பள்ளியில் படிக்கும்போது ஏழ்மையின் காரணமாக தாம் எதிர்கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் தனுஷ்.
சிறு வயதில் தன் தாயார் ஒரு டாலரைவிட குறைவான மதிப்புடைய ஒரு கைக்கடிகாரத்தை வாங்கித் தந்ததாகவும் அதற்கு நிறுவனப் பெயர் எல்லாம் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற துபாய் வாட்ச் வீக் ( Dubai Watch Week) என்ற நிகழ்ச்சி கலந்துகொண்ட தனுஷிடம், முதன் முதலில் அவர் மனதைக் கொள்ளைகொண்ட கைக்கடிகாரம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த தனுஷ், “நான் காதல் கொண்ட ஒரு கடிகாரம் என்றால், என்னுடைய அம்மா முதன் முதலில் எனக்கு வாங்கி கொடுத்ததுதான். பள்ளியில் படிக்கும்போது அம்மா அதை வாங்கி கொடுத்தார்.
“அது ஒரு டாலரின் மதிப்பைவிட குறைவானதுதான். அதற்கு பெயர் எல்லாம் கிடையாது. அது ஒரு பிளாஸ்டிக் கைக்கடிகாரம்.
“அதில் லைட் எரியும். பேட்டரி ரொம்ப சின்னதாக இருக்கும். நான் எளிய பின்னணியில் இருந்து வந்தவன்தான்.
“அந்த பேட்டரி முடிந்துவிட்டால் வாட்ச் வேலை செய்யாது. அந்த வாட்ச்சில் நிறைய வண்ணங்கள் இருக்கும்,” என்றார் தனுஷ்.
தான் மட்டுமல்லாமல் தனது அக்காக்களும் ஊதா, மஞ்சள் என மாறி மாறி கட்டிக்கொள்வது வழக்கம் என்று குறிப்பிட்ட அவர், ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உருவான கதையையும் விவரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட பாடல் தான் ‘ஒய் திஸ் கொலவெறி’. அதில் பணிபுரிந்துவிட்டு அப்படியே விட்டுவிட்டோம். பின்னர் அதை மறந்துவிட்டோம். ஒரு நாள் ஞாபகம் வந்து மீண்டும் கேட்டோம். அது மிகவும் வேடிக்கையாக இருந்தது.
“ஆனால் அப்பாடல் தமிழில் இல்லை. அது தங்கிலிஷ் மொழியில் இருந்தது. அந்தப் பாடலின் வெற்றியில் இருந்து விலகி நிற்கவே விரும்பினேன். ஆனால், அது என்னை தொடர்ந்து துரத்தியது.
“இணையத்தில் ‘வைரல்’ என்றால் என்ன என்பதை அப்பாடலின் வெற்றி எனக்கு உணர்த்தியது. அதை ஒரு வரம் போல கருதினேன். அதே வேளையில் அது சாபமும் கூட.” என்று பதிலளித்துள்ளார் தனுஷ்.

