இன்ஸ்டகிராமில் ஏறக்குறைய ஒரு மில்லியன் பேர் நடிகை பிரதீபாவைப் பின்தொடர்கிறார்கள்.
அவர் வெளியிடும் ஒவ்வொரு காணொளியும் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெறுகிறது. ஆக அதிகமாக, அவரது காணொளி ஒன்று 20 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இளையர்களைக் கிறங்கடித்து அவர்களின் தூக்கத்தைக் கெடுத்து வரும் இளம் நாயகி பிரதீபா குறித்து சிறிய அறிமுகம்.
‘கொண்டல்’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர். தற்போது ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார்.
பிரதீபா தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் நேரில் பார்க்கும் அனைவருமே, மலையாளியா என்றுதான் முதலில் கேட்கிறார்களாம்.
“நான் பச்சைத் தமிழச்சி. ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது. சினிமாவுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அரசுப் பணிகளுக்கான பல தேர்வுகளை எழுதியிருக்கிறேன்.
“பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது படிப்பைத் தவிர திறமையை நிரூபிக்கும் எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளக் கூடாது என வீட்டில் கண்டிப்புடன் கூறிவிட்டனர். அதனால் படிப்பு மட்டும்தான்,” என்று சொல்லும் பிரதீபா, அடிப்படையில் ஓர் ஆசிரியை.
இவரது தாயார் ஆசிரியை என்பதால் என்பதால் மகளையும் தன்னைப் போலவே ஆசிரியை பணிக்குத் தயார் செய்துள்ளார். ஆனால், அதன் பிறகுதான் பிரதீபாவின் வாழ்க்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அவ்வப்போது சமூக ஊடகங்களில் பதிவிடத் தொடங்க, இவர் பகிர்ந்த புகைப்படங்களைப் பார்த்து விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“அதன் பிறகு ஏன் சினிமாவில் நடிக்கக் கூடாது என்று எல்லாரும் கேட்டனர். ஆனால், அரசுப் பணியில் சேர்வதுதான் எனது முக்கியமான குறிக்கோளாக இருந்தது. இப்போது ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு, சினிமாதான் எனக்கான இடம் என்று தோன்றுகிறது.
“கொண்டல்’ பட இயக்குநர் சோனி வர்கீஸ் ஜோசஃப் சமூக ஊடகங்களில் என் புகைப்படங்களைப் பார்த்த பிறகுதான் என்னைத் தேர்வு செய்தார். இந்தப் படத்துக்கு எனக்குக் கிடைத்த வரவேற்பு எல்லாருக்கும் தெரியும். ‘ஓடிடி’ தளத்தில் இன்னும்கூட ஏராளமானோர் படத்தைப் பார்த்து ரசிக்கிறார்கள்,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் பிரதீபா.
‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ பட இயக்குநர் அலெக்ஸ் பாண்டியனும்கூட சமூக ஊடகங்கள் மூலமாகத்தான் இவரை அடையாளம் கண்டாராம்.
வித்தியாசமான, இதுவரை சொல்லப்படாத கதை என்பதால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்கிறார் பிரதீபா. இவரது சொந்த ஊர் திண்டுக்கல்.
தமிழில் சரளமாகப் பேசுவதால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறாராம்.
“விரைவில் நான் நடித்துள்ள இன்னொரு தமிழ்ப் படமும் வெளியாக உள்ளது. அதை நினைக்கும்போது பெருமையாக உணர்கிறேன். சினிமாவில் நடிப்பதாகக் கூறினால் வீட்டில் பெரும் எதிர்ப்பு வரும் என நினைத்திருந்தேன். ஆனால், இப்போதோ எல்லாரையும் அழைத்து, ‘இதுதான் என் மகள்’ என்று என் பெற்றோர் பெருமைப்படுகிறார்கள்.
“என் தோழிகள், என் பெற்றோருடன் சேர்ந்து படம் பார்க்கப் போயிருக்கிறார்கள். உண்மையைச் சொன்னால், எனது அடுத்தடுத்த படங்கள் குறித்து என்னைவிட வீட்டில் இருப்பவர்களுக்குத்தான் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது,” என்று சொல்லும் பிரதீபா, அடுத்து தமிழில், ‘மெஹந்தி சர்கஸ்’ படத்தை இயக்கிய சரவணன் ராஜேந்திரன் இயக்கும் புதுப் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும், தெலுங்கில் ‘கோர்ட் ஸ்டேட் vs நோபடி’ பட நாயகன் புலிக்கொண்டா நடிக்கும் புதிய படத்திலும் நாயகியாக நடிக்கிறாராம்.
மணிரத்னம் போன்ற இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும், பெரிய நடிகர்களுடன் இணைய வேண்டும் என்று பிரதீபாவுக்கும் பல கனவுகள் உள்ளன.
நடிகர் ஃபகத் ஃபாசிலின் தீவிர ரசிகையான இவருக்கு, அவருடனும் ஒரு படத்தில் நடிக்கும் ஆசை உள்ளதாம்.

