ஊக்கமும் உற்பத்தித்திறனும் பெருக மனநலன் மிக முக்கியம்

உருவம் இல்லை என்றாலும் நம்மை எல்லாம் ஆட்டுவிப்பது மனம்தான். உடல் நலனைப் போலவே மனநலனும் நமக்கு மிக முக்கியமானது. உடல் நலனில் கோளாறு வந்தால், பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவரை நாடுவது வழக்கம்.

ஆனால், மனநலனில் ஏதாவது பிரச்சினை, கோளாறு ஏற்படும்போது பொதுவாகவே அதைப் பலரும் அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். மனநலம் சரியில்லாத ஒருவரைச் சமூகம் வேறு மாதிரியாகப் பார்க்கும் என்ற எண்ணம் நெடுங்காலமாக மக்கள் மனதில் ஊறி வந்திருப்பதே இதற்கான காரணம்.

இருந்தாலும் இப்போது காலம் மாறிவிட்டது. நாம் வளர்ந்த சமூகமாக, பக்குவப்பட்டவர்களாக, மனமுதிர்ச்சியடைந்த சமூகமாக மாறிவிட்டோம். இந்தச் சூழலில் மனநலம் என்பது மனம் விட்டு வெளிப்படையாகப் பேசக்கூடியதாக இருக்க வேண்டும்.

இதில் இனி ஒளிவுமறைவுக்கே வேலை இல்லை. ஒரு நாட்டின் மக்களுக்கு மனநலம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

சிங்கப்பூரில் மக்களிடையே மனநலம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

டியூக் என்யுஎஸ் மருத்துவப் பள்ளியும் மனநலக் கழகமும் நடத்திய அந்த ஆய்வு மூலம் முக்கியமான ஒரு நிலவரம் தெரியவந்துள்ளது.

அதாவது சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் மனநலம் என்பது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை என்பதை அந்த ஆய்வு எடுத்துக்காட்டி இருக்கிறது.

கொவிட்-19க்குப் பிறகு மக்களிடையே மனநலம் எப்படி என்பதைக் கண்டறியும் நோக்கத்தில் சென்ற ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 21 வயதுக்கு மேற்பட்ட 5,725 சிங்கப்பூரர்கள் உள்ளடக்கப்பட்டனர்.

மக்களிடையே மனச்சோர்வும் கவலை, பதற்றமும் நிலவுகின்றன. அதன் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு ஏறக்குறைய 16 பில்லியன் வெள்ளி இழப்பு ஏற்படக்கூடும். இந்த இழப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.9% என்பதை எல்லாம் ஆய்வு வெளிப்படுத்தியது.

மனச்சோர்வு, கவலை, பதற்றம், படபடப்பு காரணமாக வேலைக்குச் செல்லாமல் மட்டம்போடும் போக்கு ஏற்படுகிறது. உற்பத்தித்திறன் குறைகிறது. சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.

கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக படுமோசமான பிரச்சினைகள் ஆண்டுக் கணக்கில் ஏற்பட்டு அதனால் மக்கள் மனநலன் பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், சிங்கப்பூரைப் பொறுத்தவரை இதில் வேறு ஓர் அம்சம் மேலும் கவலை தருவதாக உள்ளது.

மனஉளைச்சலுக்கு உட்பட்டு இருந்த காலகட்டத்திற்குப் பிறகு அதில் இருந்து மீண்டு வந்த தேசிய மீட்சி அளவைப் பார்க்கையில் சிறந்த பலன் ஏற்பட்டு இருப்பதாகத் தெரியவில்லை என்கிறது ஆய்வு.

உடன்நலனுக்குப் பாதிப்பு வந்தால், நோய் ஏற்பட்டால் எப்படி உடனடியாகச் சிகிச்சையை நாடுகிறோமோ அதேபோல மனப் பிரச்சினைகளும் கையாளப்பட வேண்டும் என்பதை அந்த ஆய்வு பாடமாக நமக்குப் போதிக்கிறது.

சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் உலகத்தரம் வாய்ந்தவை. அரசாங்க, தனியார் மருத்துவமனைகளும் பலதுறை மருந்தகங்கள், தனியார் மருத்துவர்கள், சிறப்பு வல்லுநர்கள் உள்ளிட்ட அனைவரும் மக்களின் உடல்நலனுக்கு, நல்வாழ்விற்கு ஆற்றும் சேவைகள் உலகளவில் முதல் தரமானவை.

அதேபோல, மனநலக் கழகமும் தனியார் அமைப்புகளும் குடிமைச் சமூக அமைப்புகளும் மக்களின் மனநலனில் கவனம் செலுத்தி அதைப் பாதுகாக்கப் போராடுகின்றன.

மனநலப் பிரச்சினை நமக்கு இருந்தால், அது வெளியே தெரிந்தால் நம்மை மற்றவர்கள் தாழ்வாக நினைப்பார்கள் என்ற மனப்போக்கு இன்னமும் நிலவுவதால் பலரும் முன்னதாகவே உரிய சிகிச்சையை நாடி மனநலப் பிரச்சினையைத் தவிர்த்துக்கொள்ள முயல்வதில்லை.

பல வாய்ப்பு வசதிகள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளாமல் சிலர் மவுனமாகவே இருந்து விடுகிறார்கள்.

தங்களுக்கு மனநலப் பிரச்சினை இருப்பது தெரிந்தும் அதற்குத் தீர்வு காணாமல் ஒதுங்கிவிடுபவர்களும் உண்டு. இந்தப் போக்குகள் தேவையில்லாதவை.

உடல்நலன் மட்டும் போதாது. மனநலனும் முக்கியம். இரு நலன்களும்தான் முழு நலம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நிறுவனங்களைப் பொறுத்தவரை ஊழியரின் மனநலனும் உற்சாகமும் மிக முக்கியமானவை. தொழிலாளர்களின் மனஉளைச்சல்களை, நெருக்கடிகளைப் புரிந்துகொண்டு அவர்களிடம் கருணையுடன் நடந்துகொண்டு ஊழியர்களைச் செம்மையாகக் கையாளும் நிறுவனங்கள், ஊக்கமிக்க உயர்தர ஊழியர்களைக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

அப்படிப்பட்ட ஒரு சூழலில் மனப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் ஊழியர்கள், தாங்களாகவே முன்னதாகவே முன்வந்து உதவி நாடுவார்கள்.

சிங்கப்பூரில் ஊழியர்களின் மனநலப் பிரச்சினைகளுக்கு உதவும் முயற்சிகளை நிறுவனங்கள் முடுக்கிவிட்டு வருகின்றன.

காப்புறுதித் திட்டங்களில் மனநல நன்மைகளையும் உள்ளடக்கும் நிறுவனங்கள் முன்பைவிட இப்போது அதிகம். இது வரவேற்கத்தக்க ஒரு நிலவரம்.

மனச்சோர்வு, கவலை, பதற்றம் போன்றவை எல்லாம் உற்பத்தித்திறனைப் பெரிதும் பாதிக்கக்கூடியவை என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

மனதளவில் பாதிப்பு உள்ளோருக்குக் கைகொடுத்து உதவ நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

குடும்பத்தினரும் பல்வேறு அமைப்புகளும் பராமரிப்புச் சேவை அமைப்புகளும் நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் இதில் நாம் விரும்பிய பலனை அடையலாம் என்பது திண்ணம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!