சிங்கப்பூர் ரசிகையின் வேண்டுகோளை ஏற்றார் இசையமைப்பாளர் யுவன்

சிங்கப்பூர் தாயார் ஒருவரின் நெகிழ்ச்சியான வேண்டுகோளை ஏற்று, அவ்வாறு செயல்பட முயல்வதாக உறுதியளித்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

யுவன் இசைக் கச்சேரியின் பத்திரிகையாளர், ரசிகர்கள் சந்திப்பில், “சிறப்புத் தேவைகளுடைய தனது மகனிடம் பேசும் ஒரு வழியாகவே யுவனின் இசை அமைகிறது. அப்படிப்பட்ட இசையைப் படைத்ததற்கு நன்றி ” என ஒரு தாய் குறிப்பிட்டு பேசியது யுவன் உட்பட மொத்த அரங்கத்தையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கடந்த வியாழக்கிழமையன்று மாலை சிங்கப்பூர் ‘பார்க் ராயல்’ ஹோட்டலில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட திருவாட்டி. சுஹாசினி முரளி, 48, யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த ‘ராம்’ திரைப்படத்தின் ‘ஆராரிராரோ’ பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்பொழுதும், அது பேசவும் கேட்கவும் முடியாத தன் 22 வயது மகன் சந்தீப் முரளியின் பாசத்தை தனக்கு உணர்த்துவதாகவும் அதற்கு நன்றி தெரிவிக்கவே தான் வந்ததாகவும் கூறினார்.

மேலும், இது போன்ற பாடல்களை படங்களில் இசையமைக்க வாய்ப்பு கிட்டாவிட்டாலும் தனிப்பாடல்களாக இசையமைத்தால் தன்னைப் போன்ற பெற்றோருக்கு மகிழ்ச்சியளிக்கும் என உணர்ச்சிப்பெருக்குடன் வேண்டுகோள் விடுத்தார்.

இதனைக் கேட்ட யுவன், “என் பாடலை இவ்வாறு அணுகுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. உங்கள் வேண்டுகோளுக்கிணங்க தனிப்பாடல் வெளியிட முயல்கிறேன்,” எனவும் உறுதியளித்தார்.

‘மேஸ்ட்ரோ புரொ­டக்­‌ஷன்ஸ்’, ‘இஷ்­தாரா ஜுவெல்­லரி’ இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘ஹாய் ஒன் யுவன்’ என்னும் நேரடி இசை நிகழ்ச்சி வரும் சனிக்கிழமையன்று (அக்டோபர் 14) நடைபெற உள்ளது.

ஆண்ட்ரியா, ஹரிசரண், திவாகர், ராகுல் நம்பியார், சாம் விஷால், பிரேம்ஜி, பிரியங்கா என பல பிரபல பாடகர்கள் கலந்துகொள்ளும் யுவனின் இந்நிகழ்ச்சி, 360 டிகிரி வடிவமைப்பிலுள்ள சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெறுகிறது. அதனை ஏறத்தாழ 12,000 பேர் கண்டுகளிக்க உள்ளனர்.

சிறுவயதில் பலமுறை விடுமுறைக்கு வந்து சென்ற இடமென்பதால் தன் மனத்துக்கு நெருக்கமாகிவிட்ட சிங்கப்பூரில், முதன்முறையாக இசைக் கச்சேரி நடத்துவது தனி மகிழ்ச்சி என்று குறிப்பிட்டார் யுவன்.

தன் தந்தை இசைஞானி இளையராஜாவிடம் கற்ற பாடங்கள், தனக்கென தனித்துவம் பதிக்க எடுத்த முயற்சிகள், அனுபவங்கள், அண்மையில் வெளியானவற்றில் தனக்குப் பிடித்த பாடல்கள் எனப் பலவற்றையும் பகிர்ந்துகொண்டார் யுவன்.

அத்துடன், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று ‘பாணா காத்தாடி’ திரைப்படத்தில் வந்த ‘தாக்குதே கண் தாக்குதே’ எனும் பாடலிலிருந்து சில வரிகளையும் அவர் பாடினார்.

திரைத்துறையில் இருக்கும் பல இசையமைப்பாளர்களிடமும் தனக்கிருக்கும் மதிப்பை சுட்டிக்காட்டிய அவர், ஏ ஆர் ரகுமான், அனிருத் உள்ளிட்ட பலரின் இசையையும் விரும்பி கேட்பதாகச் சொன்னார்.

இளையராஜா, அனிருத், சித்ஸ்ரீராம் உள்ளிட்ட பல இசைப் பிரபலங்ளைத் தொடர்ந்து முதன்முறையாக யுவனின் இசை நிகழ்ச்சியை சிங்கப்பூரில் நடத்துவது பெருமை எனக் குறிப்பிட்டார் ‘மேஸ்ட்ரோ புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநரும், ‘இஷ்­தாரா ஜுவெல்­லரி’ இயக்குநருமான பார்த்திபன் முருகையன்.

அண்மையில் கனடாவில் சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து இங்கு நடைபெறும் இசை நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு மிகச் சிறந்த இசை அனுபவத்தைத் தரும் ஒரே குறிக்கோளோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து யுவனும் அவருடைய மனைவி ஜஃப்ரூன் நிஷாவும் ஏற்பாட்டாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமாக பதிலளித்தனர்.

சிங்கப்பூரில் யுவனின் விருப்ப உணவான ‘சில்லி கிராப்பை’ நியூட்டன் உணவங்காடியில் சுவைத்ததையும், ஜஃப்ரூன் சிங்கப்பூருக்கு முதன்முறை வந்துள்ளதால் கச்சேரி முடிந்தபின் பல இடங்களைச் சுற்றிப்பார்க்க இருப்பதாகவும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

தனது இசைப்பயணத்தில் பெரிதும் உறுதுணையாக இருக்கும் தன் மனைவிக்கு தனது வெற்றியை சமர்ப்பிப்பதாகத் தெரிவித்த யுவன், மாபெரும் இசை மேதையின் மகனாகத் திரைத்துறைக்குள் நுழைந்தாலும், தனக்கென தனி முத்திரையைப் பதிக்க வேண்டுமென்கிற எண்ணம் வேரூன்றி இருந்ததாகக் குறிப்பிட்டார்.

7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என தனது இசைப்பயணத்தின் தொடக்கத்தில் இயக்குநர்கள் சிறந்த வாய்ப்புகளை அளித்ததும், வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்தியதும், இறைவன் அளித்த அருட்கொடையும் அதனைத் சாத்தியப்படுத்தியதாக யுவன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!