‘இது இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்களின் கதை’

முதன்முறையாக கிராமத்து இளையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

இதற்கு ஏற்றாற்போல் அவரை மாற்றுவதற்கு அதிகம் சிரமப்படவில்லை என்கிறார் ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.

தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ப அவரே தன்னை மாற்றிக் கொண்டதாகப் பாராட்டுகிறார் இயக்குநர்.

“அடுத்த வீட்டுப் பையன் மாதிரி என்று சொல்வோம் அல்லவா, அதற்கேற்ப காட்சியளிப்பார் ஹரிஷ். தனக்கான வேடத்தை திரையில் எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவருக்கென ஒரு வழிமுறை உள்ளது. அதேசமயம் நாம் சொல்வதையும் கேட்டுக்கொண்டு, கச்சிதமாக நடித்துள்ளார்.

“இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்கள், அவர்களுடைய நட்பு, உறவுகள் என்று கதை நகரும். ஹரிஷைப் போலவே, மற்றொரு கதை நாயகனான தினேஷும் இதற்குப் பங்களித்துள்ளார். இருவரையுமே பாராட்ட வேண்டும்,” என்கிறார் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.

ஹரிஷுக்கு ஜோடியாக ‘வதந்தி’ இணையத் தொடரில் நடித்த சஞ்சனாவும் தினேஷுக்கு ஜோடியாக ‘சாட்டை’ படத்தில் நடித்த ஸ்வஸ்திகாவும் நடித்துள்ளனர்.

காளி வெங்கட், பாலசரவணன், டி.எஸ்.கே உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

“தினேஷ் பிரமாதமான நடிகர். இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகிய இருவரிடமும் பாடம் படித்தவர். அவரை எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும்.

“இந்தப் படத்தில் ஜனரஞ்சகமான வேடத்தில் வாழ்ந்து காட்டுகிறார். திருமணமான பிறகும் மனைவிக்குத் தெரியாமல் கிரிக்கெட் விளையாடுவது, பிறகு மனைவியிடம் மாட்டிக்கொண்டு திட்டு வாங்குவது, கிரிக்கெட் திடலுக்கு மனைவியே நேரில் வந்து அவரை இழுத்துப்போவது என்று பல காட்சிகளில் அவரது நடிப்பு இயல்பாகவும் ரசிக்கும்படியும் இருக்கும்.

“ஒவ்வொரு படமும் ஏதோ ஒருவகையில் நம் மனதைக் கவரும். ஒரு படத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அதை ரசிக்கத் தொடங்குவோம்.

“அந்தக் குறிப்பிட்ட காட்சியை படத்தின் தொடக்கத்திலேயே ரசிகர்களால் அடையாளம் காண முடியும் என நம்புகிறேன். அனைத்து தருணங்களிலும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் நமது விருப்பமாக இருக்கும்.

“எந்தத் துறையாக இருப்பினும் புதியவர்களுக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கைதான் மூலதனம். என் ‘லப்பர் பந்து’, அப்படியான நம்பிக்கையை அளிக்கும் படம்தான்,” என்று எதிர்பார்ப்புகளுடனும் நம்பிக்கையுடனும் பேசுகிறார் தமிழரசன் பச்சமுத்து.

தனது முதல் படம் ‘களவாணி’ படத்தைப் போன்று மண் சார்ந்த கதையாக இருக்கும் என்று குறிப்பிடுபவர், நடப்பு வாழ்வியலோடும் பொருந்தித்தான் கதை நகரும் என்கிறார்.

“தமிழ்நாட்டில் கோடை காலம் வந்துவிட்டால் போதும். சிறுவர்களும் இளையர்களும் நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

“1990களைச் சேர்ந்த பசங்களுக்கு கிரிக்கெட்தான் உயிருக்கு உயிரான விளையாட்டு. அப்படிப்பட்ட இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இடையே ஏற்படும் ‘ஈகோ’ மோதல், அதனால் ஏற்படும் விளைவுகள், சிக்கல்களில் இருந்து இருவரும் எப்படி மீண்டு வருகிறார்கள் என அனைத்தையும் காட்சிப்படுத்தி உள்ளோம்.

“அதற்காக கிரிக்கெட் மட்டுமே இந்தப் படத்தை ஆக்கிரமித்திருக்காது. உணர்வுபூர்வமான சில அம்சங்களும் உள்ளன.

“ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் அவருக்கும் இடம் உள்ளது என்பது பளிச்சென்று தெரிகிறது.

“அதிரடி, மெலடி என்று அனைத்து வகை பாடல்களையும் வழங்குகிறார். ஒவ்வொன்றிலும் அவரது தனித்துவம் தெரிகிறது,” என்கிறார் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.

படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் இளையர்களை நிச்சயம் கவரும் என்றும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகிறது என்றும் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!