தமிழகத்தில் வெளியான சிங்கப்பூர்க் கவிதை நூல்

கவிமாலை அமைப்பின் தலைவர் இன்பாவின் ‘கடல் நாகங்கள் பொன்னி’ கவிதை நூல் தொகுப்பு, சென்னையின் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், புகழ்பெற்ற கவிஞர் மனுஷ்யபுத்திரனின் தலைமையில் சனிக்கிழமை (ஜனவரி 13) வெளியிடப்பட்டது.

இக்கவிதை நூல், புலம்பெயர்ந்த தமிழர்களின் உணர்வுகளையும், சிங்கப்பூர் வாழ்வினையும், பெண்ணாக இன்பாவின் உலகப் பார்வையையும் வெளிப்படுத்துகிறது.

விழாவில் கவிஞர் முத்துராசா குமாரின் ‘கழுமரம்’ என்ற நூலுக்கு ரூபாய் 25,000 ரொக்கப் பரிசுடன் திணைகள் கவிதை விருது ‘தமிழ்கியூப்’ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஏ டி பிள்ளையால் வழங்கப்பட்டது. இப்புதிய விருது ஆண்டுதோறும் வழங்கப்படவுள்ளது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் வருகையளித்தார்.

“கவிஞர் இன்பா ஒரு பன்முகக் கவிஞர் - கவிமாலைத் தலைவி, தொழில்நுட்ப வல்லுநர், இலக்கிய மேடைகளில் அற்புதத் தமிழ்ப் பேசக்கூடிய இலக்கியவாதி, தமிழகத்திலேயே எங்கள் சிங்கப்பூர்ப் பெண்மணியைப் பெருமையாக பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன்,” எனப் பாராட்டினார் திரு தினகரன்.

தமிழ்க் கவிதைச் சூழலில் மெளன வாசிப்புக் கவிதை, நவீன கவிதை, பின்நவீனக் கவிதை எழுதுவோர் எனப் பலதரப்பட்ட கவிஞர்களும் தம் விமர்சனங்களை வழங்கினர்.

“சிங்கப்பூருக்கும் தமிழ் இலக்கியத்திற்குமிடையே ஒரு  பாலமாக நூலாக அமைகிறது இன்பாவின் நூல்,” எனப் பாராட்டினார் வரவேற்புரை ஆற்றிய கவிஞர் தேவசீமா.

உலகத்தில் எல்லாம் அழிந்துவிடும், சொல்லைத் தவிர. சொல் மட்டும்தான் காலத்தை வென்று நிற்கும். அவ்வகையில் இன்பாவின் சொற்கள் காலத்தை வென்று நிற்கட்டும்.
கவிஞர் மனுஷ்யபுத்திரன்

“ஒரு நிலப்பரப்பிலிருந்து எழக்கூடிய வழக்கமான சொல்முறையைவிட நவீனமாக, தனிச்சாயலுடன் அமைகிறது கவிஞர் இன்பாவின் நூல்,” என்றும் அவர் பாராட்டினார்.

‘பெனடால்’ சக்கரம் பூட்டிய தேர் என்ற அவரது கவிதை வாழ்வில் மறக்க முடியாத ஒரு காட்சியை தன் மனத்திரையில் எழுப்பியதாகவும், இன்பாவின் கவிதைகளில் இசையுணர்வு அமைவதாகவும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் கூறினார்

நவீனக் கவிதையின் உரைநடையைக் கடந்து, இசையுணர்வும் கவிஞர் இன்பாவின் கவிதையில் இருக்கிறது என்றார் அவர்.

“பொதுவாக, டிசம்பர், ஜனவரி மாதம் முழுவதுமே நூல் வெளியீடுகள் நடைபெறுகின்றன. மற்ற மாதங்களில் இலக்கியம் பற்றிய பேச்சு பொதுவாக எழுவதில்லை. இந்நிலைமை மாறவேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

“தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் போன்ற பெருநகரத்துக்குச் செல்லும்போது பலதரப்பட்ட பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் கண்ணுறக்கூடிய பண்பாட்டு அதிர்ச்சி இன்பாவின் கவிதைத் தொகுப்புகளில் இடம்பெறுகிறது.” என்றார் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்.

“பொன்னி ஆறு கிளர்ந்தெழுந்து ஆறாக எழுந்திருக்கிறதா, அல்லது கடல்நாகங்கள் பொன்னியாக சுருங்கிவிட்டனவா? என்ற சிந்தனை எனக்குத் தோன்றுகிறது. இவை இரண்டையும் உள்வாங்கிய நீரூற்றாக இன்பா இருக்கிறார்,” எனப் புகழ்ந்தார் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி.

“தாய்க்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றமுடியாத வேதனை, மீனின் அழுகை என, வார்த்தைகளால் வருணிக்க முடியாதவையும் இன்பாவின் கவிதைகளில் இடம்பெறுகின்றன,” என்றார் மலையாளக் கவிஞர் வீரான்குட்டி.

“ஒரு பெண் என்ற தன்னிலையிலிருந்து எதிர்கொள்ளும் அனுபவங்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்,” என்றார் கவிஞர் மண்குதிரை.

“மரபுக் கவிதைகளை எழுதிவந்தவர், அதிநவீனக் கவிதைகளை நோக்கிச் செல்வது பாராட்டுதலுக்குரியது. இவ்விழாவில் ஒரு மலையாளக் கவியைப் பேச வைத்ததை நான் வாழ்த்துகிறேன்,” என்றார் கவிஞர் இந்திரன்.

தொடர்ந்து இதுபோன்ற கவிதை சார்ந்த படைப்புகளை வெளியிடவுள்ளதாக நூலின் பதிப்பாசிரியரான சால்ட் பதிப்பகத்தின் நரன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!