“அண்மைக்காலமாக ஓடிடி தளங்கள் புதுப்படங்களை வாங்குவது இல்லை என முடிவு செய்துவிட்டன. எனினும் சில நடிகர்கள் மட்டும் தங்களுடைய சம்பளத்தை இன்னும் குறைத்துக் கொள்ளவில்லை,” என இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் தயாரிப்பாளர்களும், ஓடிடி தள நிர்வாகத்தினரும் கலந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஓடிடி தளங்கள் பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த நடிகர்களின் ஊதியத்தை நாற்பது கோடி வரை உயர்த்திவிட்டதாக செல்வமணி சுட்டிக்காட்டினார்.
“ஓடிடி தளங்களின் முடிவால் தயாரிப்பாளருக்கு வருமானம் குறைந்துவிட்டது. ஆனால், நடிகர்களோ தங்களுடைய சம்பளத்தைக் குறைத்த பாடில்லை,” என்றார் ஆர்கே செல்வமணி.
இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல ஓடிடி தளத்தின் நிர்வாகி கௌசிக், நல்ல படங்களைத் திரையிட்டால் மட்டுமே ஓடிடி தளங்களின் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் சந்தா செலுத்துவார்கள் என்றார்.
“ஒரு படத்தின் கதைதான் முக்கியம். கதையைச் சரியாகத் தேர்ந்தெடுத்து தயாரித்தால் படம் நிச்சயம் வெற்றி பெறும்.
“நல்ல கதைகளுடன் கூடிய படங்களை மட்டுமே ஓடிடிக்காக வாங்குகிறோம். நாங்கள் நல்ல கதைகளை மட்டுமே தயாரிக்கிறோம். இதைத்தவிர வேறு ஏதும் செய்வதில்லை,” என்றார் கௌசிக்.

