“நான் தான் உண்மையான எம்.ஜி.ஆர். ரசிகன்!” - மேடையில் ஆனந்தராஜை வறுத்தெடுத்த சத்யராஜ்!

3 mins read
b8a9b4e9-b9f8-4ea6-803a-41d7f19f8c68
‘வா வாத்தியார்’ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சத்யராஜ், ஆனந்தராஜ். - படம்: கோலிவுட் டைம்ஸ்
multi-img1 of 2

‘வா வாத்தியார்’ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் படத்தில் நடித்திருந்த சத்யராஜ் தனக்கு எம்.ஜி.ஆரின் ரசிகனாக நடிக்கும் வாய்ப்புக் கிடைக்காமல் அந்த வேடம் கிடைத்த ஆனந்தராஜை குறுக்குக் கேள்விகள் கேட்டு அரங்கத்தை அதிர வைத்தார்.

தமிழ் சினிமாவில் வில்லத்தனம், கதாநாயகன், குணச்சித்திர வேடம் என அனைத்திலும் தனது தனித்துவமான ‘லொள்ளு’ பாணியைக் கலந்து அசத்துபவர் நடிகர் சத்யராஜ். இவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர் என்பது ஊர் அறிந்த கதை.

எம்.ஜி.ஆர் தனக்கு பரிசாக அளித்த கர்லாகட்டையை வைத்துதான் இன்றும் சத்யராஜ் உடற்பயிற்சி செய்து வருகிறார். எம்.ஜி.ஆரை அனைவரும் ‘வாத்தியார்’ என்று அழைப்பதைப் போலவே, சத்யராஜும் அவரை உரிமையோடு ‘வாத்தியார்’ என்றே அழைப்பார்.

‘வா வாத்தியார்’ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜின் பேச்சு அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது.

இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறார். மேலும், மேடை நிகழ்ச்சிகளில் எம்.ஜி.ஆர் போல நடிப்பவர்கள் பலர் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளனர். எம்.ஜி.ஆர் படப் பாடல்களை ஒன்றாக இணைத்து ஒரு பாடலை உருவாக்கி இருக்கிறார் இப்படத்தின் இசையமைப்பாளர் என்பது கூடுதல் சிறப்பு.

இப்படத்தில் சத்யராஜ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனக்கு ‘வாத்தியார்’ என்ற தலைப்பில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாள்களாக இருந்தாலும், தன் உறவுக்காரப் பையனான கார்த்தி அந்தத் தலைப்பில் நடிப்பதால் மனதைத் தேற்றிக்கொண்டார் சத்யராஜ்.

ஆனால், தனது படங்களில் வில்லனாக நடித்து தன்னிடம் திரையில் அடி வாங்கிய நடிகர் ஆனந்தராஜ், இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் ரசிகராக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பது அவருக்கு வருத்தம் அளித்தது.

உண்மையான எம்.ஜி.ஆர் பக்தரான தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் சத்யராஜுக்கு இருந்தது. அந்த ஆதங்கத்தை படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தினார்.

மேடையில் ஏறி மைக்கைப் பிடித்த சத்யராஜ், எம்.ஜி.ஆர் பட வசனம் ஒன்றைச் சொல்லி, “இது எந்தப் படம்?” என்று முதல் வரிசையில் அமர்ந்திருந்த எம்ஜிஆர் ரசிகனாக நடித்திருக்கும் ஆனந்தராஜிடம் கேட்டார்.

அதற்கு ஆனந்தராஜ், “நாடோடி மன்னன்” என்று பதிலளித்தார். உடனே சத்யராஜ், “தப்பு. இது மர்ம யோகி,” என்றார். இப்படியாகத் தொடர்ந்து பல வசனங்களைக் கேட்க, ஆனந்தராஜ் அனைத்திற்கும் தவறான பதிலைச் சொல்லி விழி பிதுங்கினார். ஒருகட்டத்தில் ஆனந்தராஜ் ஓடிச்சென்று நடிகர் சிவகுமாரிடம் பதில் கேட்க, அவரோ “காப்பி அடிக்காதே,” என்று சொல்லி ஆனந்தராஜை திருப்பி அனுப்பினார்.

இறுதியில் ஆனந்தராஜ், “அண்ணே! நீங்கதான் உண்மையான வாத்தியார் ரசிகர். என்னை விட்டுவிடுங்கள். தெரியாமல் அந்தவேடத்தில் நடித்துவிட்டேன்,” என்று மேடையிலேயே சரணடைந்தார்.

உடனே சத்யராஜ் இயக்குநரைப் பார்த்து, “பார்த்தீங்களா இயக்குநரே! வாத்தியார் பட வசனங்களுக்குத் தப்பு தப்பா பதில் சொல்ற ஆனந்தராஜ் இந்தப் படத்தில் வாத்தியார் ரசிகரா நடிக்கிறார். நான் நடிக்கல. இருந்தாலும் பரவாயில்லை. வாத்தியார் ரசிகனாக நடிப்பதால் பிழைத்துப் போ,” என்று கிண்டலாகக் கூறியது அரங்கை அதிர வைத்தது.

‘பாட்ஷா’ படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த ஆனந்தராஜை, சத்யராஜ் இப்படி மேடையில் கிண்டல் செய்தது ரசிகர்களைச் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

எம்.ஜி.ஆர் மறைந்த மாதமான டிசம்பரில் ‘வா வாத்தியார்’ படம் வெளியாவது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் படம் வெளிவருவதாக அறிவித்த டிசம்பர் 12 அன்று சில பல காரணங்களால் வெளியாகவில்லை.

டிசம்பர் 24ஆம் தேதி எம்ஜிஆர் நினைவுநாளை முன்னிட்டு படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். ஒருவேளை, அந்த தேதியிலும் படம் வெளியாகவில்லை என்றால் ஓடிடி வெளியீட்டு ஒப்பந்தத்தை அமேசான் பிரைம் நிறுவனம் ரத்து செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்