‘போர் தொழில்’ திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அசோக் செல்வன் தானே தயாரித்து நடித்துள்ள ‘அன்பில் அவன்’ படம் திரைகண்டுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் ராஜாவிடம் கதையைப் பெற்று, இயக்குநர் கார்த்திகேயனுடன் இணைந்து திரைக்கதையைச் செம்மைப்படுத்தியுள்ளார் அசோக் செல்வன்.
இன்றைய தனிமனித வாழ்க்கைப் பரபரப்பில் எளிய தம்பதிகள் தங்கள் கனவை நோக்கிப் பயணிக்க முடியுமா, அதற்கு எவ்வளவு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை மையப்படுத்தி உருவான கதைதான் இது.
அடிப்படையில் காதல் கதையாக இருந்தாலும், திகில், அதிரடி அம்சங்களும் நிறைந்த வணிகப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.
இப்படத்தில் கதையின் நாயகியாக பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். மேலும், புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக கதிர், ஆகாஷ், நடிகர் டெல்லி கணேஷின் மகன் மகா, மலையாள ‘பிக் பாஸ்’ வெற்றியாளர் சாபுமோன் ஆகியோரை நடிக்க வைத்துள்ளனர்.
‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயினின் சண்டைப் பயிற்சி படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார் அசோக்.
‘ஓ மை கடவுளே’ படத்திற்குப் பிறகு அசோக் செல்வன் தயாரித்துள்ள இரண்டாவது படம் இது.
“எனது சொந்தச் சேமிப்பு முழுவதையும் போட்டு, எனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கியிருக்கும் படம் இது. படைப்புச் சுதந்திரத்திற்காகவே தயாரிப்பில் இறங்கினேன். ஒரு தயாரிப்பாளராக நிறைய விஷயங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இப்போது கிடைத்துள்ளது,” என்கிறார் அசோக்.
“ஒரு படம் திரையரங்கில் பெறாத கவனத்தை சில சமயம் ஓடிடி தளத்தில் பெறுகிறது. ‘நித்தம் ஒரு வானம்’ படத்திற்கு அப்படி ஒரு ஆதரவு கிடைத்தது. ஒரு படத்தை திரையரங்கில் பார்க்கும்போது நாம் செய்த தவறு என்னவென்பதைப் புரிந்துகொண்டு அதிலிருந்து கற்றுக்கொள்வதுதான் ஒரு படைப்பாளனுக்குத் தேவைப்படும் முக்கியமான குணாதிசயம்,” என்றும் விகடன் ஊடகப் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு படத்தின் வெற்றிக்கு அதன் கதையே முதன்மையானது என்றும் இதற்கு முன்பு ‘புளூ ஸ்டார்’ படத்திலும் கதைக்குத் தேவையான பங்களிப்பையே தாம் வழங்கியதாகவும் அசோக் கூறியுள்ளார்.
அடுத்து ஒரு காதல் கதையில் நடிக்க நேர்ந்தால், அதில் சண்டைக்காட்சிகள் இல்லையென்றாலும் நடிக்கத் தயாராக இருக்கிறாராம். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து மக்களுக்கு வழங்குவதே இவரது முதன்மை நோக்கமாம்.
“’அதிரரரடி ஹீரோ’ என்ற பிம்பத்தை உருவாக்கிக்கொள்வதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை.
“என் மனைவி கீர்த்தி பாண்டியனுக்கு இந்தப் படத்துக்கான வேலைகளைத் தொடங்கிய காலத்திலிருந்தே இந்தக் கதை தெரியும். அவரும் ஒரு கலைஞர் என்பதால், படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து எங்கள் உழைப்பை நேரில் பார்த்துள்ளார். அவருக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது,” என்கிறார் அசோக் செல்வன்.
