ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பாலையா, சம்யுக்தா மேனன் நடித்துள்ள அகண்டா 2 திரைப்படம் வருகிற 5ஆம் தேதி வெளியாக உள்ளது.
14 ரீல்ஸ் பிளஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ஐ.வி.ஒய். எண்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, இஷன் சக்சேனா தயாரித்து, போயபட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள புதிய படம் ‘அகண்டா-2’.
பாலையா கதாநாயகனாக நடிக்கிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா, கபிர் துஹார் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்தநிலையில் ‘அகண்டா-2’ படம் குறித்து அதன் இயக்குநர் போயபட்டி ஸ்ரீனு பேசினார்.
“2021ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், வசூலிலும் சாதனை படைத்த ‘அகண்டா’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘அகண்டா-2’ தயாராகி இருக்கிறது. வழக்கம் போலவே இந்தப் படத்திலும் பாலகிருஷ்ணா மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் பாகத்தைப் போலவே ரசிகர்கள் விரும்பும் அத்தனை அம்சங்களும் கொண்ட அட்டகாசமான படமாக இது தயாராகிறது.
“ஆன்மிகமும், அதிரடியும் கலந்த இப்படம் பாலகிருஷ்ணா ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து படைப்பது உறுதி. அதேபோல சம்யுக்தா மேனன் உள்பட நடிகர், நடிகைகள் அத்தனை பேரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ராம்ப்ரசாத் ஒளிப்பதிவில் தமனின் இசையில் படம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே தயாராகி இருக்கிறது. முதல் பாகம் தெலுங்கு மற்றும் இதர மொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றது. அதே போல இந்தப் பாகமும் இந்திய அளவில் மிகப்பெரிய சாதனை படைக்கும்,” என்று நம்புவதாக போயபட்டி ஸ்ரீனு தெரிவித்தார்.

