சண்முகம்: யுவராஜா கோபாலுக்கு உதவ காவல்துறை கணிசமான அளவுக்கு முயன்றது

காலஞ்சென்ற காவல்துறை அதிகாரி யுவராஜா கோபால் சுகாதாரம், குடும்பம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டார் என்றும் அவருக்கு உதவி செய்ய சிங்கப்பூர் காவல்துறை கணிசமான அளவுக்கு முயற்சி செய்தது என்றும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.

யுவராஜா ஒன்பது ஆண்டுகளுக்குக் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றினார். அவருக்கு ஆதரவு வழங்கும் வகையில் அந்த ஒன்பது ஆண்டுகளில் ஆண்டுதோறும் சராசரியாக 120 நாள்கள் மருத்துவ, சம்பளம் இல்லா விடுப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 35 வயது யுவராஜா தமது உயிரை மாய்த்துக்கொண்டார்.

பணியிடத்தில் தமக்குத் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் இனப் பாகுபாடு காரணமாக அவதியுற்றதாகவும் குடும்பப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதியன்று யுவராஜா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதன் பிறகு, அதே நாளன்று அவர் ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடத்துக்குத் கீழே சுயநினைவின்றி கிடந்தார். யுவராஜா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பணியிடத்தில் இனப் பாகுபாடு காரணமாக அவதியுற்றதாகவும் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் யுவராஜா தெரிவித்திருந்தது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு அமைச்சர் சண்முகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சிங்கப்பூர் காவல்துறைக்கு எதிராக யுவராஜா முன்வைத்த சில குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் சண்முகம் பிப்ரவரி 6ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சில குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர் சண்முகம், அவை குறித்து யுவராஜா புகார் அளித்தபோதே தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் யுவராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் சண்முகம் கூறினார்.

காவல்துறை நடத்திய விசாரணையின் மூலம் கிடைத்துள்ள தகவல்களைத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் மறுஆய்வு செய்ததாகவும் அவை திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததால் கூடுதல் நடவடிக்கைகள் தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். யுவராஜா மனவுளைச்சல், தூக்கமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாகவும் திரு சண்முகம் தெரிவித்தார்.

நாட்பட்ட தூக்கமின்மைக்காக அவர் 2017ஆம் ஆண்டிலிருந்து பலமுறை உளவியல் ஆலோசனை நாடியதாகத் தெரிவிக்கப்பட்டது. பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றுக்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மனைவியுடனும் குடும்பத்தாருடனும் யுவராஜாவுக்கு இருந்த உறவு சுமூகமானதாக இருக்கவில்லை என்று அறியப்படுகிறது. யுவராஜா தமது உயிரை மாய்த்துக்கொண்டபோது அவருக்கு எதிராக மூன்று குற்றவியல், கட்டொழுங்கின்மை விசாரணை நடந்து கொண்டிருந்ததாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். தொல்லை கொடுத்த குற்றத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் மருத்துவ விடுப்பில் இருந்தபோது வீட்டில் இருக்காமல் பலமுறை வெளியே சென்றது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவ விடுப்பில் இருக்கும்போது வீட்டில் இருக்காமல் வெளியே செல்வது சிங்கப்பூர் காவல்துறையின் விதி[Ϟ]முறைகளின்படி குற்றமாகும். இதேபோன்ற விதிமீறலுக்காக 2016ஆம் ஆண்டில் யுவராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது மருத்துவ விடுப்பில் இருந்தபோது அவர் தமது உறவினரின் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்தார். அதற்காக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கொடுக்கப்பட்ட பணியை முடிக்காமல் சென்றதற்காகவும் யுவராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அலுவலகத்துக்குத் திரும்ப வந்து அந்த வேலையை முடித்துக் கொடுக்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மூன்றாவது முறை உத்தரவிடப்பட்ட பிறகே அவர் தமது வேலையை செய்து முடித்தார். இந்த விவகாரம் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

யுவராஜாவுக்கு சிங்கப்பூர் காவல்துறை கணிசமான அளவுக்கு ஆதரவு அளித்ததாக அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார்.

2014ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஆண்டுதோறும் யுவராஜா சராசரியாக 120 நாள்கள் விடுப்பு எடுத்ததாக அவர் கூறினார். மருத்துவ விடுப்புக்கான நாள்கள் அனைத்தையும் அவர் பயன்படுத்திய பிறகு அவருக்கு சம்பளம் இல்லா விடுப்பு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அவர் காவல்துறை அதிகாரியாகத் தொடர அனுமதிக்கப்பட்டார் என்பதை அமைச்சர் சண்முகம் சுட்டினார். தனியார் துறையில் இது முடியாத காரியம் என்றார் அவர்.

உளவியல் ஆலோசனை பெற 2016ஆம் ஆண்டிலிருந்து யுவராஜாவுக்கு அவரது மேல் அதிகாரிகள் உதவினர்.

அவரது செயல்பாடு சராசரிக்கும் குறைவாக இருந்ததால் வேலை தொடர்பாக அவருக்கு வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அவருக்கு உதவ அவரது சக ஊழியர்களும் முன்வந்தனர்.

புதிய பிரிவில் அவர் சேர்ந்தபோது பழைய, கசப்பான அனுபவங்களை மறந்து புத்துணர்ச்சியுடன் வேலையைத் தொடங்க அவருடன் பணிபுரிந்த அதிகாரி ஒருவர் ஊக்கமளித்ததாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

ஆனால் யுவராஜா அடிக்கடி வேலைக்கு வராதது அந்த சக ஊழியருக்கு ஏமாற்றம் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுபோல யுவராஜாவின் சக ஊழியர்கள் அவருக்குப் பல உதவிகளைச் செய்தனர். அவர் வேலைக்குச் செல்லாத சமயங்களில் அவருக்குப் பதிலாக அவர்கள் பணிபுரிந்தனர்.

ஆனால் யுவராஜாவுக்கு அவர்கள் இவ்வளவு உதவி புரிந்தும் சிங்கப்பூர் காவல்துறைக்கு எதிராக யுவராஜா உண்மையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தியது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருப்பதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!