சுப காரியங்களுக்கு பசுமாடு, கன்றுக்குட்டி

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடமிருந்து நான்கறை வீடு வாங்கியதுடன் திரு ஆண்டனி சந்திரன் திருப்தியடையவில்லை. அவர் தமது வீட்டுக்குப் பசுமாடு ஒன்றையும் ஒரு கன்றுக்குட்டியையும் அழைத்து வந்தார்.

கடந்த புதன்கிழமை காலை 5.30 மணிக்கு ரேஸ் கோர்ஸ் சாலை புளோக் 681 மின்தூக்கியில் பசுமாடும் கூடவே கன்றுக்குட்டியும் வந்திருந்த வழக்கத்துக்கு மாறான காட்சியைச் சிலர் நின்று பார்த்தனர். அவற்றைக் கையாள்வதில் நன்குப் பழக்கப்பட்ட இருவர், அந்தப் பசுமாட்டையும் கன்றுக்குட்டியையும் மின்தூக்கியிலிருந்து வெளியே கொண்டுவந்தனர்.

சந்திரன் வசிக்கும் இரண்டாம் மாடியில் பூக்கள், மற்ற பூசைப் பொருள்களுடன் அலங்கரிக்கப்பட்ட கிரகப் பிரவேச வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.

மகாலட்சுமி என்ற இந்த நான்கு வயது, ஆறு மாதம் நிறைவடைந்த பசுவும் காயத்திரி என்ற எட்டு மாதக் கன்றுக்குட்டியும் லிம் சூ காங் சாலையில் அமைந்துள்ள விக்னேஷ் பால் பண்ணையிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன.

பின்னர், மகாலட்சுமிக்கும் காயத்திரிக்கும் மாலை அணிவிக்கப்பட்டு, அவற்றின் நெற்றியில் சந்தனம், குங்குமம் ஆகியவற்றை இட்டு, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் புரோகிதர் பிரபாகர் பட்டாச்சாரியார் விளக்கு ஆரத்தி எடுத்துப் பசுமாட்டையும் கன்றுக்குட்டியையும் வலம்வருமாறு சந்திரன் குடும்பத்தாரிடம் சொன்னார்.

இதைத் தொடர்ந்து அந்த அர்ச்சகர் பசுமாடு, கன்றுக்குட்டி இரண்டையும் ஒவ்வோர் அறையாக கூட்டிச் சென்று ஆசி வழங்க வைத்தார்.

சந்திரனும் அவரது குடும்ப உறுப்பினர்களும் பசுமாட்டுடனும் கன்றுக்குட்டியுடனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பின்னர், பிரபாகர் பட்டாச்சாரியார் கிரகப் பிரவேச பூசையைத் தொடங்கினார்.

“பசுமாடு வீட்டுக்கு வருவது இந்துக்களைப் பொறுத்தவரை சுப நிகழ்வு. அதற்குச் செய்யப்படும் பூசை கோவர்த்தன பூசை என்று அழைக்கப்படும்.

“கோ என்பது சமஸ்கிருதத்தில் பசுமாட்டைக் குறிக்கும், வர்த்தன என்பது பெருக்கத்தைக் குறிக்கும். பசுமாடு அன்னை மகாலட்சுமியின் திருவுருவங்களில் ஒன்று.

“பசுமாடு ஒருவர் இல்லத்திற்குள் வருவது அங்கு நிலவக்கூடிய எதிர்மறையான சக்திகளைப் போக்கும். அந்தக் குடும்பத்தில் செல்வம் கொழிக்கும், மகிழ்ச்சி பொங்கும், வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

“இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் கோ பூசைக்குப் பின்னரே பக்தர்களுக்குக் கோவில் திறந்துவிடப்படும்,” என்று பிரபாகர் பட்டாச்சாரியார் விளக்கினார்.

அதுவும் பசுமாடு ஒன்று சிறுநீர் கழித்தாலோ சாணி போட்டாலோ அந்தச் செயல் கூடுதல் ஆசிர்வாதமாகக் சிலர் கருதுவதும் உண்டு.

புதன்கிழமையன்று காயத்திரி கன்றுக்குட்டி சாணி போட்டு சந்திரன் வீட்டில் கூடியிருந்தோரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

“வீடு வாங்கும்போது பசுமாட்டைக் கூட்டிவந்து ஆசிர்வாதம் பெற வேண்டுமென்பது எனது நீண்டநாள் ஆசை. அந்த ஆசை நிறைவேறியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

“இது குறித்து நிறைய ஆராய்ச்சி செய்ததிலிருந்து தெரிந்துகொண்டது என்னவென்றால் கிரகப் பிரவேச பூசைகளில் பசுமாடு கலந்துகொள்வது மிகுந்த நன்மை அளிக்கும் என்பது,” என சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தாதியராகப் பணிபுரியும் திரு சந்திரன் கூறினார்.

இவருடைய இல்லத்தைப் பசுமாடு, கன்றுக்குட்டி இரண்டும் ஆசிர்வதித்தது திரு சந்திரனின் சகோதரி சரஸ்வதி கோவிந்தசாமி, மற்ற உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

திரு சந்திரன் வீட்டுச் சமய நிகழ்ச்சிகள் பலவற்றில் அவருடைய நீண்டநாள் நண்பர் கண்ணன் குவேக் பங்கேற்றுள்ளார்.

ஆனால், இதில் பசுமாடு ஒன்று கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றைக் கண்டது இதுவே முதல் முறை என்றார்.

“இப்படி ஆசி பெறுவது மனதுக்கு இதமாக இருக்கிறது. கோமாதாவான பசு ஒருவரின் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறது,” என்றார் ஆனந்த பவன் உணவகத்தில் பணிபுரியும் திரு குவேக்.

ஆனால் இந்த பூசை, ஆசிர்வாதம் எல்லாவற்றுக்கும் நிறைய செலவாயிற்று. பசுமாடு, கன்றுக்குட்டி உரிமையாளர்களான விக்னேஷ் பால் பண்ணைக்குத் திரு சந்திரன் $2,300 கட்ட வேண்டியிருந்தது.

பசுமாட்டை வீவக வீட்டுக்குள் அழைத்துவர சிங்கப்பூர் வேளாண்உணவு, கால்நடை ஆணையம், சிங்கப்பூர் நில ஆணையம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றிடமிருந்து அனுமதி பெற வேண்டியுள்ளதாக விக்னேஷ் பால் பண்ணை உரிமையாளரான ஜி.எஸ். மணியம் தெரிவித்தார்.

இதற்கு $1,500 ஆனதாக திரு மணியம் விளக்கினார்.

இதுபற்றிக் கூறும் திரு மணியம், “எனது பண்ணையில் 70 பசு மாடுகள், கன்றுக்குட்டிகள், காளை மாடுகள் உள்ளன.

“அவை பெரும்பாலும் பால் விநியோகத்துக்கு மட்டுமே. ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக அவற்றைச் சமய நிகழ்ச்சிகளுக்காக கோவில்களுக்கும் இல்லங்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளேன்.

“எனது விலங்குகள் எந்தச் சூழலுக்கும் ஏற்றவாறு நடந்துகொள்ளக்கூடியவை. சமய நிகழ்ச்சிகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அவற்றுக்கு நன்றாகவே தெரியும்,” என்று பெருமையுடன் தெரிவித்தார்.

சில தேர்ந்தெடுக்கப்பட்ட பசுமாடுகளுக்கு நல்ல முறையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால் அவற்றுக்குக் கனரக வாகனத்தில் எப்படி ஏற வேண்டும், மின்தூக்கியினுள் எவ்வாறு செல்ல வேண்டும் என்பது போன்றவை நன்கு தெரியும் என்றும் திரு மணியம் தெரிவித்தார்.

“இந்திய இந்துக்கள், குறிப்பாக தமிழர்களும் வட இந்தியர்களுமே எனது சேவையை நாடுகின்றனர்.

“எனினும், ஒரு முறை ஏழு பசுமாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் லோயாங்கில் உள்ள துவா பெக் கோங் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். அவை கோவிலை வலம் வந்து அங்கிருந்தவர்களை ஆசிர்வதித்தது. இது நடந்தது பசுமாடு ஆண்டில்,” என்று அவர் சொன்னார்.

பசுமாடு ஒன்று கோவிலுக்குச் சென்றுவர திரு மணியம் $1,300ஐக் கட்டணமாக வசூலிக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!