ஒன்றிணைந்து பணியாற்றும் பல தலைமுறையினர்: சவால்களும் சாத்தியங்களும்

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியுடன் மாறிவரும் சமூகச் சூழலில், வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் திறமைகளைக் காட்டவும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

உலகப் பொருளியல் கருத்தரங்கு ஆய்வுப்படி 2025க்குள் எல்லா பணிகளிலும் 27 விழுக்காடு ‘ஜென் ஜீ’ தலைமுறை ஊழியர்கள் இருப்பார்கள் எனத் தெரிகிறது. அதே வேளையில், ஓய்வுபெறும் வயதைத் தாண்டியும் பலர் பணியாற்றும் சூழலும் நிலவுகிறது.

முன்னெப்போதையும் விட, தலைமுறை இடைவெளி குறைந்து வரும் நிலையில், ‘பூமர்ஸ்’ என குறிப்பிடப்படும் 1964ஆம் ஆண்டு வரை பிறந்தோர், அதற்கு அடுத்தடுத்த தலைமுறையினரான ஜெனரேஷன் எக்ஸ், மில்லெனியல்ஸ், ஜென் ஜீ ஆகியோர் ஒரே சூழலில் பணியாற்றும் வாய்ப்புகள் அமைந்துள்ளன.

ஒவ்வொரு தலைமுறை ஊழியர்களும் வெவ்வேறு எதிர்பார்ப்புகளையும் மனப்போக்கையும் கொண்டிருந்தாலும், பணியிடச் சூழலுக்குத் தனித்தன்மை வாய்ந்த பங்களிப்பை அளிக்கின்றனர். இந்த அமைப்பில் குறிப்பிடத்தகுந்த சவால்களும் எண்ணற்ற நன்மைகளும் இருக்கின்றன.

இதுகுறித்து பேசிய ‘தி மில்லெனியல் லீடர்: வொர்க்கிங் அக்ரோஸ் ஜெனெரேஷன்ஸ் இஸ் தி நியூ நார்மல்’ எனும் தலைமுறைகள் ஒன்றிணைந்து பணியாற்றுதல் குறித்த நூலை எழுதிய விருதுபெற்ற எழுத்தாளர் விவேக் இயானி, “நான் பல தலைமுறை பணியாளர்கள் கொண்ட பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியபோதும், அங்கு சிறு நெருடல் உலவுவதைக் காண முடிந்தது.

குறிப்பாக 1980-90களிலும், அதற்குப் பின்னும் பிறந்த தலைமுறையினரிடம் இருக்கும் உரிமைக்கோரல் மனப்பான்மை, வழிகாட்டல் வேண்டுமென்கிற எண்ணம் ஆகியவை தங்களுக்கென தனி நெறிமுறைகள் வகுத்து, பணிக்கு முதலிடம் கொடுக்கும் முந்தைய தலைமுறையினரை துணுக்குறச் செய்கிறது,” என்கிறார்.

இதை ஒட்டிய கருத்தைப் பகிர்ந்த தனியார் நிறுவன ஊழியரும் ஜென் எக்ஸ் தலைமுறையைச் சேர்ந்தவருமான மேரிஷைலா லோபிஸ், “மாற்றத்துக்குத் தயக்கம் காட்டும், புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப தங்களைத் தகவமைக்க நேரம் எடுத்துக்கொள்ளும் முந்தைய தலைமுறையினருக்கும், அதிவேக மாற்றங்களுடன் செயல்படும் தலைமுறையினருக்கும் தொடர்பு இடைவெளி இயல்பாக இருக்கிறது,” என்கிறார்.

பல தலைமுறையினர் ஒன்றினைந்து பணியாற்றினால் அனுபவம் மிக்கவர்களிடமிருந்து பாடங்கள் கிடைப்பதோடு உற்பத்தித்திறனும் அதிகரிக்கும் என்கிறார் மேரிஷைலா லோபிஸ். படம்: மேரிஷைலா லோபிஸ்

வெவ்வேறு கண்ணோட்டங்களை இணைத்து பணியிடத்தில் படைப்பாற்றலையும் புதுமைகளையும் தூண்ட ஏதுவான ஒன்றிணைந்த பயிற்சிகளை மேற்கொள்ள நிறுவனங்கள் முன்வர வேண்டுமென இவர் வலியுறுத்தினார்.

கல்வித் துறையில் பணியாற்றும் திருவாட்டி மாலா குமார், 58, “பல தலைமுறைப் பணிச்சூழலில் இளையர்கள் வேகத்தையும் மூத்த தலைமுறை திடநிலையையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகக் கருதுகிறேன். பரஸ்பர மரியாதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் இருந்தால், இந்த ஒன்றிணைவு அற்புதங்களை நிகழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை,” என்கிறார். அதற்கான குழு கட்டமைப்புகள் இருந்தால் இது சாத்தியமே என்றும் இவர் சொல்கிறார்.

“இளையர்கள் விரைவில் ஓய்வுபெறவும் மூத்தோர் இயன்றவரை பணியில் இருக்கவும் விழைகின்றனர். தற்போது 40 வயதிற்குள் பணியிலிருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுவோர் விகிதம் அதிகரித்துள்ளது.

“தொழில்நுட்பங்களின் வருகையினால் வேலை பறிபோகும் எனும் அச்சம், குறைந்த காலத்தில் நிறைய பணம் ஈட்டும் மனநிலைக்கு இளையர்களைத் தள்ளிவிடுகிறது. எதிர்காலம் நிச்சயமற்றது எனும் எண்ணம் அவர்களிடம் மேலோங்கி இருப்பதால், நிறுவனங்கள் மாறுவதையோ உரிமைக்கு குரல் எழுப்பவோ இளையர்கள் தயக்கம் காட்டுகின்றனர் என நினைக்கிறேன்,” என்கிறார் ஜென் ஜீ தலைமுறையைச் சேர்ந்த தொழில்நுட்பத் துறை ஊழியர் நித்தியஸ்ரீ ஜெயசந்திரன். 

வெவ்வேறு தலைமுறையினர் ஒரே இடத்தில் பணிபுரிகையில் புத்தாக்கச் சிந்தனை ஏற்படும் எனக் கருதுகிறார் ‘ஜென் ஜீ’ இளையர் நித்தியஸ்ரீ ஜெயசந்திரன். படம்: நித்தியஸ்ரீ ஜெயசந்திரன்

மூத்த ஊழியர்களுக்கு தாங்கள் மதிப்புமிக்கவர்கள் என்கிற எண்ணத்தையும் இளையோருக்கு அவர்களது தனித்திறனை வெளிக்கொணர வாய்ப்பையும் அளிப்பது பணியிடத்தில் ஒருவித சமநிலையை எட்ட உதவும் என்றார் இவர்.

வெல்வேறு தலைமுறை ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்கள் இணைந்து பணியாற்ற ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் நிலவுகிறது என்கிறார் விவேக் இயானி.

ஒருவரது மனப்போக்கு, அவர் வளர்ந்த காலகட்டத்தில் இருந்த சூழலின் பிரதிபலிப்பு என்பதை உணர வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி அதிகப்படுத்தியுள்ள இந்த இடைவெளியைக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

‘மிக்சட் மெண்டோரிங்’ எனப்படும் பரஸ்பர அறிவுப் பரிமாற்றம், விரிவான பின்னூட்ட அமர்வுகள், பெயருக்கென இல்லாமல், உரிய பகுப்பாய்வுக்குப் பின் நடத்தப்படும் பயிலரங்குகள் உள்ளிட்டவற்றை செய்ய நிறுவனங்கள் முயற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார் விவேக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!