போர் நிறுத்த வாக்கெடுப்பில் வாக்களிக்காததற்கு இந்தியா விளக்கம்

புதுடெல்லி: இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் தொடர்கிறது. இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. காஸா பகுதியில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இந்த தாக்குதலை இஸ்ரேல் ஒத்திவைத்துள்ளது.

இருப்பினும் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. 

இந்நிலையில் ஐநா பாதுகாப்பு மன்றம் அவசரமாகக்கூடியது. இதில் இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் தொடர்பான விவாதங்கள் எழுந்தன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ரஷ்யாவும் தீர்மானங்களை முன்வைத்தன. இதில் அமெரிக்காவின் தீர்மானத்தை ரஷ்யா, சீனா இணைந்து ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்தன. அதே சமயம் ரஷ்யாவின் தீர்மானம் போதுமான வாக்குகளைப் பெறாமல் தோல்வியை தழுவியது.

ஐநா பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் 120 நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, கனடா, ஃபின்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், ஈராக், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, போலந்து, தென் கொரியா, சுவீடன், துனிசியா, உக்ரேன், பிரிட்டன் உட்பட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை.

ஹமாஸ் அமைப்பு பற்றிய குறிப்புகள் இடம்பெறாததாலும் ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பது தொடர்பான குறிப்புகள் இல்லை என்பதாலும் வாக்களிக்கவில்லை என்று விளக்கமளித்த இந்தியா, ஹமாஸ் அமைப்புக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒரு பத்தியை இணைத்து வரைவுத் தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கனடாவின் முன்மொழிவை ஆதரித்தது.

பின்னர் தீர்மானத்தின் மீது பேசிய இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா பட்டேல், “அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் நடந்த தாக்குதல்கள் அதிர்ச்சியளிக்கிறது. அது கண்டனத்திற்கு உரியது. பிணைக்கைதிகள் குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம். அவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

“பயங்கரவாதம் மிகவும் கொடூரமானது. அதற்கு எல்லையோ, நாடோ, இனமோ தெரியாது. பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்திப் பேசுவதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபடுவோம். பயங்கரவாதத்திற்கு எதிரான அணுகுமுறையைக் கடைப்பிடிப்போம். காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியாவும் இதில் பங்களித்துள்ளது.

“இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா எப்போதும் ஆதரவு தெரிவித்துள்ளது. வன்முறையைத் தவிர்க்கவும் நேரடியான சமாதானப் பேச்சுவார்த்தைகளை விரைவாக தொடங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்தப் பேரவையில் எழும் விவாதங்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிரான நமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காதது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“காஸாவில் போர்நிறுத்தத்தைக் கொண்டு வர நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காதது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை நினைத்து எனக்கு வெட்கமாக உள்ளது.

“இந்தியா அகிம்சை தத்துவத்தால் உருவானது. காஸாவில் தற்போது மனிதாபிமானத்துக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அடிப்படை தேவைகள் இன்றி ஆயிரக்கணக்கானோர் தவிக்கின்றனர். இதைப் பார்த்து இந்தியா அமைதியாக உள்ளது, இது இந்தியாவின் உயரிய கோட்பாடுகளுக்கு எதிரானது,” என்றார் பிரியங்கா காந்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!