ஊசலாடும் பொம்மலாட்டம்; உயிர்கொடுக்கும் கலைமாமணி

பொம்மலாட்டக் கலை மிகப் பழைமையானது. மரப்பாவைக்கலை, தோல்பாவைக் கலை என்று அது இரு வகைப்படும். தோல்பாவை என்பது விலங்குத் தோலாலான உருவத்தைக்கொண்டு விளக்கொளியில் திரையில் நிழல் விழவைத்து நடத்தப்படும் கலை. அது நிழலாட்டம் என்றும் குறிப்பிடப்படும். 

‘இந்தியன்’ திரைப்படத்தில் நடிகை சுகன்யா நடத்தும் பொம்மலாட்டத்தை நீங்கள் பார்த்து இருக்கலாம்.  அந்தக் காட்சிக்குச் சொந்தக்காரர் மயிலாடுதுறையைச் சேர்ந்த கலைமாமணி எம். சோமசுந்தரம், 63. இவர் பரம்பரை பொம்மலாட்டக் கலைஞர். 

‘ஸ்ரீ கணநாதர் பொம்மை நாடக சபா’ என்ற நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். இவரின் குழுவில் மொத்தம் 12 பேர்; எல்லாருமே 50 வயதைக் கடந்தவர்கள்.

“என் தந்தை திரு ஏ.எஸ். மாணிக்கவாசகம், அவரின் தாய்மாமாவிடம் இருந்து இந்தக் கலையைக் கற்றார். நான் என் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டேன். 

“எனக்கு  இரு மகள்கள், இரு மகன்கள். என் மகன்கள் இரண்டு பேருமே தகவல் தொழில்நுட்பம், பொறியியல் படித்தவர்கள் என்றாலும் எனக்குப் பிறகும் பொம்மலாட்டக்கலை தொடர வேண்டும் என்பதால் அவர்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தி வருகிறேன். 

“என் தலைமையில் செயல்படும் பொம்மை நாடக சபா கலைஞர்கள் எல்லாருமே சகலகலாவல்லவர்கள். 

“பாடுவதும் பேசுவதும் பொம்மையை ஆட்டுவிப்பதும் பலருக்கும் தெரியும். ராஜேந்திரன் என்ற முதியவர் பொம்மைகளைக் கதைக்கு, காட்சிக்கு ஏற்ப நடிக்க வைப்பதில் கைதேர்ந்த கலைஞர். 

“மொத்தம் 46 கதைகள் உள்ளன. சரித்திரக் கதைகள், சமூகக் கதைகள், புராணக் கதைகள், தெய்வீகக் கதைகள் எல்லாம் உண்டு. 

“ஒரு கதைக்கான காட்சிகளை உடனடியாக அமைத்து, கதைக்கேற்ற உடுப்புகளுடன் மூன்று மணி நேரத்தில் தயாராகிவிடுவோம். உள்ளூர்ப் பகுதிகளில் நிகழ்ச்சி நடத்த ரூ.10,000 வரை கேட்போம். வெளியூர் என்றால் க்குவரத்துச் செலவு, தங்குமிடச் செலவு எல்லாம் தனி. 

“பொம்மைகள் எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதால் கல்யாண முருங்கை, அத்தி மரத்தில் செய்வோம்.   

“முகம், கை, கால் என ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாகச் செய்து மெழுகு பூசி, வண்ணம் தீட்டி கெடாமல் வைத்துக்கொள்வோம். கனமான நூல் கயிற்றால் பொம்மையின் எல்லா பகுதிகளையும் சேர்த்துக் கோத்து கட்டி இணைத்துக்கொள்வோம். நாடகத்திற்கு ஏற்ப சோடித்து தயார்செய்வோம்.

“கையில் ஓரடி நீள குச்சியில் பொம்மையின் கயிறு கட்டி இருக்கும். அந்தக் குச்சியை ஆட்டி அசைத்து இழுத்து, தளர்த்தி பொம்மையை நடிக்க வைப்போம்,” என்றார் திரு சுந்தரம்.

 

விருதுகள்
 
“சென்ற நூற்றாண்டில், 1971ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த அகில இந்திய பொம்மலாட்ட விழாவில் என் தந்தை திரு மாணிக்கவாசகம் தலைமையிலான குழுவில் நானும் இடம்பெற்று இருந்தேன். 

“அரிச்சந்திர பொம்மலாட்ட நாடகத்தை நடத்தி என் தந்தை வெள்ளிக் கோப்பையை பரிசாகப் பெற்றார்,” என்று கூறிய திரு சுந்தரம், தம் தந்தை கோப்பையுடன் இருக்கும் ஒரு படத்தைக் காட்டினார். 

திரு சுந்தரம், 1986ஆம் ஆண்டில் ஜெர்மனியில் நடந்த அகில உலக பொம்மலாட்ட விழாவில் கலந்துகொண்டு, அந்த நாட்டில் 15 இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி பாராட்டுகளை, பரிசுகளை, விருதுகளைப் பெற்றவர். பொம்மலாட்டக் கலைக்கு இவர் ஆற்றிவரும் சேவைகளை, தொண்டுகளைப் பாராட்டி 2015ஆம் ஆண்டில் ‘கலைமாமணி’ விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்தது.

 

நலிந்த கலைஞர்களுக்கு உதவி

தமிழ்நாட்டு அரசின் இயல், இசை, நாடக மன்றம், நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்குகிறது.

“என் குழுவில் இருக்கும் சிலர் அத்தொகையைப் பெறுகிறார்கள். நான் இனிமேல்தான் விண்ணப்பம் செய்ய வேண்டும். எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அம்மன்றத்தின் கலை பண்பாட்டுத்துறை ஆண்டுக்கு ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பைக் கொடுக்கிறது.

“அரசாங்கத்தின் சார்பில் செயல்படும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம். நலிந்த கலைஞர்களுக்கு மருத்துவச் செலவு, ஈமச்சடங்கு உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறது. 

“பொம்மலாட்டக் கலைக்கு மக்களிடத்தில் ஆதரவு உள்ளது. ஆனால், நவீன ஊடகங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பொம்மலாட்டக் கலையும் கலைஞர்களும் தடுமாறுகிறோம். 

“கிராமப் பஞ்சாயத்து போன்ற அமைப்புகள் பொம்மலாட்டம் மூலம் தங்கள் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க ஓரிரு வாய்ப்புகளை வழங்குகின்றன. என் கலை சபாவையும் சேர்த்து தமிழ்நாட்டில் நான்கு, ஐந்து பொம்மலாட்டக் குழுக்கள்தான் உள்ளன. 

“நிலைமை இப்படியே போனால் வெகுவிரைவில் இந்தக் கலை மறைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைக் கற்றுக்கொள்ள இளையர்கள் விரும்புகிறார்கள். ஆனால் வருமானம் இல்லாததால் முன்வருவதில்லை.  

“எனக்குப் பிறகும் இந்தக் கலை தொடர வேண்டும் என்பதால் என் புதல்வர்களை இதில் ஈடுபடுத்தி வருகிறேன். அவர்கள் வேலை பார்க்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது என்னுடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.

“மாணவர்களுக்கு நன்னெறிகளைப் போதிப்பது, புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுப்பது போன்றவற்றுக்கு அரசாங்கம் பொம்மலாட்டக் கலையைப் பயன்படுத்தலாம். இதனால் நாங்களும் வாழ்வோம், கலையும் நிலைக்கும்,” என்று கூறினார் திரு சுந்தரம். 

அவரிடம் இருந்து நான் விடைபெற்றபோது, ஊசலாடும் பொம்மலாட்டக் கலைக்கு உயிர்கொடுத்து நிலைநாட்ட திரு சுந்தரம் போன்றவர்கள் அரும்பாடுபடுகிறார்கள் என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. அதனை ஆமோதிப்பதைப்போல அவரின் பொம்மலாட்டப் பொம்மைகள் மேலும் கீழும் தலையசைத்தன.
 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!