இந்திய பீட்சா விற்பனை செய்யும் சீன இளையர்

இந்திய உணவுவகையான ரசத்தைச் சீனரான டெரிக் சியோங் விரும்பி உட்கொள்கிறார்.

இந்திய உணவு வகைகளில் அடங்கியுள்ள காரமும் மசாலாவும் தனி ருசி என்றார் இவர். பாசிர் ரிஸ் வட்டாரத்தில் இந்திய உணவுவகைகளின் சுவை தழுவிய பீட்சா வகைகளை விற்பனை செய்யும் கடைக்குச் சொந்தக்காரராக 26 வயது டெரிக் இருக்கிறார்.

மேற்கத்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமானது பீட்சா. அதுவும் ஒரு சீன இளையர் தயாரித்து அசத்துவது அரிது. இவ்வாண்டு மார்ச் மாதம் ‘கோபீட்சா’ கடையைத் தொடங்கினார் இவர். கடையில் பிரபலமாக விற்கப்படுபவை பாலக் பன்னீர், காளான் மசாலா, பட்டர் சிக்கன் பீட்சா வகைகள் என்றார் அவர். சிங்கப்பூரில் முதல்முறையாக இந்திய உணவுவகை பாணியில் பீட்சா விற்கும் இக்கடையில், பீட்சாக்கள் உடனுக்குடன் அடுப்பில் இட்டு சுடப்படுகின்றன.

வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இந்தியர்கள் என்ற டெரிக் வேறு இனத்தவரும் புதுமையான பீட்சா சுவையை நாடி வருகின்றனர் என்றார். கல்வித் துறையில் பணியாற்றும் பெத், 31, “எனக்கு இந்திய உணவு மிகவும் பிடிக்கும். அதுவும் பீட்சாவாக சாப்பிடுவது மிகவும் வித்தியாசமான அனுபவமாக உள்ளது,” என்றார்.

அத்துடன் வழக்கமான பீட்சா வகைகளான ‘ஹவாயன்’ போன்றவையும் கடையில் விற்கப்படுகின்றன. தனக்கென ஒரு தொழிலை அமைத்துக் கொண்டு மேலும் பல கடைகளை நிறுவ முனைப்புடன் இருக்கும் டெரிக், சிறு வயதிலேயே சமையலை ஒரு கை பார்த்தவர்.

டெரிக்கின் பெற்றோர் முன்னதாக உணவங்காடித் தொழில் செய்து வந்தனர். சமையல் கலை அவரைச் சுண்டியிழுத்தது. 10 வயதில் முட்டை மட்டுமே பொரிக்க அறிந்திருந்த டெரிக், அதற்கு அப்பாற்பட்டு பிற உணவு வகைகளின் சமையல் முறைகளைக் கற்றுக்கொள்ள விரும்பினார்.

யூடியூப் காணொளிகளும் புகழ்பெற்ற சமையல் வல்லுநர்களின் சமையல் புத்தகங்களும் அவருக்குக் கை கொடுத்தன. 18 வயதில் ‘பாஸ்தா’, ‘எக்ஸ் பெனடிக்ட்’ போன்ற உணவு வகைகளைச் சமைக்கத் தொடங்கிய டெரிக், 21 வயதில் சமையல் துறையில் முழுவீச்சாக இறங்கினார். அவரது சமையலை ஒவ்வொரு முறையும் ருசித்துவிட்டு மேம்படுத்துவதற்கு அவரின் பெற்றோரும் நண்பர்களும் ஆலோசனை கூறுவர்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது தனது மாணவர் விடுதியில் தான் சமைத்த உணவுவகைகளை மற்ற மாணவர்களுக்கு விற்றார். அப்போது அவருடைய நண்பர்கள் பிரபல ‘மாஸ்டர்செஃப்’ சமையல் போட்டியில் கலந்துகொள்ளுமாறு பரிந்துரைத்தனர்.

அவர்களால் ஊக்கம் பெற்ற டெரிக், சிங்கப்பூரில் இடம்பெற்ற ‘மாஸ்டர்செஃப்’ சமையல் போட்டியின் இரண்டாவது சீசனில் வாகைசூடினார். பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயின்றபோது டெரிக் இனி சமையல்தான் எல்லாம் என்ற மன நிலைக்கு வந்தார். கல்வி மீது நாட்டம் இழந்து படிப்பைக் கைவிட்டார்.

‘மாஸ்டர்செஃப்’ போட்டியில் கலந்துகொண்டதன் மூலம் டெரிக் சமையல் துறையில் ஒரு குறிப்பிட்ட சமையல் வகையை மட்டும் சிறப்பாகத் தெரிந்து வைத்திருப்பதை விட இதர சமையல் வகைகளையும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

அதற்குப்பின் பல உணவகங்களில் பணியாற்றிய டெரிக், ஒரு சமயம் தனது காதலியுடன் பீட்சா சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது கோபீட்சாவின் தலைமை நிர்வாக அதிகாரி தன்னை அணுகியதாக நினைவுகூர்ந்தார். கோபீட்சா கடையின் உரிமம் பெற விரும்புவதாகவும் அதற்கு டெரிக்கின் பங்களிப்பு தேவைப்படுவதாகவும் அவர் டெரிக்கிடம் கூறினார்.

டெரிக் தன்னை ‘ஃபைன் டைனிங்’ எனும் உயர்தர உணவகம் நடத்தும் சமையல் வல்லுநராக நினைத்துப் பார்த்தபோதிலும் தனக்கு வழங்கப்பட்ட அந்த வாய்ப்பை நழுவவில்லை.

இன்று அவரது கடைக்கு வார நாள்களில் கிட்டத்தட்ட 50 வாடிக்கையாளர்களும் வாரயிறுதிகளில் கிட்டத்தட்ட 100 வாடிக்கையாளர்களும் வருகின்றனர். டெரிக் வயதில் இருப்பவர்கள் பொதுவாக உணவங்காடி நிலையத்தில் தொழில் நடத்துவது அரிதே. இருப்பினும், உணவங்காடித் தொழில் அழியாத ஒன்று என்றும் அதில் தன் தொழிலை அமைத்துக்கொண்டது பெருமைக்குரியது என்றும் சொன்னார் டெரிக்.

முழுநேரத் தனியார் சமையல்காரரான டெரிக், தனிப்பட்ட வகையில் உணவு மற்றும் குளிர்பான ஆலோசகராகவும் இருக்கிறார். மேலும், இவ்வாண்டு இறுதிக்குள் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உணவுக்கடை ஒன்று திறக்க ஆவலுடன் காத்திருக்கிறார் டெரிக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!