சண்முகம்: தொல்லை கொடுத்தல், ஊழியர் மனக்குறையை எதிர்கொள்ள நடைமுறைகள் உள்ளன

பணியிடத்தில் தொல்லை கொடுத்தல், ஊழியர்களின் மனக்குறை ஆகியவற்றை எதிர்கொள்ளத் தேவையான நடைமுறைகளை உள்துறைக் குழு கொண்டிருப்பதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

எவ்வித பாரபட்சமான போக்கும் சகித்துக்கொள்ளப்படாது என்று அவர் வலியுறுத்தினார்.

பணியிடத்தில் தமக்குத் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் இனப் பாகுபாடு காரணமாகப் பாதிக்கப்பட்டதாகவும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட காவல்துறை அதிகாரி யுவராஜா கோபால் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி அமைச்சர் சண்முகம் பிப்ரவரி 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசினார்.

அதிகாரிகள் சிலர் செய்த தவறுகள் மூடி மறைக்கப்பட்டதாகவும் யுவராஜா பதிவிட்டிருந்தார்.

அவர் முன்வைத்த சில குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்றும் அவை தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதாகவும் சில குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்றும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

உள்துறைக் குழுப் பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் 310 புகார்கள் அளிக்கப்பட்டதாக திரு சண்முகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பணியிடத்தில் தொல்லைக் கொடுத்தல், பாரபட்சத்துடன் நடந்துகொள்வது, முறையற்ற நடத்தை ஆகியவை தொடர்பாகப் புகார்கள் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

உள்துறைக் குழுவில் 29,000 அதிகாரிகளும் 7,700 முழுநேர தேசிய சேவையாளர்களும் உள்ளனர். இவர்களில் 10,000 அதிகாரிகளும் 4,000 முழுநேர தேசிய சேவையாளர்களும் சிங்கப்பூர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

310 புகார்கள் ஒவ்வொன்றும் விசாரிக்கப்பட்டதாகவும் அவற்றில் 131 ஆதாரபூர்வமானவை என்றும் திரு சண்முகம் கூறினார். தவறு செய்த அதிகாரிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

“சிங்கப்பூர் காவல்துறையில் எவ்வித தொல்லை கொடுத்தலுக்கும் பாரபட்சமான போக்குக்கும் இடமில்லை. இதை உறுதி செய்யும் பொறுப்பு என்னிடமிருந்து தொடங்கி, உள்துறை அமைச்சின் நிர்வாகம், உள்துறைக் குழுப் பிரிவுகளின் தலைவர்கள், அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் பொருந்தும்,” என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரி யுவராஜா தொடர்பான சம்பவத்துக்குப் பிறகு காவல்துறை அதன் கொள்கைகளை மறுஆய்வு செய்துள்ளதாக அவர் கூறினார்.

இனவாதக் கருத்துகளை வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ கூறினால் அது இனி முறையற்ற நடத்தையாகவும் கட்டொழுங்கு மீறலாகவும் கருதப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

அத்தகைய சம்பவம் நிகழ்ந்திருப்பதைப் பதிவு செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து, அவர் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை கண்டறிய உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவார் என்றும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

“இனவாதத்தைச் சகித்துக்கொள்ள முடியாது. தற்செயலாகக் கூறப்படும் இனவாத கருத்துகள், பிறரைச் சீண்டும் வகையில் கூறப்படும் இனவாத கருத்துகள், நகைச்சுவை எனக் கருதி கூறப்படும் இனவாத கருத்துகள் ஆகியவற்றையும் சகித்துக்கொள்ள முடியாது,” என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் காவல்துறையின் நெறிமுறைகள் குறித்து புதிதாகச் சேரும் அதிகாரிகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

அத்துடன் பணியிடத்தில் தொல்லை கொடுத்தல் பற்றியும் அத்தகைய நிகழ்வுகளைக் கண்டாலோ அல்லது அவற்றால் பாதிக்கப்பட்டாலோ என்ன செய்வது என்பது குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதிகாரிகளுக்குத் தொல்லை ஏற்படாத வேலைச் சூழலை அமைத்துத் தரவும் பணியிடத்தில் பிறர் தொல்லை கொடுத்து அவதியுறும் அதிகாரிகளுக்கு ஆதரவு தரவும் மேல் அதிகாரிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக அமைச்சர் சண்முகம் கூறினார்.

அதிகாரிகளின் மனநலத்துக்கு ஆதரவு அளிக்க உள்துறை அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளை அமைச்சர் மேற்கோள் காட்டினார்.

அதிகாரிகளுக்கான உளவியல் சேவை, சக ஊழியர் ஆதரவுத் திட்டம் ஆகியவை உள்ளன. உள்துறை அமைச்சின் உளவியல் நிபுணர்கள், ஆலோசகர்கள் ஆகியோருடன் தொடர்புகொள்ள நாள்தோறும் 24 மணி நேரம் இயங்கும் தொடர்பு எண் ஆகியவை திட்டத்தில் அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!