அதிரடி பிரசாரங்களால் நாளுக்கு நாள் சூடுபிடிக்கும் தேர்தல் களம்

மாற்றத்தை எதிர்பார்க்கும் கோவை மக்கள்

கோவையிலிருந்து
கு. காமராஜ்

இந்தியாவின் இந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் பல முனைப் போட்டியை எதிர்நோக்குகிறது. குறிப்பாக பாஜக சில தொகுதிகளைக் குறிவைப்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்கிறது.

அதில் முக்கியமானது கோயம்புத்தூர். தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழில் நகரம். அதேநேரம் விவசாயமும் அங்கு இன்னும் கணிசமாக இருக்கிறது. தொழில்நுட்பத் துறையிலும் மிக முக்கிய இடத்தை கோவை பெற்றுள்ளது. இப்படிப் பல துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் கொண்ட நகரமாகக் கோவை இருக்கிறது.

1952ல் உருவாக்கப்பட்ட கோவை மக்களவைத் தொகுதி, கொங்கு மண்டலத்திற்கு உட்பட்டது. இடதுசாரிகள், காங்கிரசின் கோட்டையாக இருந்த கோவையைக் கைப்பற்ற பாஜக, திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அகில இந்தியாவே உற்றுநோக்கும் இந்தத் தொகுதியில், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கட்சிகள் வாக்குச் சேகரித்து வருகின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் அறிந்த ஒருவராக, தனது செல்வாக்கை வளர்த்து வைத்துள்ளார்.

இவரது வெற்றி வாய்ப்பு, தமிழ்நாட்டில் பாஜகவின் எதிர்காலமாகப் பார்க்கப்படுவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் இத்தொகுதியில் கவனம் செலுத்தி வருகின்றன.

அண்மையில் ‘என் கனவு நமது கோவை’ என்ற பெயரில் ‘100 வாக்குறுதிகள் 500 நாள்களில் நிறைவேற்றப்படும்’ என்ற முழக்க வரியுடன் கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதில் இந்திய மேலாண்மைக் கழகத்தை (ஐஐஎம்) கோவையில் அமைப்பதும் ஒன்று.

இண்டியா கூட்டணி சார்பில் திமுகவின் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார்.

கடந்த 2019ல் இந்தத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிய திமுக, அதில் வெற்றியும் பெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பின் இந்தத் தொகுதியில் திமுக நேரடியாக களம் காண்கிறது.

ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கோவை மாநகராட்சியின் உள்ளாட்சித் தேர்தலில் 96 இடங்களில் வெற்றி பெற்றோம், கண்டிப்பாக இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம்,” என்று கணபதி ராஜ்குமார் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன் களத்தில் இறங்கியிருக்கிறார்.

“மதவாதக் கட்சி பாஜகவுக்கு நோ, குடும்பக் கட்சியான திமுகவுக்கும் நோ,” என்று அண்மைய பிரசாரக் கூட்டத்தில் சிங்கை ராமச்சந்திரன் பேசியிருக்கிறார்.

பாஜக, திமுக, அதிமுக ஆகிய மூன்று வேட்பாளர்களும் நன்கு படித்தவர்கள்.

பாஜக வேட்பாளர் அண்ணாமலை, கோவை பிஎஸ்ஜி கல்லூரியிலும், லக்னோ இந்திய மேலாண்மைக் கழகத்திலும் (ஐஐஎம்) படித்தவர். ஐபிஎஸ் அதிகாரியாகவும் இருந்தவர்.

அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், அகமதாபாத் இந்திய மேலாண்மைக் கழகத்தில் (ஐஐஎம்) படித்தவர்.

Remote video URL

திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

இத்தொகுதியில் 4வது வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் 36 வயது இளநிலை பட்டதாரி கலாமணி போட்டியிடுகிறார்.

கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து தேசியத் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குச் சேகரித்தனர்.

கோவை, மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “தமிழகத்தில் நான் செல்லும் இடமெல்லாம் பாஜக அலை வீசுகிறது, ஏதாவது பொய் சொல்லி, மக்களை ஏமாற்றி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட குடும்பக் கட்சிகளுக்கு ஒரே குறிக்கோள்,” என்று சாடியிருந்தார்.

கோவை மாவட்டம், செட்டிபாளையத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற இண்டியா கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “தேர்தலுக்குப் பிறகு புயல் வீசப்போகிறது, அப்போது மோடி ஆட்சி தூக்கி எறியப்படும்,” என்று கூறியிருந்தார்.

இப்படி அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வாக்குகளைச் சேகரித்து வரும் நிலையில், மக்களின் எண்ணம் வேறுவிதமாக உள்ளது.

தமிழ் முரசிடம் பேசிய பொதுமக்களில் பலர், மாற்றத்தை எதிர்பார்ப்பதாகக் கூறினர்.

அந்த மாற்றம் எந்த வடிவில் வரவேண்டும் என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்லவில்லை.

“இதுவரை கோவை அதிமுக கோட்டையாக இருந்தது. ஆனால் இம்முறை அண்ணாமலைக்கு வாய்ப்பு இருக்கிறது,” என்று கோவை நகர ஆட்டோ ஓட்டுநரான சிவக்குமார், 50, தெரிவித்தார்.

கல்பனா, 43, “விலைவாசியை யார் குறைக்கிறாரோ, அவர்தான் வர வேண்டும். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு வாய்ப்பு இருக்கிறது,” என்று கூறினார்.

ஜமால் அப்துல் நாசர், 53, “ஒவ்வொருத்தரும் வர்றாங்க, போறாங்க, ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இம்முறையாவது மாற்றம் ஏற்பட வேண்டும், யார் வந்தாலும் அந்த ஆட்சி நல்லாட்சியாக அமைய வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

அண்ணாமலையின் வரவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. படம்: தமிழக ஊடகம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!