விழிப்புணர்வு இல்லாததால் மோசடியில் சிக்கிய வெளிநாட்டு ஊழியர்

ஆள்மாறாட்டப் பண மோசடி குறித்த விழிப்புணர்வு இல்லாததால் தன்னிடமிருந்த மொத்தப் பணத்தையும் ($834) இழந்து தவிக்கிறார் வெளிநாட்டு ஊழியர் முனியாண்டி இளையராஜா, 35.

தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஐந்து மாதங்களாக சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஜனவரி 17ஆம் தேதியன்று நண்பரைக் காணச் சென்றார் திரு இளையராஜா. வழியில் அவருக்கு வந்த ஒரு காணொளி அழைப்பில், முகக்கவசம் அணிந்த இருவர் தங்களை மனிதவள அமைச்சைச் சேர்ந்தவர்கள் என அறிமுகம் செய்துகொண்டு, கடவுச் சீட்டு, அடையாள அட்டை, வங்கிப் பற்றட்டை, வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களைக் கேட்டுள்ளனர்.

அதனை உண்மை என நம்பிய இளையராஜா, அனைத்து விவரங்களையும் தந்துள்ளார். பின்னர் கைப்பேசியில் ‘ஓடிபி’ அனுப்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். தனது கைப்பேசியில் பணமில்லாததால் குறுந்தகவல் வராது என்று இளையராஜா கூறினார்.

எனினும், அவரிடம் இரண்டு வங்கி கணக்குகள் இருப்பதால் ‘பின்’ எண் முடக்கப்பட்டு விட்டது, அதனை உடனடியாக மீட்க நாங்கள் சொல்வதைச் செய்யவேண்டும் எனவும், இதனை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் அந்த மோசடிப் பேர்வழிகள் மிரட்டினர்.

ஏதுமறியாத இளையராஜா, அவர்கள் கூறியபடி அருகிலுள்ள ஏடிஎம் மையத்துக்கு சென்று அவர்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு முறையே 35 வெள்ளி, 799 வெள்ளி இருமுறை அனுப்பினார். இது உடனடியாக அவரது சொந்த கணக்கிற்கு திருப்பிச் செலுத்தப்படும் என அவர்கள் கூறியதை நம்பி, இளையராஜா ஏமாந்துபோனார்.

நண்பர்கள் மூலம் இது மோசடி எனத் தெரிய வரவே, காவல்துறையில் புகார் அளித்த இளையராஜா, உடனடியாக தன வங்கிக் கணக்கையும் முடக்கினார். இருப்பினும், பணம் மீண்டும் கிட்டுவது கடினம் என அனைவரும் சொல்வதாக அவர் கண்ணீர் மல்கச் சொன்னார்.

“என் மனைவி, இரு சிறு குழந்தைகளை சொந்த ஊரில் விட்டு வந்து, இங்கு உழைத்துச் சேர்த்த பணத்தை அறியாமையால் தொலைத்து நிற்கிறேன்,” எனக் கதறி அழும் அவர், இனி யாரும் இதுபோல விழிப்புணர்வின்றி ஏமாற வேண்டாமென கேட்டுக்கொண்டார்.

இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிராமல் இருப்பது அவசியம். திறன்பேசியில் ‘ஸ்கேம்ஷீல்ட்’ செயலியைப் பதிவிறக்கம் செய்து, அனைத்துக் கணக்குகளையும் ஈரடுக்கு உறுதிப்பாடு போன்ற பாதுகாப்பு அம்சங்களை அமைத்துக்கொள்வது உதவும்.

மோசடித் தடுப்பு குறித்த அண்மைய ஆலோசனைகளைப் பெற தேசிய குற்றத் தடுப்பு மன்றத்தின் (NCPC) மோசடி எச்சரிக்கை வாட்ஸ்அப் கணக்கைத் தொடரலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!