சென்னை: கடந்த 2023ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் ‘அன்னபூரணி’.
பிராமணக் குடும்பத்தில் பிறந்த பெண் ஒருவர் எப்படி தனக்கான தடைகளை எல்லாம் தாண்டி சமையல் கலைஞர் ஆகிறார் என்பதுதான் இப்படத்தின் கதைக்களம். ‘அன்னபூரணி’ திரைப்படம் வெளியான அதே மாதத்தில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
மேலும், இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக அளிக்கப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலிருந்து ‘அன்னபூரணி’ நீக்கப்பட்டது.
இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோர் படத்தை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்பு நயன்தாரா சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது ‘அன்னபூரணி’ மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் சில இடங்களில் புதன்கிழமை (அக்டோபர் 1) முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், ‘அன்னபூரணி’யின் மொழிபெயர்க்கப்பட்ட இந்தி வடிவம்தான் வெளியாகியுள்ளது.
படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.