தந்தையின் பாதையில் விமானப் போர்த்திறன் அதிகாரியாக மகள்

ராணுவத் துறையில் காவலற்படையில் இருந்த தன் தந்தை சென்ற பாதையில் தாமும் பயணிக்க வேண்டும் என்று விரும்பிய 23 வயது லெஃப்டினென்ட் தீபா சியாமா அருள், அண்மையில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையில் விமானப் போர்த்திறன் அதிகாரியாக (ABM) அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் இளநிலை பட்டம் பெற்றவர் தீபா.

ராணுவத்தில் சேர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, தீபாவின் மீது திணிக்கப்படவில்லை. தந்தையின் பணித் தேவைகளுக்காக ஐந்தாண்டுகள் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த தீபா, பல்கலைக்கழகப் படிப்புக்காக மீண்டும் சிங்கப்பூர் திரும்பினார். எதிர்காலத்தில் முழுநேரப் பணியில் ஈடுபடும்போது அது அலுவலக வேலையாக இருக்கக்கூடாது என்பதில் தீபா உறுதியாக இருந்தார்.

துடிப்பான சவால்மிக்க வேலையில் இறங்க வேண்டுமென்ற இலக்கை வைத்திருந்த தீபா, தந்தையைப் போல ராணுவத்தில் தடம்பதிக்க விரும்பினார். சிங்கப்பூர் கடல் படை, ராணுவம், சிங்கப்பூர் ஆகாயப் படை, மின்னிலக்க, உளவுத்துறைப் படை ஆகியவை இருக்கையில், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையில் வழங்கப்படும் வேலைவாய்ப்புகள் தீபாவை ஈர்த்தன.

அவற்றில் குறிப்பாக, விமானப் போர்த்திறன் அதிகாரியாகப் பணியாற்றினால் சிங்கப்பூரின் வான் பாதுகாப்புக்குத் தான் பெரிதளவில் பங்களிக்கலாம் என்ற எண்ணம் தீபாவுக்குள் எழுந்தது. பெற்றோரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். நெருங்கிய நண்பர்களும் “நீ ஏன் கணக்கியல் படித்துவிட்டு சிங்கப்பூர் ஆகாயப் படையில் சேர நினைக்கிறாய்,” என்று வினவினர்.

தமது ஆண் நண்பர்கள் சிலர், ஆகாயப் படையில் சேர்வது எளிதல்ல, அடிப்படை ராணுவப் பயிற்சியும் பயிற்சி அதிகாரிகளுக்கான பள்ளியும் தன்னை வாட்டி வதைத்துவிடலாம் என்று சரிதாவிடம் கூறினர். பயிற்சிகள் மிகவும் கடுமையாக இருப்பதால் தீபாவால் அவற்றைச் சமாளிக்க முடியாது என்று கூறியும் தீபாவின் முடிவில் மாற்றம் ஏற்படுவதாக இல்லை.

பெற்றோருக்குத் தெரியாமல் தீபா சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையில் சேர விண்ணப்பித்தார். சோதனைத் தேர்வுகளில் சிறப்பாகச் செய்த தீபாவுக்குப் பின்னர் அடிப்படை ராணுவப் பயிற்சிக்குச் செல்ல அழைப்பு வந்தது. பிறர் கூறுவது போலல்லாமல் தீபாவுக்கு ராணுவ பயிற்சி பிடித்திருந்தது.

காடுகளில் தங்கிப் பயிற்சிகள் மேற்கொண்ட போதிலும் தீபா அதைப் புதுமையான அனுபவமாக எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகு ராணுவ அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் அடி எடுத்து வைத்த தீபா, சில சவால்களைக் கடக்க நேரிட்டது. விமானப் போர்த்திறன் அதிகாரிக்கான பயிற்சிகள் மிகவும் கடுமையாகவே இருந்தன.

தன்னுடன் பயிற்சி மேற்கொண்ட சிலர், பயிற்சியின் கடுமையைத் தாங்க முடியாமல் தோல்வி அடைந்தபோது சில நேரங்களில் தீபா பதற்றம் அடைந்ததுண்டு. ஆனாலும் இவ்வளவு தூரம் வந்த பிறகு பின்வாங்குவது முறையல்ல என்று நினைத்துக்கொண்டே தீபா முயற்சித்தார். மேலும், பயிற்றுவிப்பாளர் தந்த ஊக்கமும் தீபா விடாமுயற்சியுடன் செயல்படக் கைகொடுத்தது.

முயற்சியின் பலன் அவருக்குக் கிட்டியது. கடந்த ஒரு வாரமாக சாங்கி ஆகாயப்படைத் தளத்தில் விமானப் போர்த்திறன் அதிகாரியாகப் பணியாற்றி வரும் தீபா, போர் விமானங்களைக் கட்டுப்படுத்துவது போன்ற பொறுப்புகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஒரே இடத்தில் இருந்து வேலை பார்ப்பதைவிட தனது பணியில் கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்களால் மகிழ்கிறார் தீபா. போர் விமானத்தைக் கட்டுப்படுத்தும்போது விமானியுடன் உரையாடும் தீபா, அந்த நொடியில் முடிவெடுத்து முக்கியமான தகவல்களை விமானியிடம் கூற வேண்டும். இதுபோன்ற திருப்தி வேறு வேலையில் கிடைக்காது எனும் தீபா, வருங்காலத்தில் விமானங்களைக் கட்டுப்படுத்துவதில் கைதேர்ந்த அதிகாரியாக விளங்கி ஆகாயப் படையில் கடைசிவரை சேவையாற்ற விரும்புகிறார்.

தன் பணி மூலம் கிடைக்கும் வெளிநாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட ஆவலுடன் இருக்கும் தீபா, ஆலோசனைகளுக்கு தந்தையையும் ஆகாயப் படையில் இருக்கும் மற்ற தோழர்களையும் அணுகுவதுண்டு. தந்தை ஒவ்வொரு முறையும் தான் பணியிடத்தில் கட்டொழுங்குடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதை மனதில் கொள்ளும் தீபா, பணியில் உடலுறுதியுடன் செயல்பட உடற்பயிற்சி செய்வதற்கு முன்னுரிமை தருகிறார்.

தனிநபர் உடலுறுதிச் சோதனையில் (IPPT) தனது தங்கத்தைத் தக்க வைத்துக்கொண்டு வேலையில் ஆண் அதிகாரிகளுக்கு நிகராகப் பெண்களாலும் மிளிர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி வருகிறார்.

ராணுவத்தில் பணியாற்றிய பின் நிறுவனத் துறைக்கு மாறும் நிலை ஏற்பட்டால் தடுமாற்றங்கள் எழும் என்ற பிறரின் தவறான கருத்தைச் சுட்டிக்காட்டிய தீபா, “ராணுவம் நமக்குக் கற்றுத் தரும் மென்திறன்கள் பலவற்றை நாம் பிற பணிகளுக்கும் பயன்படுத்தலாம்,” என்றார்.

இந்தப் பணி தனது நேரத்தை அதிகம் ஆக்கிரமித்தாலும் முடிந்தவரை பெற்றோர், தம்பி, தங்கை ஆகியோருடனும் நெருங்கிய நண்பர்களுடனும் நேரத்தைச் செலவழிக்கத் தீபா தவறுவதில்லை. குடும்பத்தினரின் ஆதரவு தனக்குப் பக்கபலமாக இருக்கிறது என்று புன்னகை பூத்த முகத்துடன் கூறிய தீபா, நடனத்துக்கும் தன் நேரத்தை ஒதுக்கி வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!