சேலம் காடுகளில் உருவான அரிக்கொம்பன்

சேலம் காடுகளில் உருவான அரிக்கொம்பன்

படம்: திராவிடன்டைம்ஸ்

27 Nov 2026 - 9:16 pm

2 mins read

கேரளாவில் பெரும் கவனம் பெற்ற அரிக்கொம்பன் காட்டு யானையின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தமிழ்த் திரைப்படம் ‘அரிக்கொம்பன்’. மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு. நாகராஜன் தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் டிசம்பர் 11ஆம் தேதி வெளியீடு காண்கிறது.

புதுமுகம் தேவகி கிருஷ்ணன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அப்புகுட்டி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சாகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ளார்.

“இதற்கு முன் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் இல்லை. நான் நடித்த படங்களின் இயக்குநர்களைக் குருவாகக் கொண்டு கற்றுக்கொண்ட அனுபவத்தின் மூலமே இப்படத்தை இயக்கியுள்ளேன்,” என்று அண்மையில் நடைபெற்ற படத்தின் இசை, வெளியீட்டு விழாவில் பேசிய மிதுன் மகேஸ்வரன் கூறினார். இவர் சென்னையில் ஒரு நாள், எங்கேயும் எப்போதும், பிரியாணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

1980ஆம் ஆண்டின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தியுள்ளதாகக் கூறிய அவர், படத்தில் இடம்பெறும் காட்டுப் பகுதி, இரண்டு கிராமங்கள், குளம் யானை தொடர்பான காட்சிகள் அனைத்தும் கலை இயக்குநரால் கிட்டத்தட்ட ஆறு மாத உழைப்பில் பிரம்மாண்ட அரங்குகளாக உருவாக்கப்பட்டவை என்றார்.

கேரளாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் பின்னணியில், அரிக்கொம்பன் யானையையும் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, ஒரு படத்திற்கான காடுகளைத் தேடி இந்தியா முழுவதும் ஏறக்குறைய 40,000 கிலோமீட்டர் பயணம் செய்த அனுபவம் தமக்கு உள்ளது என்றார். சேலம் அருகே இவ்வளவு எழில் கொஞ்சும் வனப்பகுதி இருப்பதைக் கண்டு வியப்படைவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை அழகாகக் காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் அனிலுக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், கதாநாயகி தேவகியை நடிகை லட்சுமி மேனனுடன் ஒப்பிட்டுப் பாராட்டினார்.

தேவகியின் புன்னகையும் இயல்பான நடிப்பும் தமிழ்த் திரையுலகிற்கு ஒரு நல்ல வரவாக இருக்கும் என்றும், கதாநாயகனைப் பார்க்கும்போது ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பு நினைவுக்கு வருவதாக ஆர்.கே. செல்வமணி கூறினார்.

குறிப்புச் சொற்கள்