உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘அவதார்' முதல் பாகம் படம் 2009ஆம் ஆண்டில் வெளியாகி உலகளவில் பெரும் வசூல் சாதனை படைத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்', ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ ஆகிய படங்கள் வெளியாகின. முதல் பாகம் அளவிற்கு அடுத்தடுத்த படங்கள் இல்லாவிட்டாலும் வசூலில் சாதனை படைத்தன. மூன்று திரைப்படங்களும் இணைந்து உலகளவில் சுமார் 6.75 பில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்துள்ளன. அதிகரிக்கும் தயாரிப்புச் செலவுகள், ஆண்டுக்கணக்கில் படத்திற்காகப் பணியாற்ற வேண்டியது இருப்பதால் மற்ற திட்டங்கள் குறித்து சிந்திக்க முடியவில்லை. இதனால் அவதார் கதையை முடித்துக்கொள்ளலாம் என இருக்கிறேன் என்று ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். இதனால் 4ஆம் பாகம் வராது என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் தற்போது 4, 5ஆம் பாகங்கள் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி, அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் நடைபெற்ற நிகழ்வில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ‘அவதார் 4’ திரைப்படம் 2029ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதியும் ‘அவதார் 5’ திரைப்படம் 2031ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதியும் வெளியாக உள்ளன.
ஒருவேளை ஜேம்ஸ் கேமரூன் ‘அவதார்’ படத்திட்டங்களிலிருந்து விலகினாலும் வேறு இயக்குநர்களை கொண்டு ஐந்து பாகம் வரை தயாரிப்பது என்று டிஸ்னி முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே 4, 5ஆம் பாகங்களுக்கான பல காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பண்டோரா கிரகத்தில் நவி சமூகத்தினரின் அடுத்த தலைமுறையின் கதையாக 4, 5ஆம் பாகங்கள் உருவாக்கப்படுகின்றன. 5ஆம் பாகத்தின் இறுதியில் நவி மக்கள் உலகத்தோடு நட்புறவு கொண்டு அவர்கள் பூமிக்கு வருவதாக முடிக்கப்படுகிறது.
