கபடிக் களத்திற்கு தளம் அமைக்க உழைக்கும் இளையர்கள்

சிறுவயதில் கபடி விளையாட்டிற்கு அறிமுகமானபோது, அதில் ஆர்வத்தையும் திறனையும் வளர்க்க உதவும் தளம் எதுவும் இல்லாமல் வருந்திய இளையர்கள், அதே நிலையிலுள்ள இக்கால மாணவர்களைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூர் கபடிச் சங்கத்தைத் தொடங்கினர். 

சிங்கப்பூர் தேசிய கபடி அணியில் புதுவிளையாட்டாளர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான தேர்வு நடவடிக்கை செப்டம்பர் 30ஆம் தேதி சனிக்கிழமை இடம்பெற்றது. அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தேர்வுகளில் கலந்துகொள்ள 15 வயது முதல் 35 வயது வரையிலான அனைத்து சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் அது அழைத்தது. 

ஆர்வமிக்க 12 இளம் ஆண்களும் ஓர் இளம்பெண்ணும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வந்திருந்தனர். 

தற்போது சிங்கப்பூர் கபடிச் சங்கத்தைச் சேர்ந்த திரு முகம்மது காலித் மரிக்கார், 28, கபடி அணிக்கு தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருக்கிறார்.

“சென்ற முறை நடந்த தேர்வுகளைக் காட்டிலும் இம்முறை கூடுதலானோர் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கபடி தெரிந்தோரும், இன்று முதல்முறையாக கபடி விளையாடுவோரும் இணைந்தது அனைவருக்கும் ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக அமைந்தது. கபடியின் வடிவமைப்பே குழுவாகச் செயல்படுவதை முன்னிலைப்படுத்துவதுதான். எனவே, வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் குழுவாக இணைய இது ஒரு நல்ல வாய்ப்பாக திகழ்ந்தது,” என்று திரு முகம்மது கூறினார். 

முதல் அங்கத்தில் கபடி விளையாட்டு முறையின் அடிப்படைகள் கற்றுக் கொடுக்கப்பட்டு, அவற்றைப் பயிற்சி செய்யவும் நேரம் ஒதுக்கப்பட்டது. பின்னர் அணிகளாகப் பிரிக்கப்பட்டு, பங்கேற்றோர் கற்றுக்கொண்ட வழிமுறைகளை செயல்படுத்தி போட்டியும் நடந்தது. 

அனைவரும் முழுமுயற்சியுடன் விளையாடி, தம் ஆற்றலை வெளிப்படுத்தினர். 

ஆய்வாளராகப் பணியாற்றி வரும் சிவசங்கரி முத்துராமன், 24, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முயலலாம் எனும் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் வந்திருந்தார்.

“என் தோழிகள் எவரும் இதில் சேர ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டான கபடியை விளையாடிப் பார்க்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். முடிவுகள் என்னவாக இருந்தாலும் இது எனக்கு ஒரு நல்ல அனுபவம்,” என்று அவர் பகிர்ந்துகொண்டார். 

“முன்பு பள்ளியில் பொழுதுபோக்காக கபடி விளையாடினேன். இன்று கலந்துகொண்டதன் மூலம் கபடி குறித்தும் அதனால் விளையாட்டாளர்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்தும் அறிந்துகொண்டேன்,” என்றார் குட்வின் அலெக்ஸ், 19.  

சிங்கப்பூரில் கபடிக்குக் கூடுதல் அங்கீகாரம் கிடைக்க வித்திடும் வகையில், இதில் தீவிரப் பற்று கொண்டுள்ள திரு சிவநேசன் கிட்ணாசாமியுடன் ஏழு இளைஞர்கள் இணைந்து சங்கத்தை நிறுவினர். முழுநேர வேலைகளில் பணியாற்றி வந்தாலும் இவர்கள் சங்க வேலைகளில் எந்தக் குறையும் வைப்பதில்லை.   

“2014 ஆம் ஆண்டில் ‘கபடிவழி கலாசாரம்’ எனும் பெயரில் பள்ளி மாணவர்களுக்கு கபடி விளையாடும் வாய்ப்பை வழங்கும் வகையில் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தோம். அதில் கிட்டத்தட்ட 11 அணிகள் கலந்துகொண்டன. அன்று கிடைத்த வரவேற்பு எங்களை மேலும் தூண்டியது. எனவே, நாம் ஏன் ஒரு புதிய முயற்சியாக இதில் ஈடுபடக்கூடாது என்ற எண்ணத்தில் தொடங்கியது தான் இந்தக் கபடிச் சங்கம். 

“தேசிய அளவில் கபடி மக்களைச் சென்றுசேர்வதையும் அனைத்துலக அளவில் சிங்கப்பூர் கபடி அணி அங்கீகாரம் பெறுவதையும் குறிக்கோளாக வைத்து முயன்றோம். சிங்கப்பூரின் விளையாட்டு அமைப்புகளை நாடியபோது எங்களை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, ஆசியான் கபடி கூட்டமைப்பு, அனைத்துலக கபடி கூட்டமைப்பு போன்ற அமைப்புகளுடனும் இணைந்து சிங்கப்பூரில் கபடியை மேலும் வளர்க்க வழிகள் தேடினோம்,” என்று சிங்கப்பூர் கபடிச் சங்கத்தின் தலைவர் சிவநேசன் விளக்கமாகக் கூறினார். 

2019 முதல் தொடங்கிய இந்த முயற்சியின் மூலம் சிங்கப்பூரை வெவ்வேறு கபடிப் போட்டிகளில் இவர்களின் அணி பிரதிநிதித்துள்ளது. இளம் அணி என்றபோதிலும் போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கெடுத்து சில பதக்கங்களையும் வென்றுள்ளது. 

“இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த நம் முன்னோர் இந்த விளையாட்டையும் தங்களுடன் சிங்கப்பூருக்குக் கொண்டுவந்தனர். பாமரர் எளிதில் விளையாடக்கூடிய கபடி, அன்றைய காலத்தில் பல்வேறு சிங்கப்பூரர்களும் ஈடுபட்ட ஒன்றாக இருந்தது என வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. எனவே, இளையர்களுக்கான சரியான கட்டமைப்புடன் கபடி விளையாட்டை மீண்டும் சிங்கப்பூரர்களிடையே பிரபலப்படுத்துவது முக்கிய நோக்கம்,” என்றும் அவர் சொன்னார். 

“13 வயதிலிருந்து இச்சங்கத்துடன் நான் உள்ளேன். காரணமின்றித் தொடங்கிய இந்தப் பயணம் எனக்குப் பல வாழ்க்கைப் பாடங்களையும் புதிய நண்பர்களையும் தந்துள்ளது. இன்று சங்க உறுப்பினராக உதவ வந்துள்ள எனக்கு இது புது அனுபவமாக இருந்தது,” என்று கூறினார் ராகுல் தேவ் ஷிவ் ராம், 16.     

தேசிய அணியின் உறுப்பினராக உள்ளார் மலாய் இனத்தைச் சேர்ந்த திரு ஐதில் அஸ்ராஃப், 22.

“டிக்டாக் செயலியில் சங்கத்தின் காணொளியைக் கண்டு, அதனால் ஈர்க்கப்பட்டேன். என் தேசத்தைப் பிரதிநிதிக்கும் வாய்ப்பும் கபடி மூலம் கிடைக்கும் என்று அறிந்தவுடன் உடனே சேர்ந்துவிட்டேன். இக்காலத்தில் இனம், மொழி போன்ற எல்லைகளைத் தாண்டி உலக அளவில் கபடி அங்கீகாரம் பெற்று பல நாடுகளிலும் இதை விளையாடி வருகின்றனர். சிங்கப்பூரில் கபடி குறித்த விழிப்புணர்வு குறைவுதான். ஆனால், சங்கத்தின் மூலம் அதிகமானோரிடம் கபடியைக் கொண்டுசேர்க்க முடிகிறது. கூடிய விரைவில், என்னைப்போல் பல சிங்கப்பூரர்கள் கபடியால் ஈர்க்கப்படுவர். இதற்காக நானும் என் பங்கை ஆற்றி வருகிறேன்,” என்று தெரிவித்தார் திரு ஐதில். 

திரு சிவநேசன், தன் நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய ‘விஸ்லாஸ் அகாடமி’ மூலம் கபடிப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது சிங்கப்பூர் கபடிச் சங்கம்.

இந்நிலையில், இவ்வாண்டு தாய்லாந்தில் நடக்கவிருக்கும் கடற்கரைக் கபடி 2023 போட்டிகளுக்காகவும் தயாராகி வருகின்றனர் தேசிய அணியினர். கபடி விளையாட்டை தென்கிழக்காசிய விளையாட்டுகளில் அதிகாரத்துவ விளையாட்டாக இணைக்கவும் சங்கம் கோரிக்கை விடுத்து, அதற்காக உழைத்து வருகிறது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!