இசைத்தொழில் சாத்தியமே: சொல்லிசைக் கலைஞர் லினெத்

“இருளின் முடிவில் எப்பொழுதும் ஓர் ஒளி காத்திருக்கும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் உலகம் இயங்குகிறது. இதனை நினைவூட்டுவதும், வலியுறுத்திச் சொல்வதும்தான் என் இசையின் மூலக்கூறு,” என்கிறார் ‘சொல்லிசை’ கலைஞர் லினெத் ராஜேந்திரன்.

பாடல் தொகுப்புகள், மேடை நிகழ்ச்சிகள் என சிங்கப்பூர் சொல்லிசைத் துறையில் பிரபலமடைந்து வரும் இவர், கித்தார், பியானோ, டிரம்ஸ் உள்ளிட்ட இசைக்கருவிகளையும் வாசிக்கிறார். அனைத்துமே தானாகக் கற்றுக்கொண்டவைதான் என்கிறார் லினெத்.

‘சொல்லிசை’ - உலகம் முழுவதும் அந்தந்தப் பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உணர்வுகளுக்கும் ஏற்ப மாறுபட்டு புது உருவெடுக்கும் ஓர் இசை வடிவம். ‘ஹிப்ஹாப்’ எனும் பேரிசைக் கலாசாரத்தின் ஒரு கூறு இந்த ‘ராப்’ எனும் சொல்லிசை. தான் உருவாக்கும் சொல்லிசைப் பாடல்களுக்கு தானே வரிவடிவமும் கொடுக்கிறார் லினெத்.

தன் தந்தை 64 வயது ராஜேந்திரன் மாதவன்தான் தனக்கு இசை ஆர்வத்தை விதைத்த முதல் குரு எனக் குறிப்பிட்ட இவர், “அனைவரையும்போல சினிமா, வெளிநாட்டு இசைத்தொகுப்புகள் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு 2008-09களில் வந்த இணையத்தள பயன்பாடுதான் இசை உலகின் புதிய பரிமாணத்தைக் காட்டியது,” என்கிறார்.

“சிறு வயதில் காரில் பயணம் செய்தபோது தந்தை போடும் பாடல்கள் எனக்குக் குதூகலம் தந்ததை எப்போதும் மறக்க முடியாது,” எனத் தெரிவிக்கும் இவர், முதன்முதலாக 2008-09 காலகட்டத்தில் கேட்க நேர்ந்த ‘மரூன்-5’ எனும் இசைக்குழுவின் பாடல்கள் தனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை நினைவுகூர்கிறார்.

‘எமினெம்’ என்னும் பிரபல சொல்லிசைக் கலைஞர்/ பாடகர், தனது சொல்லிசை ஆர்வத்திற்கு விதை போட்டவர் எனச் சுட்டிக்காட்டும் லினெத், நன்யாங் பல்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ஏரோஸ்பேஸ்’ துறையில் பயின்றபின், இசைமீது கொண்ட ஆர்வத்தால் முழுநேர இசைக் கலைஞராக வேண்டுமென முடிவெடுத்தார்.

தொடக்கத்தில் பாடல்கள் எழுதி, இசையமைத்த இவர், தனது பாடல்களில் வரும் சொல்லிசைப் பகுதிகளை பாடுவதற்கு உள்ளூர்க் கலைஞர்கள் குறைவாக உள்ளதை உணர்ந்தார். பள்ளிக்காலத்தில் நண்பர்களுடன் இணைந்து ஒரு நிமிடத்தில் யார் அதிக சொற்களைப் பாடுவது என போட்டி வைத்து விளையாடி மகிழ்ந்ததை நினைவுகூர்ந்த இவர், தனது பாடல்களில் வரும் ராப் பகுதிகளைத் தானே பாடத் தொடங்கியதாகச் சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து சொல்லிசைமீது ஆர்வம் அதிகமாகவே, முழுமையான சொல்லிசைக் கலைஞராக உருவெடுத்தார்.

தற்பொழுது நிறைய உள்ளூர் இசைக்கலைஞர்களின் பாடல்களில் சொல்லிசைப் பகுதியில் உதவி வரும் இவர், எதிர்காலத்தில் தனியாக சொல்லிசைத் தொகுப்புகளை வெளியிடவும் ஆர்வமாக உள்ளார்.

ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ள இவர், அண்மையில் ஷிக்கா ஷே எனும் கலைஞரின் இசைத்தொகுப்பில் பாடியிருக்கிறார். மேலும், இவ்வாண்டின் தேசிய தினப் பாடலான ‘ஷைன் யுவர் லைட்’ பாடலிலும் இவரது சொல்லிசைப் பகுதி இடம்பெற்றது.

“பெரும்பாலும் துடிப்புமிக்க, வேகமான பாடல்கள் எனக்குப் பிடித்தவை,” எனக் கூறும் லினெத், பத்து உள்ளூர் இசைக்குழுக்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

ஏறத்தாழ 10 ஆண்டுகளாக இசைத் துறையில் பயணம் செய்த அனுபவத்தின் வாயிலாக, மக்களின் இசை ஆர்வமும், இசை குறித்த பார்வையும் மாறுபட்டுள்ளதை உணர்வதாக சொல்கிறார்.

இளையர்கள் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு இசைமீது மிகுந்த ஆர்வம் காட்டுவது குறித்து பேசிய இவர், “பெரும்பாலும் இசை, கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது. குறிப்பாக இளையர்கள், மேடை நிகழ்ச்சிகள் துள்ளலும், கொண்டாட்டமுமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

“அந்த உணர்வை யார் கொடுத்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கின்றனர். நாம் சரியான இசையைக் கொண்டு சேர்க்கிறோமா என்பதுதான் முக்கியம்” என்றார்.

“இசை என்பது ஒரு ஊர் அறியாத திடல்போல; அது இருக்கிறதென கோடிட்டுக்காட்டினால் போதும், அங்கு விளையாட அனைவருக்கும் ஆர்வம் பிறக்கும். அத்தகைய வழிகாட்டியாக இருப்பதுதான் இசைக் கலைஞர்களின் கடமை,” என்கிறார் லினெத்.

கடந்த வாரம் நன்யாங் பல்கலைக்கழகத்தில் தாம் ஓர் இசைக்குழுவுடன் இணைந்து நடத்திய மேடை நிகழ்வுக்கு இளையர்கள் பெருவரவேற்பு அளித்ததாக இவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் தனிப்பட்ட முறையில் இசைத்தொகுப்பு வெளியிடும் கலைஞர்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறதென ஆதங்கப்பட்ட இவர், “இளையர்களின் இசை ஆர்வம் என் போன்ற கலைஞர்கள் உருவாவதற்குக் காரணமாக இருப்பது சற்று ஆறுதலளிக்கிறது” என்றார்.

“பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சிங்கப்பூரில் இசைக் கலைஞராகப் போகிறேன் என்று சொன்னால், ‘எஸ்பிளனேட் அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்தத்தான் வாய்ப்பு உள்ளது, வேறு என்ன செய்ய முடியும்’ என்ற எண்ணமே இருந்தது,” என்கிறார் லினெத்.

“ஆனால், தற்பொழுது, ஸ்பாட்டிஃபை, யூடியூப் தொடங்கி பல்வேறு தளங்களில் திறமைகளை வெளிக்கொணர முடிகிறது. இது இசையை தொழில்முறையில் தொடர விரும்பும் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு தூண்டுகோலாக அமையும்,” என்று இவர் கூறினார்.

அனைத்து மனிதருக்குள்ளும் ஏதோ ஒரு ஆக்க சக்தி இருக்கத்தான் செய்கிறது. அதை முழுநேரமாக பயன்படுத்துபவர்கள் கலைஞராகிறார்கள், அவ்வளவுதான் எனக் கூறுகிறார் லினெத்.

“இசைத்துறை தொடங்கி அனைத்து கலைத்துறைக்குள்ளும் நுழைபவர்கள் நிலையான வருமானம், வேலை-வாழ்க்கைச் சமநிலை என பலவற்றை தியாகம் செய்ய வேண்டும் என்பது பரவலான கருத்தாக இருக்கிறது. அது அப்படி இல்லை,” என்கிறார் லினெத்.

இசைத்துறை மற்ற வேலைபோல 9 மணி முதல் 5 மணி வரை வேலை செய்யும் சராசரி வாழ்க்கை இல்லை என்றாலும் ஒரு தொழில்முனைவோர்க்கும் இசைக்கலைஞர்களுக்கும் பெரும் வேறுபாடு இல்லை எனக் குறிப்பிட்டார்.

“இசைதான் பொருள் என்றால், இசைக் கலைஞர் தான் கடை, இசை ரசிகர்கள் தான் வாடிக்கையாளர்கள். ஒரு முதலாளி, தன் கடைக்கு வாடிக்கையாளர்கள் வர வேண்டும் என்பதற்காக சிறந்த பொருளைத் தயாரித்து விற்பதைப் போலவே, இசைக் கலைஞர்களும் சிறந்த இசைத் தொகுப்பை வெளியிட ஆர்வம் கொள்ள வேண்டும். இதுதான் யுக்தி,” என்கிறார் லினெத்.

சுயதொழில் முனைவோர் போலவே தொடக்க காலத்தில் சிரமங்கள் இருந்தாலும், போகப்போக துறையின் நுணுக்கங்களைக் கற்று உயர்வது இங்கும் சாத்தியம்தான் என்றார் லினெத்.

“பணம் சம்பாதிப்பதைப் பற்றிச் சிந்திப்பது ஒன்றும் குற்றமன்று. இசை வெறும் சேவையன்று. அதுவும் ஒரு தொழில். ஆனால், இங்கு நாம் ஒன்றை உருவாக்குகிறோம் என்கிற மனநிறைவு கிடைக்கிறது. அதற்காகச் சிறு சிறு தியாகங்கள் செய்வது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை” என்கிறார் லினெத்.

இசைத்துறையில் கால்பதிக்க எண்ணும் அடுத்த தலைமுறையினர், இது ஒரு நீண்ட பயணம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதன் முடிவை அடைய மிக்க பொறுமையும், மீள்திறனும், நம்பிக்கையும் இருக்க வேண்டியது அவசியம்.

அனைவரும் ‘ஒருபோதும் எடுத்த காரியத்தை கைவிடாதே’ என்பார்கள். அது பல நேரங்களில் சாத்தியமில்லை. ஆனால், அந்த விடாப்பிடி எண்ணம்தான் ஒருவரை வெற்றிக்கு அருகில் கொண்டு சேர்க்கும் என நம்புகிறார் லினெத்.

“இசைத்துறையில் இதுவரையில் என் பயணம் ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கிறது. இருந்தும் என்னை வெற்றியை நோக்கி ஓட வைப்பது, என் பெற்றோர், நண்பர்கள்தான். அவர்களுக்கு என் நன்றி,” எனத் தெரிவித்தார் லினெத்.

நேர்மறை எண்ணங்களை விதைக்கும் ராப் பாடல்களை உருவாக்கும் லினெத், எதிர்காலத்தில் அனைவரையும் வெற்றிக்கான பாதையை நோக்கி உந்தித் தள்ளும் சுயஉதவிப் புத்தகமொன்றை எழுதுவதை இலக்காகக் கொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!