நிறைய கிண்டல்கள், கடினமான தருணங்களைக் கடந்து வந்துள்ளேன்: கீர்த்தி சுரேஷ்

2 mins read
3d2955a1-9ce1-49d6-b225-51b1d85abb50
கீர்த்தி சுரேஷ். - படம்: ஊடகம்

நிறைய கிண்டல்கள், கடினமான தருணங்களைத் தாம் கடந்து வந்திருப்பதாகச் சொல்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

சமூக ஊடகங்களில் பரவும் எதிர்மறை கருத்துகள் குறித்து தாம் கவலைப்பட்டதில்லை என்றும் தனது போக்கில், ‘எனது வேலை, எனது பொறுப்பு என போய்க்கொண்டே இருப்பேன்’ என்றும் அண்மைய பதிவு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. அமெரிக்கா அல்லது துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றால் அங்கு பாதுகாப்பு அதிகம். அங்குள்ள சட்ட திட்டங்களே வேறு மாதிரி இருக்கும். அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவுதான். இது மாற வேண்டும்,” என்றும் குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இவர் திரைத்துறைக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். எனினும், கடலில் ஒரு துளிபோல தான் கற்றுக்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

“இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது. இப்போதுதான் திரையுலக வாழ்க்கை தொடங்குவதுபோல உணர்கிறேன். இன்னும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்ய ஆசைப்படுகிறேன்.

“இப்போது பெரிய பிரச்சினை என்னவென்றால் அது செயற்கை நுண்ணறிவுதான். ‘ஏஐ’ என்பது நமக்கு வரமாகவும் இருக்கும். சில சமயங்களில் அழிவை உண்டாக்கும் விஷயமாகவும் இருக்கும் எனத் தோன்றுகிறது.

“தொழில்நுட்பங்கள் மனிதர்கள் கண்டுபிடித்தவை. ஆனால், இன்று அவை நம்மையே மீறி எங்கேயோ போவதுபோல் தோன்றுகிறது.

“சமூக ஊடகப் பக்கங்களில் பார்க்கும்போது, ‘நான் இந்த மாதிரி உடையைப் போட்டிருந்தேனா’ என்று என்னையே யோசிக்க வைக்கும் அளவுக்கு எல்லாமே உண்மைபோல் மாற்றப்படுகிறது,” என்று கூறியுள்ளார் கீர்த்தி.

சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சுனில், ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’. நவம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் கீர்த்தி.

“அண்மையில், ஒரு படத்தின் பூசையில் நான் தப்பான கோணத்தில் காட்சியளிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பார்த்தேன். நான் அப்படியான ஒரு ‘போஸ்’ கொடுக்கவே இல்லை.

“உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. சிலருக்கு இதனால் என்ன லாபம் என்றும் தெரியவில்லை. இது மனத்தைக் காயப்படுத்துவதாக உள்ளது.

“ஒவ்வொரு முறையும் சமூக வலைத்தளப் பக்கங்களில் வரும் விஷயங்களைப் பார்த்தால் பயம் வரும். இன்று ஏஐ மீது பயம் வந்திருக்கிறது,” என்றும் தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

குறிப்புச் சொற்கள்