர்வை நம் மனதில் ஏற்படுத்துவார் கவின்.

“15 ஆண்டு கால கேமரா அனுபவம் உள்ளவர். அதனால் சினிமாவைப் பற்றிய புரிதல் அதிகம் உள்ளவர். இந்தப் படத்திற்கான சில பணிகளில் என்னுடன் இணைந்து செயல்பட்டார்.

“என் மனதில் இருப்பதை அவர் தன் மனதில் ஏற்றிக்கொண்டார். இதைத் தவிர இந்தப் படத்திற்காக அவர் தனிப்பட்ட வகையில் தம்மைத் தயார்படுத்திக் கொண்டார் என்பதையும் படப்பிடிப்பின்போது என்னால் உணர முடிந்தது. ஏனெனில், அந்த அளவுக்கு அவரால் சிறந்த நடிப்பை வழங்க முடிந்தது,” என்கிறார் இயக்குநர் இளன்.

இப்படத்தின் கதாநாயகி அதிதி போகன்கர், இந்தி யில் சில படங்களில் நடித்துள்ளாராம்.

பெண் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தும் ‘ஷி’ என்ற இணையத் தொடரிலும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக அனைத்து தரப்பினரும் அதிதியைப் பாராட்டி உள்ளனர்.

“அதிதிக்கு மேடை நாடகங்களில் நடித்த அனுபவமும் உண்டு. இந்தப் படத்தில் தனக்கான கதாபாத்திரத்தின் தன்மையை நூறு விழுக்காடு புரிந்துகொண்டு அபாரமாக நடித்துள்ளார்.

“படத்தின் மற்றொரு நாயகி ப்ரீத்தி முகுந்தன். இந்தப் படத்தில்தான் அறிமுகமாகிறார். அடிப்படையில் ப்ரீத்தி நல்ல நடனக் கலைஞர். விளம்பர, ஃபேஷன் துறையில் பரவலாக அறிமுகமானவர்,” என்கிறார் இளன்.

ப்ரீத்தியை இன்ஸ்டகிராமில் பெரும் கூட்டமே பின்தொடர்கிறது. தனி இசைத்தொகுப்புகளில் நடித்துள்ளார்.

இப்படத்தில் மலையாள நடிகர் லால் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம். ஒரு வகையில் படத்தின் இன்னொரு கதாநாயகன் என்றும்கூட அவரைக் குறிப்பிடலாம் என்கிறார் இயக்குநர் இளன்.

“கால்ஷீட் இல்லாத போதும், இப்படத்தின் கதை பிடித்துப் போனதால், எப்படியோ நாள்களை ஒதுக்கி நடித்தார்.

“யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுவனை எனது வழிகாட்டி என்றும் சொல்லலாம். அவர் எனக்காக எப்போதுமே சிறப்பான பாடல்களைக் கொடுப்பார் என உறுதியாக நம்புகிறேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை,” என்கிறார் இயக்குநர் இளன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!