சுழன்றடிக்கும் புயல்: பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை; சாலைகள், கல்வி நிலையங்கள் மூடல்

2 mins read
a2a5cf35-99aa-4f65-b047-46ad71553c24
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஏழு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: புயல் கரையை கடப்பதையடுத்து பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாமென தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இன்று காலை 7 மணி நிலவரப்படி ஃபெங்கல் புயல் சென்னையில் இருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

அது மணிக்கு ஏழு கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் நகரும் வேகம் குறைந்துள்ளதால் அது கரையைக் கடக்க தாமதமாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை இன்று மூடப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது.

புயல் சின்னம் வலுவடைந்ததையடுத்து சனிகிழமை அன்று மாநில பேரிடர் மேலாண்மை முகமை சார்பாக அனைத்து கைபேசி வாடிக்கையாளர்களுக்கும் குறுந்தகவல் மூலம் புயல் குறித்த அண்மைய தகவல்கள் பகிரப்பட்டன.

சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கிச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவை இன்று தற்காலிகமாக மூடப்படுகின்றன. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஏழு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மேயர் வேண்டுகோள்

இதற்கிடையே சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மாநகரின் சில இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

மழை நீர் உடனுக்குடன் வெளியேற்றப்படுவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மாநகராட்சி சார்பாக மழையை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் அவசியமின்றி யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மேயர் பிரியா கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்