சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘தமிழகம் வளர்கிறது’ (TN Rising) மாநாட்டில் 43,844 கோடி ரூபாய் முதலீட்டில் 158 ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டன.
கோவையில் ‘தமிழகம் வளர்கிறது’ என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், 43,844 கோடி ரூபாய் முதலீட்டில் 1,00,709 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து ஒன்பது நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். உயர்தர பம்புகள், மோட்டார் உற்பத்தித் தொழில் மேம்பாட்டிற்கான கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சியையும் தமிழ்நாடு வளர்ச்சியையும் பிரிக்க முடியாது என்றார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியபோது, “தமிழ்நாட்டின் முதலீட்டைப் பார்த்து சிலரால் பொறுக்க முடியவில்லை; நிறுவனங்கள் வெளிமாநிலத்திற்கு செல்வதாக வதந்தி பரப்புகிறார்கள். தொழில் முதலீடு கொண்டு வருவது எளிதானது அல்ல. எத்தனை கோடி முதலீடு என்பதைவிட வேலை வாய்ப்புக்கு உகந்ததா எனப் பார்த்து செயல்படுகின்றோம்.
“கடந்த நான்கு ஆண்டுகளில் கடுமையான உழைப்பைச் செலுத்தியதன் விளைவாக, இந்தியாவிலேயே அதிகமாக 11.1 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு சாத்தியப்படுத்தி உள்ளது.
“தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வந்துள்ளவர்களுக்கு எந்தவித தாமதமும் ஏற்படாது. எந்தத் தலையீடும் இருக்காது. இங்கு எல்லாமே வேகமாகவும், தெளிவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும்.
“இந்தியாவில் முதல் முறையாக ஐ.டி. கொள்கையை வகுத்தது தமிழ்நாடு. ஆட்சி மாற்றத்தால் சிறு சிறு தொய்வு இருந்தாலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. சாதனை படைப்பதில் தமிழ்நாடு முன்னுதாரணமாக இருக்கவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், அனைத்து மாவட்டத்திற்கும் சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதன் காரணமாக தொழில்துறையைச் சார்ந்த யாரைச் சந்தித்தாலும் தமிழ்நாட்டிற்கு முதலீடு செய்ய வரும்படி கோரிக்கை வைத்து வருகிறேன்.
“இதுவரை நடத்தப்பட்டுள்ள 17 முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக, 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
“நேரடியாகவும் மறைமுகமாகவும் 36 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்துள்ளோம். தமிழ்நாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80 விழுக்காட்டு நிறுவனங்கள் இங்கு தொடங்கப்பட்டுள்ளன,” எனத் தெரிவித்தார்.

