போயபடி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி, தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெற்றி விழா ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இதில் நடிகர் பாலகிருஷ்ணா, இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் கலந்துகொண்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளர்கள் யாரும் கலந்துகொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
தயாரிப்பு நிறுவனத்தின் கடன் பிரச்சினை காரணமாக நீதிமன்றத் தடை விதிக்கப்பட்டு, படம் திட்டமிட்டபடி டிசம்பர் 5ல் வெளியாகாமல் ஒரு வாரம் தாமதமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) அன்று வெளியானது.
இந்த வெளியீட்டுச் சிக்கலால் பாலகிருஷ்ணா, தயாரிப்பாளர்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் அதன் காரணமாகவே அவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்றும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் தெலுங்கில் ரூ.70 கோடியும் பிற மொழிகளில் ரூ.15 கோடியும் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சனாதன தர்மம் குறித்து பேசும் இப்படத்தைப் பார்க்க பிரதமர் மோடி ஆர்வமாக உள்ளதாதத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாகப் பேசிய இயக்குநர் போயபடி சீனு, “அகண்டா 2’ படம் குறித்து பிரதமர் மோடி கேள்விப்பட்டு, இவ்வளவு நல்ல படத்தை தானும் பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதனால் டெல்லியில் இப்படத்தை அவருக்காகத் திரையிட உள்ளோம்,” என்று தெரிவித்தார்.

