சர்ச்சைகளைக் கடந்தும் சாதிக்கும் நாயகி

2 mins read
c84300f0-9648-4d5a-a16b-315e2a2537b6
நயன்தாரா. - படம்: ஊடகம்

தனது 41வது பிறந்தநாளை ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொண்டாடியுள்ளார் நயன்தாரா.

தனக்குத் தானே ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டத்தைச் சூட்டிக்கொண்டார் என்ற சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை.

இடையில் சில படங்களின் தோல்வி, தனுஷுடன் மோதல், வழக்கு என்று பிரச்சினைகள் அடுத்தடுத்துச் சுழன்றடித்தாலும் நயன்தாரா அசரவில்லை.

“சினிமாவில் வெற்றி, தோல்வி சகஜம். ஒரு படம் எதிர்பாராத வகையில் வசூலில் சாதிக்கும் என்றால், பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் தோல்வியைத் தழுவக்கூடும். இதற்கு என்ன காரணம் என்று ஆராய்வதைவிட, அடுத்த படைப்பைச் சிறப்பாக மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் நம் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்,” என்று முன்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் நயன்தாரா.

அப்படிப்பட்ட நம்பிக்கையை திரையுலகத்தினர் இவர் மீது வைத்துள்ளனர் என்பது அண்மைய பிறந்தநாளின்போது உறுதியானது.

தற்போது ஒன்பது படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் நயன்.

இப்படங்களின் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சிறப்பு சுவரொட்டிகளை வெளியிட்டு தங்களது கதாநாயகிக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இந்திய அளவில் எந்த மொழியிலும் எந்த நாயகியையும் இப்படி ஒருசேர ஒன்பது படங்களில் நடிப்பதாக இதுவரை அறிவிப்பு வெளியானதில்லை. அந்தச் சாதனையை நயன்தாரா சாதித்துள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் பரபரப்பான நாயகியாக வலம் வரப்போவது உறுதியாகி உள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் நயன். அப்படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து கூறி, அழகான சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து, கதை நாயகியாக நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’, ‘ஹாய்’, ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’ ஆகிய படங்களின் குழுவினரும் வாழ்த்துச் சுவரொட்டிகளை அடுத்தடுத்து வெளியிட்டுள்ளனர்.

தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக இன்னும் பெயரிடப்படாத படத்தில் ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த ஆண்டு திரைக்கு வருவது உறுதியாம்.

இதையடுத்து, சிரஞ்சீவியுடன் ஒரு படமும், யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’, ‘ராக்காயி’, ‘பேட்ரியாட்’ ஆகிய படங்களிலும் நயன்தாராவை நாயகியாகப் பார்த்து ரசிக்க முடியும்.

இந்தத் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது இந்திய அளவில் அதிகமான படங்களில் நடித்து வரும் நாயகி நயன்தாராதான் என்று தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நயன்தாராவின் அன்னபூரணி படம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க அவர் விரும்பியதாகக் கூறப்பட்டது. முன்னணி இயக்குநர் ஒருவர் இதற்கான கதை, திரைக்கதையைத் தயார் செய்துவிட்டாராம்.

எனினும், தனுஷ் நடித்த ‘இட்லி கடை’ படத்தின் சாயலில் இருப்பதால் தயாரிப்புத்தரப்பு வேறு கதையை தயார் செய்யுமாறு இயக்குநரைக் கேட்டுக்கொண்டதாகத் தகவல்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘மூக்குத்தி அம்மன்’, இந்தியில் ‘ஜவான்’ ஆகிய இரண்டு வெற்றிப் படங்கள் மட்டுமே நயன்தாரா நடித்துள்ளார்.

எனினும், இந்த மனக்குறையைப் போக்கும் வகையில் அவர் அடுத்து நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றிபெறும் என்பது பலரும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்தாகத் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
நயன்தாராபிறந்தநாள் வாழ்த்துகள்திரைப்படம்இயக்குநர்