புதுடெல்லி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணி, தனது சொந்த இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) சாதனையை ஈடுகட்டியுள்ளது.
இரண்டாம் முறையாக, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் 22 சிக்சர்களைப் பறக்கவிட்டது. டெல்லி அணியை 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவ்வணி வெற்றிபெற்றது.
முன்னதாக, நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முந்தைய ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத், 22 சிக்சர்களை விளாசி சாதனை படைத்தது. அந்த ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ஓட்டங்களையும் குவித்தது.
இதற்குமுன், ஓர் ஐபிஎல் ஆட்டத்தில் எந்த அணியும் இத்தனை ஓட்டங்களை எடுத்ததில்லை. அதற்கு முன்னரும் அதிக ஓட்டங்களை ஹைதராபாத் அணியே குவித்திருந்தது.
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பந்தடித்த ஹைதராபாத் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து பந்தடித்த டெல்லி அணி 199 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோற்றுப்போனது.