மாஸ்கோ பயங்கரவாதத் தாக்குதலில் 143 பேர் கொல்லப்பட்டனர்; ஐஎஸ் பொறுப்பேற்பு

மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கலையரங்கம் ஒன்றில் துப்பாக்கிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 143 பேர் கொல்லப்பட்டதுடன் ஏராளமானோர் காயமடைந்தனர்.

ஏறத்தாழ 145 பேர் காயமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் காரணமாக கலையரங்கம் தீப்பிடித்துக் கொழுந்துவிட்டு எரிந்தது.

மாஸ்கோவின் வடக்குப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள குரோக்கஸ் கலையரங்கத்தில் இந்தத் தாக்குதல் மார்ச் மாதம் 22ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

இதற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ராணுவச் சீருடை அணிந்திருந்த துப்பாக்கிக்காரர்கள் கட்டடத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைக் குறிவைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்கியதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கையெறிகுண்டுகளையும் வீசியதால் கட்டடம் பற்றி எரிந்தது.

வேகமாகப் பரவிய தீயின் காரணமாக அவ்விடம் எங்கும் கரும்புகை நிரம்பியதாகவும் கலையரங்கத்தில் இருந்தோர் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல விரைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பதற்றநிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இதை ஒரு பயங்கரவாத தாக்குதல் என வகைப்படுத்தி ரஷ்ய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

விசாரணை மூலம் கண்டறியப்படும் தகவல்கள் உடனுக்குடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் தெரிவிக்கப்படும் என்று அவரது செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த ரஷ்ய சிறப்புப் படை தாக்குதல்காரர்களை வலைவீசித் தேடி வருகிறது.

கலையரங்கக் கட்டடத்துக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை மோப்ப நாய்களைக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இந்நிலையில், மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் பலர் ஒன்றுகூடிய இடத்தில் தனது போராளிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதன் பிறகு தங்கள் முகாம்களுக்குப் பத்திரமாகத் திரும்பிவிட்டதாகவும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

கலையரங்கக் கட்டடத்தில் துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தியதைக் காட்டும் படங்களை ரஷ்ய ஊடகம் வெளியிட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதலுக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரேன் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் கண்டனம்

மாஸ்கோவில் உள்ள கலையரங்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சிங்கப்பூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“அனைத்து நாடுகளுக்கும் பயங்கரவாதம் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதை இந்தத் தாக்குதல் நினைவூட்டுகிறது. மாண்டோரின் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்,” என்று வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.

கலையரங்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிங்கப்பூரர்கள் பாதிப்படைந்ததாக இதுவரை தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

ரஷ்யாவுக்கு அவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்கும்படி சிங்கப்பூரர்களை வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கெனவே ரஷ்யாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ரஷ்ய அதிகாரிகளின் அறிவுரை கேட்டு நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் வெளியுறவு அமைச்சின் இணையப்பக்கத்துக்குச் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சந்தேக நபர்கள் நால்வர் கைது

இதற்கிடையே, மாஸ்கோ கலையரங்கத்தில் தாக்குதல் நடத்தியதாக சந்தேக்கப்படுவோர் காரில் தப்பிச் செல்ல முயன்றதாகவும் அவர்களை அதிகாரிகள் துரத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, இருவர் பிடிபட்டனர். மற்றவர்கள் அருகில் இருந்த காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் கின்ஸ்டைன் தெரிவித்தார்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!