இந்தியாவுடன் இணைப்புகளை அதிகரிக்க ‘ஏர்ஏஷியா’முனைப்பு

மலேசியாவில் தளம் கொண்டுள்ள ஏர்ஏஷியா விமான நிறுவனம், சிங்கப்பூரில் இருபது ஆண்டுகள் செயல்படுவதைக் கொண்டாடும் வகையில் மேம்பட்ட பயண அனுபவத்துடன் 12 நகரங்களுக்கான இணைப்புப் பயணத் தெரிவுகளை வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரும் இந்தியாவும் துடிப்புமிக்க, பன்முகத்தன்மை வாய்ந்த உறவு கொண்டிருப்பதாக ஏர்ஏஷியா சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைவர் லோகன் வேலாயுதம் கடந்த வாரம் திங்கட்கிழமை (பிப்ரவரி 12) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“இந்தியாவின் எட்டாவது ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியான சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் கால்பதிக்க விரும்பும் நிறுவனங்களுக்கு நுழைவாயிலாகத் திகழ்கிறது. அதே நேரத்தில் தொழில்நுட்பத்திலும் புத்தாக்கத்திலும் அதிக வாய்ப்பை இந்தியா சிங்கப்பூருக்கு வழங்குகிறது,” என்றார் திரு லோகன்.

2017 முதல் இன்று வரை சுமார் 160,000 பயணிகள் ஏர்ஏஷியா சேவை மூலம் சிங்கப்பூரிலிருந்து இந்தியா சென்றதாக அவர் கூறினார்.

வாய்ப்பளிக்கும் இந்தியாவின் வளரும் விமானக் கட்டமைப்பு

இந்தியாவின் விமானத் துறைக் கட்டமைப்பின் மேம்பாட்டைக் கண்கூடாகக் காண முடிவதாகக் குறிப்பிட்ட லோகன், சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களின் அண்மைய மேம்பாடுகளைச் சுட்டினார். “விமானத்துறை மேம்பாட்டின் முக்கியத்துவத்தை தற்போதைய அரசாங்கம் உணர்கிறது. விமானங்களை ஆக அதிகமாக வாங்கும் நாடாக இந்தியா உள்ளது. அந்நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு ஈடாக விமானத்துறை வளரும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

திருச்சி அனைத்துலக விமான நிலையத்தில் ஏர்ஏஷியா விமானம். படம்: இணையம்

தென்னிந்திய, தமிழகப் பயணங்களுக்கு முன்னுரிமை

தென்கிழக்காசிய நாடுகள் மட்டுமின்றி சிங்கப்பூர், தென்னிந்தியா மீதும் ஏர்ஏஷியா கவனம் செலுத்தும் என்றார் லோகன்.

“எங்கள் நிறுவனம் பயன்படுத்தும் விமானங்களின் ரகம் இதற்குக் காரணம். ‘ஃபிளை த்ரூ’ எனப்படும் இடைநிலைப் பயணங்கள் தென்னிந்தியாவிற்குச் செல்வோர் இடையே பிரபலமாக உள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விசா தேவையில்லாப் பயணமுறை விமான நிறுவனத்திற்கு நல்ல செய்தியாக இருப்பதாக லோகன் தெரிவித்தார். “நாம் எதிர்பார்க்கும் இந்த வளர்ச்சிக்கு ஒத்துப்போகும் விதமாக எப்படி வளர்ச்சியைக் கொண்டுபோகலாம் என்பது குறித்து திட்டமிடுகிறோம்,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரர்கள் மற்றும் இந்தியர்கள் பலர் தமிழ்நாடு செல்ல அதிகம் விரும்புவதால் பயண இடங்களில் தமிழ்நாட்டிற்கு ஆக அதிக முக்கியத்துவத்தை ஏர்ஏஷியா தருவதாக லோகன் கூறினார். விடுமுறைத் தலங்களுக்குச் செல்வோர், புனிதப் பயணம் மேற்கொள்வோர், குடும்பத்தினரைக் காணச் செல்வோர் போன்றோர் தமிழ்நாட்டை அதிகம் நாடுவதை அவர் சுட்டினார்.

“தற்போது சென்னைக்கு நேரடிப் பயணங்கள் உள்ளன. திருச்சிக்கு இதுவரை இடைநிலைப் பயணம்தான் உள்ளது. ஆனாலும் முயல்கிறோம்.

“கேரளாவில் திருவனந்தபுரம் ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம் போன்ற இடங்களுக்கு அண்மையில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பும் ‘சூப்பர்’ செயலி

அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த இந்திய வாடிக்கையாளர்களும் ஏர்ஏஷியா செயலியைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்ட லோகன், “இதனால் முகவர்களின் வேலை குறைந்துள்ளது,” என்றார்.

தற்போது சுமார் 160,000 பேர் இச்செயலியைப் பயன்படுத்துகின்றனர். விமானப் பயணங்கள் மட்டுமின்றி ஹோட்டல்கள், தரை வாகனப் பயணம் போன்றவற்றுக்கும் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.

“பயணம் குறித்த தகவல்களை அறிந்துகொள்ளவும் பயணத்துடன் தொடர்பான பொருள்களை வாங்குவதற்கும் பயணப்பெட்டிகளுக்கு அனுமதிக்கப்படும் எடையின் அளவை அதிகரிக்கவும் இந்தச் செயலி உதவும். இதன் மூலம் நேர்மையற்ற இடைத்தரகர்களால் ஏற்படும் பாதிப்பு குறைகிறது,” என்றார் லோகன்.

அதிக போக்குவரத்து பயணங்களில் கூடுதல் கவனம்

சிங்கப்பூரில் செயல்படும் ஆகப் பெரிய வெளிநாட்டு விமான நிறுவனமாக ஏர்ஏஷியா திகழ்கிறது. கடந்தாண்டு அந்நிறுவனம் சாங்கி விமான நிலையக் குழுமத்திடமிருந்து மூன்று விருதுகளைப் பெற்றது குறித்து லோகன் பெருமை அடைகிறார். “இவ்வாண்டு நாங்கள் தென்கிழக்காசியாவில் ஆக அதிக செயல்பாடு கொண்டுள்ள விமான நிறுவனமாக அங்கீகாரம் பெறவிருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எஸ்ஐஏ கார்கோ, சில்க்ஏர், ஜெட்ஸ்டார் ஏஷியா, ஸ்கூட் டைகர்ஏர், எஸ்டி ஏரோஸ்பேஸ் ஆகிய நிறுவனங்கள் விமான செயலாக்கச் சான்றிதழ் பெற்றுள்ளன. இதற்கு மாறாக மெய்நிகர் விமான மைய முறையில் ஏர்ஏஷியா செயல்படுகிறது. ஏர்ஏஷியா விமானங்கள் சிங்கப்பூரிலிருந்து வெளியிடங்களுக்கும் மற்ற நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணம் செய்தாலும் வேலை நாள் முடிவில் மலேசியா அல்லது தாய்லாந்தில் உள்ள பணிமனைகளுக்குத் திரும்புகின்றன.

அதிக போக்குவரத்து உள்ள கோலாலம்பூர்-சிங்கப்பூர் இடையிலான பயணங்களை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று லோகன் தெரிவித்தார். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலும் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை பேங்காக்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலும் ஏர்ஏஷியா விமானங்கள் இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!