தஞ்சோங் பகார் கட்டட விபத்தில் இறந்த வினோத்குமார்

‘மோட்டார்சைக்கிள் வாங்கும் கனவுடன் சிங்கப்பூர் வந்தார்’

தஞ்சோங் பகாரில் இடிக்கப்பட்ட கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்த சம்பவத்தில் காணாமல்போன ஊழியர் வினோத்குமார் திருப்பதி (வயது 20) இறந்துவிட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் ஃபியுஜி செராக்ஸ் டவர்ஸ் கட்டடம் இடிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியிலிருந்த 10 மீட்டர் நீளமும் 3.8 மீட்டர் உயரமும் உடைய சுவர் ஒன்று சரிந்து விழுந்தது. 

சம்பவத்தின்போது பணியில் இருந்த 20திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ‘அய்க் சன் டிமாலிஷன் அண்ட் இன்ஜினியரிங்’ நிறுவனத்தில் பணிபுரிந்த வினோத்குமாரை மட்டும் காணவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் ஏறத்தாழ 6 மணி நேர தேடலுக்குப் பின் வினோத்குமாரின் உடலை மீட்டனர். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டுமானத்துறை பணியில் சேருவதற்காக வினோத்குமார் முதன்முறையாக சிங்கப்பூர் வந்தார். தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அவர். 

திருச்சியில் இயந்திரவியல் பொறியியல் துறையில் பட்டயக்கல்வியை முடித்த அவர், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். தினக்கூலிகளாக பணிபுரியும் பெற்றோரின் மூத்த மகனான வினோத்துக்கு 17 வயதில் ஒரு தம்பி பட்டயக்கல்வி படித்து வருகிறார். 

இளம்வயதிலிருந்தே தான் வளர்த்து ஆளாக்கிய பிள்ளையை பறிகொடுத்துவிட்டதாக கூறி கண்ணீர்வடித்தார் வினோத்குமாரின் உறவினரான ராஜமாணிக்கம் திருப்பதி, 44. 

வினோத்குமாரின் பாட்டியின் இளைய சகோதரரான இவர், ஏறத்தாழ ரூ.2.5 லட்சத்தைக் கடனாக பெற்று வினோத்குமாரை சிங்கப்பூருக்கு அழைத்து வந்தார். 

வினோத்குமாரின் உடலை பெற்றுக்கொள்ள சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 16) மதியம் சென்ற திரு ராஜமாணிக்கம், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். 

பணியில் சேர்ந்த நாளிலிருந்தே பொறுப்புணர்வுடன் சிக்கனமாக வருமானத்தை சேமித்து வந்த வினோத்குமார் இளம் வயதிலிருந்தே தன் வயது மீறிய பக்குவத்துடன் இருந்துள்ளதாக திரு ராஜமாணிக்கம் குறிப்பிட்டார். 

மாதம் $800 முதல் $900 வரை வருமானம் ஈட்டி வந்த வினோத்குமார், தனக்காக திரு ராஜமாணிக்கம் பெற்ற கடன்தொகையில் முக்கால்வாசியை அடைத்துவிட்டார். 

சிறு வயதிலிருந்தே மோட்டார்சைக்கிள் மீது அலாதி பிரியம் கொண்ட அவர், முழுவதுமாக கடனை அடைத்த பின்னர் பணம் சேமித்து உயர் ரக மோட்டாரிசைக்கிள் ஒன்றை தன் சொந்த வருமானத்தில் வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருந்ததாக வினோத்குமாரின் தாய்வழி உறவினர் ஜெய்ஷங்கர் செல்வம், 28, கூறினார். 

வினோத்குமாரின் உறவினர்கள் மொத்தம் 8 பேர் சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் பணிபுரிகின்றனர். அவர்களுள் இதே நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரியும் வினோத்குமாரின் தாய்மாமாவான கார்த்திக் சாமுடி, 29, “எதிர்பாராத இச்சம்பவத்தை ஏற்க இயலவில்லை. பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் கட்டடப்பணி தொடர்பான எச்சரிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வினோத் இவ்விபத்தில் சிக்கியதை நினைத்துப் பார்க்க முடியவில்லை,” என்று கூறினார். 

வினோத்குமாரின் மற்றோர் உறவினரான 30 வயது சரண்ராஜ் காமராஜ், “தகவல் கிடைத்த பின்னரும் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். நிலநடுக்கத்துக்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து அதிர்ஷ்டவசமாக பலரும் உயிர்பிழைத்த சம்பவங்கள்போல வினோத்தும் உயிருடன் மீட்கப்படுவான் என்றே எதிர்பார்த்திருந்தோம்,” என்று தெரிவித்தார்.  

இயல்பாகவே அன்பாகப் பழகும் குணமுடைய வினோத்குமார் குடும்ப பொருளாதார நிலையை முன்னேற்றிய பின்னர் தன் சொந்த ஊருக்குத் திரும்பும் திட்டத்துடன் இருந்ததாக உறவினர் பிரபாகரன் செல்வம், 28, கூறினார். 

பத்து மாதங்களுக்கு முன்னர் வினோத்துடன் ஒரே விமானத்தில் சிங்கப்பூர் வந்த அவர், இது தங்களுடைய குடும்பத்திற்கே ஈடுகட்ட முடியாத பேரிழப்பு என்றும் கூறினார்.

வினோத்குமாரின் நல்லுடல் இறுதிச் சடங்கிற்காக சனிக்கிழமை காலை விமானத்தில் சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்படுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

செய்தி: மோனலிசா, லாவண்யா வீரராகவன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!