சவால்கள் நிறைந்த இயக்குநர் பணி பிடிக்கும்: கிரித்தி

3 mins read
f89a76bf-e4d1-4b61-a4a0-b175c03fffac
கிரித்தி ஷெட்டி. - படம்: ஊடகம்

திரையுலகில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு தனி மனிதரின் கடின உழைப்பிற்குப் பின்னே அதிக பொறுப்பில் இருப்பது இயக்குநர்தான் என்றும் அதனால் இயக்குநராக வேண்டும் என்ற ஆசை மனத்தில் வேரூன்றிவிட்டது என்றும் சொல்கிறார் இளம் நாயகி கிரித்தி ஷெட்டி.

“இயக்குவது என்பது மிகவும் சவாலான வேலை. எனக்கும் சவால்கள் பிடிக்கும். அதனால் இயக்கும் ஆசை மனத்தில் அதிகரித்துக் கொண்டே போகிறது,” என அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’, ரவி மோகனுடன் ‘ஜீனி’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என ஒரே சமயத்தில் மூன்று முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் கிரித்தி. அத்தனை நாயகர்களும் இயக்குநர்களும் சொல்லி வைத்தாற்போல், ‘எந்தவித பந்தாவும் அலட்டலும் இல்லாத சின்னப்பெண்’ என்று இவருக்கு நற்சான்றிதழ் அளிக்கிறார்கள்.

“நான் நடிகர் கார்த்தியின் ரசிகை. அவர் நடித்த ‘பையா’ படத்தை நூறு முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன்.

“தி வாரியர்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தபோது, அருகேயிருந்த அரங்கில்தான் ‘பொன்னியில் செல்வன்’ படப்பிடிப்பு நடைபெற்றது. ஆனால் கார்த்தியைச் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.

“அப்போது நடிகை நதியா, கார்த்தியை கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். என்னையும் பேச வைத்தார். கார்த்தியிடம் ‘பையா’வை நூறு முறை பார்த்திருப்பதாகச் சொன்னபோது அவருக்கு ஆச்சரியம். எனக்கு உற்சாகம்.

“‘வா வாத்தியார்’ படப்பிடிப்பின் முதல் நாள் அவரைச் சந்தித்தபோது, நான் முன்பு பேசியதை நினைவில் வைத்திருந்தார். அவருடன் இணைந்து நடித்த பிறகு அவரது தீவிர ரசிகையாக மாறிவிட்டேன்,” என்று சிறு குழந்தையைப் போல் கைதட்டி உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார் கிரித்தி.

‘வா வாத்தியார்’ படத்தில் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால், அவரும் கிரித்தியும் இணைந்து நடிக்கும் காட்சி ஏதும் இல்லையாம். அதனால் அவருடன் பேச முடியவில்லை என்றும் அதை நினைத்தால் வருத்தமாக உள்ளது என்றும் கூறியுள்ளார் கிரித்தி.

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் 2040ல் நடக்கும் கதையை வைத்து உருவாகிறது. எதிர்காலம் குறித்த படம் என்பதால் அனைத்துக் காட்சிகளுமே கற்பனையாக அமைக்கப்பட்டதுதானாம். இதற்காக விக்னேஷ் சிவன் கடுமையாக உழைத்திருப்பதாகச் சொல்கிறார்.

“பிரதீப் ரங்கநாதன் எப்போதுமே சிரித்த முகத்துடன் காணப்படுவார். அவரைச் சுற்றி ஒரு மகிழ்ச்சியான வட்டத்தை எப்போதும் பார்க்க முடியும். அவருடைய கணிப்புகளும் முடிவுகளும் தெளிவாகவும் அருமையாகவும் இருக்கும்.

“இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பில் ‘எனக்கென யாரும் இல்லையே’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இது பத்து ஆண்டுகளுக்கு முன்பு அனிருத் பாடிய பாடல். அதை இப்போது பயன்படுத்தினால் நிச்சயம் வரவேற்கப்படும் என்று பிரதீப் கணித்தார். அவர் சொன்னது போலவே அப்பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது,” என்று பிரதீப்பை மனதாரப் பாராட்டிப் புகழ்கிறார் கிரித்தி ஷெட்டி.

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் அறிவியல் கற்பனையும் காதலும் சரிவிகிதத்தில் கலந்துள்ள நகைச்சுவைப் படமாக உருவாகி உள்ளது. படத்தின் காட்சிகளும் வசனங்களும் எதிர்காலத் தலைமுறையை மனத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

இயக்குநர்கள் எஸ்.ஜே.சூர்யா, சீமான் ஆகியோருடன் நடித்ததும் இனிமையான அனுபவங்களைத் தந்துள்ளதாம்.

“எஸ்.ஜே.சூர்யாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இயக்கிய ‘குஷி’ படத்தை அண்மையில்தான் பார்த்தேன். மிக அழகான படைப்பு.

“சீமான் பேசும் தூய தமிழ் ரொம்பப் பிடிக்கும். நிறைய ஆங்கில வார்த்தைகளுக்குப் பொருத்தமான, சுத்தமான தமிழ் வார்த்தைகளை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்,” என்று விகடன் ஊடகப் பேட்டியில் மனம் திறந்துள்ள கிரித்தி ஷெட்டி, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இயக்குநர் ஆவது குறித்து யோசிப்பாராம்.

குறிப்புச் சொற்கள்