கோட் படம் பற்றி பெருமையாகப் பேசிய இயக்குநர்

கோட் படம் பற்றி பெருமையாகப் பேசிய இயக்குநர்

படம்: ஊடகம்

30 Aug 2024 - 3:43 pm

2 mins read

எல்லாருக்கும் பிடிக்கும் வகையிலும் புரியும் வகையிலும் விஜய் நடிக்கும் கோட் படம் இருக்கும் என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள `கோட்’ (Greatest of all time) திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் இந்தப் படம் மங்காத்தாவை மிஞ்சும் அளவுக்கு இருக்கும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது, “இது என்ன கதைக்களம் என்பதை முன்னோட்டக் காட்சியில் கூறிவிட்டேன். ஆனால் அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

எல்லாருக்கும் பிடிக்கும் வகையிலும் புரியும் வகையிலும் இந்தப் படம் இருக்கும். படத்தை எந்த இடத்திலேயும் யாரையும் குழப்பும் அளவுக்கு எடுக்கவில்லை. ஆனால் இந்தக் காட்சிக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை உங்களால் சொல்ல முடியாது.

இதைச் சவாலாக சொல்கிறேன். இதை நோக்கி தான் கதை செல்கிறது என ரசிகர்களால் கூற முடியாது. அந்த மாதிரியான ஒரு கதைக்களம்.

இந்தப் படம் மங்காத்தாவை மிஞ்சும் அளவுக்கு இருக்கும். மங்காத்தா படம் உணர்ச்சிபூர்வமான படமாக இல்லாமல் முழுவதும் பாய்ஸ் சம்பந்தப்பட்ட படமாகவும் துரோகத்தை காட்டும் படமாகவும் இருக்கும்.

ஆனால் கோட் படம் அப்படி இல்லாமல் முழுவதும் குடும்பப் படமாக இருக்கும். காந்தி என்ற ஒரு தனிநபர் வாழ்க்கையில் நடந்த ஒரு கதை. இந்தப் படத்தில் என்ன நடக்கிறது என்று தோன்றாமல் அனைவருக்கும் புரியும் வகையில் இருக்கும் என்று கூறியுள்ளார் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு.

இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக் கோரி, சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், திரையரங்குகளில் அனுமதியின்றி 6 காட்சிகள் திரையிடுவதை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாவிஜய்