பண்டிகையை விட பணிக்கே முதலிடம்

தீபாவளித் திருநாளில் மக்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பண்டிகை குதூகலத்தில் திளைத்திருந்தபோது காவல்துறை சீருடையில் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கம்பீரமாக சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டார் நிவேதா விஜயகுமார்.

ரோச்சோர் அக்கம்பக்கக் காவல் நிலையத்தில் தரை நடவடிக்கைப் படை அதிகாரியாகப் பணியாற்றுகிறார் இந்த 21 வயது இளம்பெண். இவ்வாண்டு தீபாவளி நாளில் காலை 7 மணிக்குத் தொடங்கிய நிவேதாவின் பணி, நள்ளிரவைக் கடந்து 2 மணி வரையிலும் நீடித்தது. 

“நான் பணியில் சேர்ந்த பிறகு வரும் முதல் தீபாவளியாதலால் அன்றைய தினம் பணிக்குச் செல்ல முன்னரே திட்டமிட்டிருந்தேன். குறிப்பாக தீபாவளியன்று லிட்டில் இந்தியா வட்டாரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பெரும்பாலானவர்கள் தமிழ் பேசக் கூடியவர்கள். ஆகவே தமிழ் தெரிந்த என்னால் அவர்களுக்கு உதவ முடியும் என நினைத்தேன்,” என்று கூறினார் நிவேதா. 

தீபாவளி நாள் முழுவதும் பொதுமக்கள், வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் எனப் பல்வேறு தரப்பினருடன் உரையாடியதை நினைவுகூர்ந்தார் நிவேதா. 

கொண்டாட்ட உணர்வில் மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தைக் கவனித்து சுதாரிக்கத் தவறுவது இயல்பு என்றும் அச்சூழலில் பொதுமக்கள், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிகக் கவனம் செலுத்தியதாகவும் கூறினார் நிவேதா. 

“கடைக்காரர்கள் பலர் மகிழ்ச்சியான முகத்துடன் தீபாவளி வாழ்த்து கூறினர். அவர்களில் சிலர், காவல்துறை உடனிருப்பதால் இவ்வளவு கூட்டத்திலும் பயம் இல்லாமல் வியாபாரம் செய்ய முடிகிறது என்று நன்றி கூறினர். அவர்களின் மகிழ்ச்சி, மிகுந்த மனநிறைவை அளித்தது,” என்றும் அவர் பகிர்ந்துகொண்டார். 

தீபாவளியன்று பணிக்குச் செல்லும் திட்டத்தைக் கூறியபோது பெற்றோர் தன் உணர்வைப் புரிந்துகொண்டதாகவும் அரசாங்க ஊழியர்களான பெற்றோர் இருவரும் இது போன்ற முக்கிய பண்டிகை நாள்களில் பணிக்குச் செல்வது மிகச்சிறந்த அனுபவங்களைத் தரும் என்று கூறி அதிக ஊக்கமளித்ததாகவும் தெரிவித்தார் நிவேதா. இவருக்காக பெற்றோர், பாட்டி உட்பட உறவினர்கள் அனைவரும் சேர்ந்து தீபாவளிக்கு மறுநாள் தீபாவளியைக் கொண்டாடினர். 

பாலர்பள்ளிப் பருவத்திலிருந்தே காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் இருந்த நிவேதா இவ்வாண்டு பிப்ரவரி மாதம் ரோச்சார் அக்கம்பக்கக் காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்தார். 

“கிரைம் வாட்ச், மாட்டா மாட்டா போன்ற குற்றப் பின்னணித் தொடர்களைத்தான் இளம் வயதில் அதிகம் பார்ப்பேன். அவற்றில் வரும் காவல்துறை அதிகாரிகள் திறமையாகக் குற்றவாளிகளை அடையாளம்கண்டு கைதுசெய்வது என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவர்களைப் போலவே நானும் ஒருநாள்துணிச்சலுடன் செயல்படவேண்டும் என நினைத்துக்கொள்வேன்,” என்று தன் இளம்வயது நினைவுகளைப் பகிர்ந்தார் நிவேதா. 

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் இணையப் பாதுகாப்பு துறையைத் தேர்ந்தெடுத்து படித்த இவர் காவல்துறையில் இணைவதற்காக தன்னை ஒவ்வொரு நாளும் உடலளவிலும் மனத்தளவிலும் மெருகேற்றிவந்தார். 

“இளம்வயதில் கவனத்தைச் சிதறவிடாமல் கனவினை நோக்கியே ஒவ்வொரு நாளும் செயல்பட்டேன். இப்பணிக்கான தேர்வுகள், நேர்காணல்கள், மருத்துவப் பரிசோதனைகள் என ஒவ்வொரு கட்டத்திலும் சிரத்தையுடன் பங்குகொண்டேன்,” என்று கூறினார் நிவேதா. 

அதன்பின் ஆறு மாதப் பயிற்சியில் பல்வேறு சட்டதிட்டங்களைக் கற்றுத் தேர்ந்தார் இவர். பணியில் ஒவ்வொரு நாளுமே ஒவ்வொரு விதமாக இருக்கும் என்றும் இவர் கூறினார். 

“ஒருமுறை வயதுமுதிர்ந்த தாயார் ஒருவரைக் காணவில்லை என்று புகாரளிக்கப்பட்டது. வழியை மறந்த அவர் தொலைந்துவிட்டார். இச்சூழலில் புகார் வந்த இரண்டே மணி நேரத்திற்குள் என் குழுவுடன் சேர்ந்து அவரைப் பாதுகாப்பாக மீட்டோம். அதன்பின் அந்தத் தாயாரை பிள்ளைகளிடம் ஒப்படைத்த தருணம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் குடும்பமாக ஆரத் தழுவிய சம்பவம் இப்பொழுதும் என் மனக்கண்ணில் உள்ளது,” என்று குறிப்பிட்டார் நிவேதா. 

ஒவ்வொரு நாளும் சீருடை அணிந்து பணிக்குக் கிளம்பும்போது தேசத்தின் நலனுக்காக உழைக்கிறோம் என்ற எண்ணமே அதிக ஊக்கம் தரும். பல வேளைகளில் உடலும் மனமும் சோர்வுற்றாலும் இப்பணிக்கே உண்டான தனித்துவமும் பொறுப்புணர்வும் தனக்கு உத்வேகமளிப்பதாகச் சொன்னார் நிவேதா. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!