கடமையை முடித்துவிட்டு படம் பார்க்க வாருங்கள்: மாணவர்களை அழைத்த கவின்

2 mins read
35ad21e8-d904-4b35-b0b6-bfa769127536
‘மாஸ்க்’ படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘மாஸ்க்’ படத்திற்கான வரவேற்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார் அப்படத்தின் நாயகன் கவின்.

கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடித்துள்ள இப்படம், தற்போது உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதுவரை கவின் நடிப்பில் நல்ல கதைக்களத்துடன் கூடிய படங்கள் வெளியான போதும், வசூல் ரீதியில் எந்தப் படமும் பெரிதாகச் சாதிக்கவில்லை.

‘மாஸ்க்’ படம் அந்தக் குறையைப் போக்கும் என அவர் உறுதியாக நம்புகிறாராம். இதனால் தமிழகம் முழுவதும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன், பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், மதுரை ஃபாத்திமா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், மாணவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

“நான் நடித்துள்ள ‘மாஸ்க்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. வெள்ளிக்கிழமை எல்லாருக்கும் கல்லூரி இருக்கும்.

“எனவே, அனைவரும் சமர்த்துப் பிள்ளைகளாகக் கல்லூரிக்கு வந்து, மாணவராக உங்களுடைய கடமைகளை முடித்துவிட்டு, சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை என்னுடைய படத்தை மறக்காமல் பாருங்கள். இதனால் எந்தப் பிரச்சினையும் வராது.

“திரைப்படம் பார்ப்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும்தான். தேவைப்படும்போது பொழுதைப்போக்கலாம்.

“தேவை முடிந்ததும் அந்தப் பொழுதுபோக்கு வளையத்தில் இருந்து வெளியேறிவிடுங்கள்.

“இந்தப் படத்தின் கதை இயக்குநரின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம். அந்தக் கதையில் சில பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்துள்ளோம்.

“படத்தை திரையில் பார்க்கும்போது, அனைத்து நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் படக்கதையுடன் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியும். அப்படிப்பட்ட பல அம்சங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன,” என்றார் கவின்.

குறிப்புச் சொற்கள்