ஸ்ருதிஹாசன் அடுத்து நடிக்க இருக்கும் படத்துக்கு புதுமுகமான வருண் முரளி இசையமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
‘அஸ்வின்ஸ்’ படத்தை இயக்கிய தருண் தேஜாவின் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தை ‘மாவீரன்’, ‘3BHK’ படங்களைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியானது.
இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) வெளியானது. அந்தத் தகவலை சாந்தி டாக்கீஸ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அதில், “ஸ்ருதிஹாசனின் சாந்தி டாக்கீஸ் படத்துக்கான இசையமைப்பாளராக திறமையான வருண் முரளியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என்று தெரிவித்துள்ளது.
அந்தப் பதிவுடன் காணொளி ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வருண் முரளி, “இசையமைப்பாளராக இது எனக்கு முதல் படம். எனக்கு உங்களின் ஆதரவு நிச்சயம் வேண்டும். நான் என்னால் முடிந்த சிறந்த இசையை கொடுப்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள துல்கர் சல்மானின் ‘ஆகாஸம்லோ ஒக தாரா’ படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
