‘அனந்தன் காடு’ படத்தின்மீது ஆர்யாவுக்கு முழு நம்பிக்கை

‘அனந்தன் காடு’ படத்தின்மீது ஆர்யாவுக்கு முழு நம்பிக்கை

படம்: தினத்தந்தி

20 Jun 2026 - 12:18 pm

2 mins read

ஏதோ கிடைத்த படங்களில் நடிப்போம் என்று இல்லாமல், வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்து நடிப்பவர் ஆர்யா.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இதற்கிடையே, ‘ரன் பேபி ரன்’ படத்தை இயக்கிய ஜியென் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘அனந்தன் காடு’ என்ற படத்தில் ஆர்யா நடித்து முடித்துள்ளார்.

மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நிகிலா விமல், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜூன் 25ஆம் தேதி திரைகாண்கிறது.

இந்த நிலையில், திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ‘அனந்தன் காடு’ படம் குறித்துப் பேசிய ஆர்யா, “இந்தப் படத்தின் கதை திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டது. அதனால், பாதி தமிழ், பாதி மலையாளத்தில் இருக்கும். இதனை இரு மொழிகளில் தனித்தனியாக எடுக்கலாமா அல்லது மலையாளத்தில் மட்டும் எடுத்து தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடலாமா என்ற குழப்பம் இருந்தது. இறுதியில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் தனித்தனியாகப் படமாக்க முடிவுசெய்தோம்,” என்றார்.

“விரைவில் ‘அனந்தன் காடு’ படத்தைத் தமிழகத்தில் வெளியிட உள்ளோம். இந்தப் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. உணர்வு சார்ந்த காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இது இருக்கும். இதற்குப் பிறகு எனது 40வது படத்தில் நடிக்க உள்ளேன். அது முழுக்க முழுக்க நகைச்சுவையும் காதலும் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். அந்தப் படத்தின் அதிகாரத்துவ அறிவிப்பு விரைவில் வெளியாகும்,” என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
நடிகைதிரைச்செய்திதிரையரங்கம்