இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜும் லோகேஷ் கனகராஜும் இணைந்து தயாரித்துள்ள படம் ’29’. ரத்னகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு ‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குளுகுளு’ ஆகிய படங்களை இயக்கியவர்.
‘29’ படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கார்த்திக் சுப்புராஜ், தனது நிறுவனம் இதுவரை 17 படங்களைத் தயாரித்துள்ளது என்றாலும், ‘மேயாத மான்’ படம்தான் தனக்குப் பிடித்தமானது என்றார்.
அந்தப் படத்தின் கதையை தனுஷிடம்தான் கூறி இருந்தார்களாம். ஆனால் தனுஷ் அப்போது ‘ஆக்ஷன்’ படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் மறுத்துவிட்டாராம்.
“இளம் நடிகர்களை வைத்து இந்தக் கதையைப் படமாக்கினால் நன்றாக இருக்கும் என தனுஷ் ஆலோசனை வழங்கினார். அதன் பிறகு ரத்னகுமாரும் வேறு படங்களை இயக்கச் சென்றுவிட்டார்.
“கதைக்கு ஏற்றவர்களைத் தேர்வு செய்ய வேண்டுமென்பதால் சில ஆண்டுகள் காத்திருந்தோம். அதன் பிறகு ‘ஜிகிர்தண்டா’, ‘டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ படங்களில் விதுவின் நடிப்பைப் பார்த்தும் ‘அயோத்தி’ படத்தில் பிரீத்தி அஸ்ராணியின் நடிப்பைப் பார்த்தும் ஒப்பந்தம் செய்தோம்.
“இருவருமே அந்தப் படங்களில் சிறப்பாக நடித்து இருந்தனர். இருவரையும் இப்படங்கள் வெளியாகும் முன்பே இயக்குநர் ரத்னகுமார் சிபாரிசு செய்திருந்தார்.
“ஒருவேளை அந்தச் சமயத்தில் இருவரும் நடித்திருந்த வேறு ஏதேனும் படங்களை பார்த்திருந்தால் சம்மதம் தெரிவிக்காமல் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இருவரும் திறமைசாலிகள் என்பதை இப்போது தயக்கமின்றிச் சொல்ல முடிகிறது.
“இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜுடன் இணைந்து தயாரித்ததில் கூடுதல் மகிழ்ச்சி,” என்றார் கார்த்திக் சுப்புராஜ்.

