2025ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் சுமார் 270 படங்கள் வரை வெளியாகி இருந்தாலும், ஒரு சில படங்கள் மட்டுமே வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள், குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
2025 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியான அனைத்துப் படங்களிலும் அதிக வசூல் குவித்து முதலிடத்தைப் பிடித்தது நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜூனா, ஷ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்த இந்த அதிரடித் திரைப்படம், உலகம் முழுவதும் ரூ. 518 கோடி வரையில் வசூல் செய்து, இந்த ஆண்டின் அதிக வசூல் குவித்த முதல் தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் ‘கூலி’ திரைப்படம் ரூ. 183.18 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
‘கூலி’ படத்தைத் தொடர்ந்து, அஜித் குமார் நடிப்பில் வெளியான இரு படங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ. 248.25 கோடி வரையில் வசூல் குவித்தது. தமிழகத்தில் மட்டும் முதல் வாரத்தில் ரூ. 83.66 கோடி வசூல் செய்து, இந்த ஆண்டில் அதிக வசூல் குவித்த 2ஆவது படமாக இடம்பிடித்தது.
அஜித் நடிப்பில் வெளியான மற்றொரு படம் ‘விடாமுயற்சி’. இந்தப் படம் உலகளவில் ரூ. 135.89 கோடி வரையில் வசூல் குவித்தது. வசூல் ஈட்டியபோதும், இந்தப் படம் அஜித்துக்கு விமர்சன ரீதியில் சற்று பின்னடைவாகவே அமைந்தது.
தொடர்புடைய செய்திகள்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படம், இந்தியளவில் ரூ. 118.83 கோடி வரையில் வசூல் செய்து அதிக வசூல் பெற்ற படங்களில் நான்காவது இடத்தைப் பிடித்தது.
மணிகண்டன் நடிப்பில் ஜனவரி மாதம் 24ஆம் தேதி வெளியான படம் ‘குடும்பஸ்தன்’. இப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் ரூ. 27.5 கோடி வசூல் பெற்றது.
புதுமுக இயக்குநர் அபிஷான் ஜீவின் இயக்கத்தில் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இத்திரைப்படமும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, அதிக லாபம் ஈட்டிய படமாக கவனிக்கப்படுகிறது.
சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் சுமார் ரூ. 16 கோடி செலவில் எடுக்கப்பட்டது. ஆனால், உலகம் முழுவதும் ரூ. 90 கோடி வரை வசூலித்து, தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

