இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தண்டகாரண்யம்’.
இந்தப் படத்தில் தினேஷ், கலையரசன், ஷபீர், பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு உள்பட பலர் நடித்து உள்ளனர்.
வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், “நாங்கள் இங்கு பணம் சம்பாதிக்கும் தொழில் நோக்கத்துடன் திரைப்படத் துறைக்கு வரவில்லை.
“சமூகத்தைச் சரி செய்யவேண்டும் என்கிற முனைப்போடு வந்திருக்கிறோம். நான் இயக்குநராக வரும் போது வெறும் மூன்றாடுகள் மட்டுமே இருப்பேன் என நினைத்தேன். ஏனெனில் நான் பேசக்கூடிய கருத்துகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தேன். இருப்பினும் மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டனர்.
“தற்பொழுது இருக்கக்கூடிய சென்சார் போர்டில் வலதுசாரிகள் அதிக அளவில் இருக்கிறார்கள்.
“சமூகப் பிரச்சினைகளைக் கதையாகச் சொல்கிறபோது திரையரங்கில் மக்களை அதைப் பார்க்க வைப்பதுதான் மிகப்பெரிய சவால். கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பி நாங்கள் படம் எடுப்பதில்லை. மக்களை நம்பித்தான் படம் எடுக்கிறோம்,” எனக் கூறிய பா. ரஞ்சித், மக்கள் ஆதரவு அளித்தால்தான் தொடர்ந்து செயல்பட முடியும் என்றார்.
“என்னுடன் சேர்ந்து திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த 12 ஆண்டுகளில் சில நபர்களுடன் மட்டும்தான் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழ் சினிமாவில் நான் இயக்குநராக வேண்டுமென வரவில்லை. ஆனால், ஒருவேளை இயக்குநரானால் இதுபோன்ற படங்களைத் தான் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்,” என்றார் பா. ரஞ்சித்.