தனியார் பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் 60%க்கு முழுநேர வேலை கிடைத்தது: ஆய்வு

ஆனால் தன்னாட்சிப் பல்கலைக்கழக மாணவர்களைவிடச் சம்பளம் குறைவு

2023ஆம் ஆண்டு பட்டம் பெற்ற தனியார் பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர், பட்டம் பெற்ற ஆறு மாதங்களுக்குள் முழுநேர வேலையில் சேர்ந்துள்ளனர்.

ஆனால், தன்னாட்சிப் பல்கலைக்கழக மாணவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களுக்குச் சம்பளம் குறைவு என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தனியார் கல்விக்கழகப் பட்டதாரிகள் வேலைவாய்ப்புக் கருத்தாய்வின் முடிவுகளை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர், ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிட்டது.

2023ல் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற 58.7 விழுக்காட்டினர் நிரந்தரமான முழுநேர வேலைகளில் சேர்ந்ததாக ஆய்வு குறிப்பிட்டது. ஒப்புநோக்க, 2022ல் இந்த விகிதம் 60.9 விழுக்காடாக இருந்தது.

பகுதிநேர அல்லது தற்காலிக வேலைகளில் 18.9 விழுக்காட்டினர் சேர்ந்தனர். 5.7 விழுக்காட்டினர் தன்னுரிமைத் தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர்.

வேலை பார்க்கும், தீவிரமாக வேலை தேடும் 2,400 பட்டதாரிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 83.2 விழுக்காட்டினர், பட்டம்பெற்ற ஆறு மாதங்களுக்குள் நிரந்தர, பகுதிநேர அல்லது தன்னுரிமை வேலைவாய்ப்பைப் பெற்றதாகத் தெரிவித்தனர். 2022ஆம் ஆண்டு இந்த விகிதம் 86.5 விழுக்காடாகப் பதிவானது.

முழுநேர வேலையில் சேர்ந்துள்ள சென்ற ஆண்டின் பட்டதாரிகள் ஈட்டும் சராசரி மாதச் சம்பளம் $3,400 என்று கூறப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் அது $3,200 ஆக இருந்தது.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் ஆக அதிகமாக $3,500 ஈட்டுகின்றனர். கப்லான் உயர்கல்விக் கழகப் பட்டதாரிகள் சராசரியாக $3,000 ஈட்டுவதாகத் தெரியவந்துள்ளது.

முன்னதாக, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) போன்றவற்றின் புதிய பட்டதாரிகளின் சராசரி தொடக்கச் சம்பளம் மாதத்திற்கு $4,313 என்று பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான தன்னாட்சிப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வேலைவாய்ப்புக் கருத்தாய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தன்னாட்சிப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் ஏறத்தாழ 84.1 விழுக்காட்டினர், பட்டம் பெற்ற ஆறு மாதங்களுக்குள் முழுநேர நிரந்தர வேலைகளில் சேர்ந்தனர். நான்கு விழுக்காட்டினர் பகுதிநேர அல்லது தற்காலிக வேலைகளில் சேர்ந்தனர். 1.5 விழுக்காட்டினர் தன்னுரிமைத் தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர்.

இவ்வேளையில், பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் பட்டயம் பெற்றபின் தேசிய சேவையை நிறைவுசெய்தோரின் சராசரி மாதாந்தரத் தொடக்கச் சம்பளம் $2,963 எனக் கூறப்பட்டது. 2022ஆம் ஆண்டு அது $2,800 ஆகப் பதிவானது.

இவர்களில் 95.1 விழுக்காட்டினர் வேலையில் சேர்ந்துள்ளதாகவும் 69.2 விழுக்காட்டினருக்கு முழுநேர வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

2023ல் தனியார்ப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றோரில் 19.4 விழுக்காட்டினருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை அல்லது விருப்பமின்றி பகுதிநேர வேலையிலோ தற்காலிக வேலையிலோ சேர்ந்துள்ளனர்.

தன்னாட்சிப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் இந்த விகிதம் 7.9 விழுக்காடு. பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் பட்டயம் பெற்றபின் தேசிய சேவையை நிறைவுசெய்தோரிடையே இவ்விகிதம் 3.8 விழுக்காடு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!