கதை/கவிதை

நதிநேசன் கணேஷ்
பன்னிரு மாதஞ்சென்று
உன்னிரு மலரொத்த
மென்னடிகள் மண்ணில்
படுகையில் கல்லும்முள்ளும்

பிஞ்சு குழந்தையுன்
பஞ்சு அன்னப் பாதத்தைப்
பதம் பார்த்துவிடுமோவெனப்
பதறும் உந்தாயின் உள்ளம்.

தடம்நோக்காது தாய்முகம் நோக்கித்
தவழ்ந்து வரும் உன்னழகில்
தங்கரதம் தோற்கும்
தாயுள்ளம் பூக்கும்.

தடுமாறி வருமுன்னைத்
தாவியள்ளி அவள் தழுவுவாள்
மன்றல் நாறு மலர்சோலை
மழலைத் தவழ் மனையென்பாள்.

அன்னையென நினக்கான
அரும்பேற்றை ஈந்தவளே
என்னாவி நீயேயென
இருக்கின்றேன் கண்மணியே!


அம்பிகா
அனுபமா உதிவ்

வெற்றியின் வேர்வை நிலவில் விழுந்தது
விஞ்ஞான விதையாய் நிலவில் முளைத்தது
விழுந்த இடத்திலேயே எழுந்து நின்றது
விஞ்ஞான வாகனம் விஸ்வரூபம் எடுத்தது

மனித குலத்தின் மாபெரும் வெற்றி
மனித சக்தியின் மாபெரும் வலிமை
சந்திரயான் மூன்று சாதனையின் ஊற்று
நாளை நடுவோம் நிலவில் நாற்று!

‘நிலாநிலா ஓடிவா’ என்றழைத்த தாயை
நிலவுக்கே அழைத்துச் செல்வோம் வாரீர்!
ஆங்கோர் ஆராய்ச்சி நிலையம் அமைப்போம்!
இளையோர் முதியோர் புதுயுகம் படைப்போம்!

பிஞ்சு தலைமுறையின் விண்வெளி ஆராய்ச்சி
எஞ்சிய கிரகங்களில் சாதனைகள் படைக்கட்டும்!
விண்வெளி ஆராய்ச்சி சவாலைத் தகர்த்தெறிந்து
புதிய வரலாறு சாதனைகள் படைக்கட்டும்!