புதுக் குடியேறிகள் தனித்திராமல் சமூகத்துடன் இணைய வேண்டும்

அந்தக் காலத்தைப் போல் இந்தக் காலம் இல்லை. ஏறக்குறைய எல்லாமே மாறிவிட்டன. தங்கள் நாட்டில் இருந்து வேறு நாட்டிற்கு குடியேறுவோரும் இதற்கு விதிவிலக்கல்ல.

முன்பு ஒரு காலத்தில் பிழைப்பு தேடி நாடுவிட்டு நாடு குடியேறியவர்களில் பெரும்பாலானோர் முடிந்தவரை சம்பாதித்துக்கொண்டு தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிவிடலாம் என்ற எண்ணத்துடன்தான் இருந்தார்கள்.

சிங்கப்பூருக்கு வந்த இந்தியர்கள், சீனர்களில் பலரும் இந்தச் சிந்தனையுடன்தான் அப்போது இங்கு குடியேறினர். கட்டாயத்தின்பேரில் பலவந்தமாக வந்தவர்களும் உண்டு.

அப்படி வந்த இந்தியர்கள், சீனர்களில் பலரும் தாங்கள் குடியேறிய இந்தப் புதிய நாட்டில் தங்கள் வாழ்வை நிலைநாட்டிக்கொள்ளத் தோதாக தங்களுக்கு இடையில் நல்ல உறவுக் கட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டனர்.

அன்றாட வாழ்வில் பல இனத்தவரும் சேர்ந்து ஒரே சமூகமாகச் செயல்படும் கலாசாரம் அப்படித்தான் உருவானது. இதுதான் பன்மைய சமூகம் பரிணமிக்க அடித்தளமிட்டது.

இப்படி தற்காலிகமாக வந்தவர்கள் குடியேறிகளாக மாறி, இங்கு வாழ்ந்துவந்த மற்றவர்களோடு சேர்ந்து வாழத் தொடங்கினர். அத்தகைய குடியேறிகள் தங்களின் பூர்வீக நாட்டைவிட சிங்கப்பூரின் எதிர்காலத்தில் மிக நாட்டம் கொண்டு சேர்ந்து பாடுபடத் தொடங்கினர்.

ஆனால், இப்போது காலமும் மாறிவிட்டது. குடியேறிகளும் மாறிவிட்டனர்.

நாடுவிட்டு நாடு செல்லும் இப்போதைய மக்களில் பலரும் மெத்தப் படித்தவர்கள். வெகு திறனாளர்கள். எங்கு வாய்ப்பு வசதிகள் அதிகமோ அங்கு குடியேறும் போக்கு அவர்களிடம் காணப்படுகிறது.

அப்படியே குடியேறினாலும் அத்தகைய கல்வியாளர்களில் பலரும் தாங்கள் குடியேறும் நாட்டின் சமூகத்துடன் ஒருங்கிணையாமல் தங்களுக்கிடையே ஒரு குழுமத்தை அமைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள்.

ஆனால், இத்தகைய ஒரு போக்கு பொருத்தமானதாக, விரும்பத்தக்கதாகத் தெரியவில்லை.

தேசிய ஒருங்கிணைப்பு என்பது பல கலாசார, பல சமய நாடான சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஒன்று. ஆகையால்தான் நாடு சுதந்திரம் அடைந்தது முதலே பல இனத் தன்மையைப் பலப்படுத்தி பொதுவான தேசிய அடையாளத்தை ஏற்படுத்த இடைவிடாமல் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.

இருந்தாலும் தலைமுறை இடைவெளி காரணமாக அப்போதைய குடியேறிகளுக்கும் இப்போதைய குடியேறிகளுக்கும் ஏராளமான வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஆகையால், புதிய குடியேறிகளைச் சமூகத்துடன் ஒருங்கிணைப்பதில் இப்போதைய ஒருங்கிணைப்பு நடைமுறைகள் எந்த அளவுக்கு ஆற்றல்மிக்கவையாக இருக்கின்றன என்பதைக் கண்டறிய வேண்டிய தேவை இருக்கிறது.

இத்தகைய ஏற்பாடுகளைப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமும் ஏற்பட்டு இருக்கிறது. சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாக்கோப், கொள்கை ஆய்வுக் கழகத்தின் 35வது ஆண்டுவிழா விருந்தில் உரையாற்றியபோது இந்தப் பிரச்சினை பற்றி குறிப்பிட்டார்.

தேசிய ஒருங்கிணைப்பைப் பொறுத்தவரை சமூகத்தில் மெத்தனப்போக்கு கூடாது என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

சிங்கப்பூரில் குடியேறும் அனைவருமே தாங்கள் சிங்கப்பூரர்களுடன் கலந்துறவாடி ஒன்றிணைந்து வாழ வேண்டியது தேவையான ஒன்று என்ற எண்ணத்துடன் திகழ்வதாகத் தெரியவில்லை. சிங்கப்பூரர்களின் வாழ்க்கை வழியில் அவர்கள் பயணிப்பதில்லை.

அத்தகைய குடியேறிகள் தங்களைப் போன்ற குடியேறிகளுடன் சேர்ந்து ஒரு குழுமத்தை உருவாக்கிக்கொண்டு தங்களுக்கிடையே கலந்துறவாடி வாழ்வதே போதுமானதாக, மிகவும் வசதியானதாக இருக்கிறது என்று கருதுவதாகத் தெரிகிறது.

எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உலகத் திறனாளர்களுக்கு அவர்களின் தேர்ச்சி, திறன்களுக்கு உலகம் முழுவதுமே தேவை அதிகமாக இருக்கிறது. அவர்கள் உலகமயமானவர்களாக செயல்படுகிறார்கள்.

சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு அவர்களைக் கவர்கின்றன.

இப்போதைய உலகில் சீனாவும் இந்தியாவும் வல்லரசுகளாக தலையெடுக்கின்றன.

சிங்கப்பூரில் குடியேறும் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களில் சிலர் சிங்கப்பூரில் வாழ்கின்ற தங்கள் இனத்தாரிடம்கூட ஒன்றிணைந்து வாழாமல் தனித்து தங்களுக்கிடையே கலந்துறவாடி வாழும் ஒரு போக்கை கடைப்பிடிக்கிறார்கள்.

உள்ளூர் சமூகங்களில் சேராமல் சிங்கப்பூரர்களின் வாழ்வில் ஐக்கியமாகாமல் தனிக்கூட்டமாக அவர்கள் காணப்படுகிறார்கள்.

இது கவலை தரும் போக்காக இருக்கிறது. இதைத்தான் அதிபரும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

எப்படிப் பார்த்தாலும் இத்தகைய ஒரு போக்கு குறுகிய கண்ணோட்டத்துடன் கூடிய ஒன்றாகத்தான் தெரிகிறது.

இந்தப் பிரச்சினை குடியேற்றத்தால் ஏற்படுவதல்ல. குடியேறும் சிலரிடம் காணப்படும் மனப்போக்கே இதற்குக் காரணம்.

சிங்கப்பூரின் பொருளியலுக்குக் குடியேறிகள் மதிப்பு கூட்டுகிறார்கள். இருந்தாலும் அந்தப் பொருளியலை நீடித்து, நிலைப்பெறச் செய்வது உள்ளூர் சமூகம்தான் என்பது இதில் முக்கியமான ஒன்று. சிங்கப்பூர் பொருளியல் உலகக் குடியேறிகளை இங்கு ஈர்க்கிறது. அப்படி வருவோர் தேசிய பிணைப்பைப் பலப்படுத்த உதவ வேண்டும்.

இப்படிச் செய்யாமல் சில குடியேறிகள் தனித்து ஒதுங்கும் போக்கைக் கடைப்பிடிப்பது நாட்டின் பல இனத் தன்மைக்கு நல்லதல்ல என்பதை எல்லாரும் குறிப்பாக அத்தகைய குடியேறிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பள்ளிக்கூடங்களிலும் வேலையிடங்களிலும் சமூகத்திலும் குடியேறிகளை ஈடுபடுத்தி அதன்மூலம் சிங்கப்பூரர்களும் இதில் உதவிக்கரம் நீட்ட வேண்டும். சிங்கப்பூரைப் பொறுத்தவரை தேசிய ஒருங்கிணைப்புதான் இமாலய பலம் என்பதை எல்லாரும் உணர்ந்து செயல்படவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!