“வடசென்னை பகுதியைப் பற்றி நிறைய படங்கள் வெளிவந்துள்ளன. பலர் நடிக்க மறுத்த ஒரு கதையில் நான் நடித்துள்ளேன். இது எனக்கு நானே விடுத்துள்ள சவால்,” என்கிறார் ஹரிஷ் கல்யாண்.
‘லிஃப்ட்’ படத்தின் இயக்குநர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் இவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
‘தாஷமக்கான்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். படப்பிடிப்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன் நாயகியாக நடித்துள்ளார்.
படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டிக்கு நல்ல வரவேற்பாம். சென்னையில் குறைந்த விலையில் விற்கப்படும் சுவையான அசைவ உணவுகளுக்குப் பெயர்போன பகுதிதான் இந்த ‘தாஷமக்கான்’.
சுவரொட்டி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உற்சாகமாகப் பேசினார் ஹரிஷ் கல்யாண்.
தன் படத்தின் சுவரொட்டி வெளியீடு இப்படித் தனி நிகழ்ச்சியாக நடப்பது இதுதான் முதல்முறை என்றும் ‘தாஷமக்கான்’ பகுதியை ‘தமிழக அசைவ உணவின் தலைநகரம்’ என்றும் குறிப்பிட்டார்.
“உண்மையாகவே மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசுகிறேன். ‘தாஷமக்கான்’ பகுதி குறித்து நிறைய பேர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அங்குள்ள உலகம் எப்படிப்பட்டது என்பது நம்மில் பலருக்கும் பெரும்பாலும் தெரியாது.
“அங்கிருந்துதான் சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் அசைவ உணவு விநியோகம் செய்யப்படுகிறது. அதனால், அசைவ உணவின் தலைநகரம் என்று தாராளமாகச் சொல்லலாம்,” என்றார்.
முதன்முறையாக இந்தப் படத்தில் ராப் இசைப் பாடகராக நடித்துள்ளாராம். இதற்காக பல இளம் ராப் இசைக் கலைஞர்களுடன் பழகி, அவர்களுடைய அசைவுகள், ஸ்டைல், ராப் பாடும் விதம், உடல்மொழி என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு நடித்திருப்பதாகச் சொல்கிறார்.
“யோகி பி, ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஏ.ஆர்.ரகுமான் என எல்லாருடைய ராப் இசையையும் கேட்டிருப்போம். இன்று ராப் இசை நன்கு வளர்ச்சி கண்டுள்ளது.
“அறிவு, அசல் கோளாறு, பால் டப்பா எனப் பலர் உலகளவில் பிரபலமாகி உள்ளனர். ராப் இசை மூலமாக புரட்சியே செய்கிறார்கள். அப்படியான ராப் இசைக் கலைஞராக நடித்திருக்கிறேன்,” என்கிறார் ஹரிஷ்.
இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று அவர் கூறினார்.
ஹரிஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மூன்று படங்களும் வசூல் ரீதியில் சாதித்துள்ளன. எனினும், சம்பளத்தை சகட்டு மேனிக்கு உயர்த்தாமல் நியாயமான முறையில் செயல்படுகிறாராம்.
தன்னிடம் கதை சொல்லவரும் இயக்குநர்களிடம் கதை பிடித்திருந்தால் மட்டுமே மேற்கொண்டு பேசுகிறார். இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் சம்பளம் குறித்து கறார் காட்டாமல் பக்குவமாகப் பேசுகிறார் என்ற நல்ல பெயர் ஹரீஷுக்கு கிடைத்திருக்கிறது.

