உலகக் கிண்ணக் கிரிக்கெட்: இம்முறையும் இந்தியாவிடம் அடிபணிந்த பாகிஸ்தான்

8-0: தடையின்றித் தொடரும் வெற்றிநடை

அகமதாபாத்: பரபரப்பிற்குச் சற்றும் குறைவிருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டி முற்றிலும் ஒருதரப்பிற்குச் சார்பாக முடிந்துபோனது.

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியிடம் அடைந்துவரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கங்கணம் கட்டிக்கொண்டு களம் காண்கிறது பாகிஸ்தான்.

ஆயினும், இந்திய அணியின் வெற்றிநடைக்குத் தடைபோட முடியாமல் ஒவ்வொரு முறையும் தோற்று, ஏமாற்றமடைவது அதற்கு வாடிக்கையாகிப் போனது.

அகமதாபாத்தில் சனிக்கிழமை நடந்த போட்டியில் இந்திய அணி எளிதாக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது.

உலகக் கிண்ண ஒருநாள் போட்டிகளில் இதுவரை இவ்விரு அணிகளும் எட்டு முறை மோதியுள்ள நிலையில், 8-0 என இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சொந்த மண்ணில் நடந்துவரும் இப்போதைய உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை தான் ஆடிய மூன்று ஆட்டங்களிலும் வென்றதன்மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா.

36 ஓட்டங்களில் எட்டு விக்கெட் போனது

இந்திய அணியில் இஷான் கிஷனுக்குப் பதிலாக ஷுப்மன் கில் இடம்பெற்றார்.

பூவா தலையாவில் வென்ற இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா, முதலில் பாகிஸ்தான் அணியைப் பந்தடிக்க அழைத்தார்.

அப்துல்லா ஷஃபிக் (20), இமாம் உல் ஹக் (36) என இரு தொடக்க வீரர்களும் 13 ஓவர்களுக்குள் வெளியேறினர்.

ஆயினும், அதன்பின் இணைந்த அணித்தலைவர் பாபர் ஆசமும் விக்கெட் காப்பாளர் முகம்மது ரிஸ்வானும் விளையாடியதைக் கண்டபோது பாகிஸ்தான் 300 ஓட்டங்களைத் தொட்டுவிடும் என்றெண்ணும்படியாக இருந்தது.

ஆனால், அணியின் எண்ணிக்கை 155ஆக இருந்தபோது 50 ஓட்டங்களை எடுத்திருந்த பாபரை வெளியேற்றினார் இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ்.

அதன்பின் களமிறங்கியவர்கள் வருவதும் போவதுமாக இருக்க, பாகிஸ்தான் பந்தடிப்பு 42.5 ஓவர்களில் 191 ஓட்டங்களுடன் முடிவிற்கு வந்தது.

இந்தியத் தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, சிராஜ், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய ஐவரும் ஆளுக்கு இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

300 சிக்சர்!

தனது முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில்லின் முதல் ஓட்டமே பவுண்டரியாக அமைந்தது.

ஆனாலும், நான்கு நான்குகள் அடித்த நிலையில், 16 ஓட்டங்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த விராத் கோஹ்லியும் தன் பங்குக்கு 16 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.

ஆயினும், ஒருமுனையில் ரோகித்தின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. 36 ஓட்டங்களில் அவர் அரைசதத்தை எட்டினார்.

ஒருநாள் போட்டிகளில் ஷாகித் அஃப்ரிடி (351 சிக்சர்), கிறிஸ் கெய்ல் (331 சிக்சர்) வரிசையில் 300 சிக்சர்களை அடித்த மூன்றாவது ஆட்டக்காரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இதுவரை அவர் 303 சிக்சர்களை அடித்துள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டிகளில் தனது எட்டாவது சதத்தை ரோகித் அடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 63 பந்துகளில் 86 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின் களம் கண்ட கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ராகுல் 19 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் 53 ஓட்டங்களையும் எடுக்க, இந்திய அணி 30.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, வெற்றியைச் சுவைத்தது.

ஏழு ஓவர்களை வீசி 19 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பும்ரா ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

அடுத்ததாக 19ஆம் தேதி வியாழக்கிழமை நடக்கும் போட்டியில் இந்தியா, பங்ளாதேஷையும் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கும் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவையும் எதிர்த்தாடவுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!